Showing posts with label குழந்தைகள். Show all posts
Showing posts with label குழந்தைகள். Show all posts

Thursday, October 31, 2013

மாசில்லா பூமிக்கு சத்தமில்லா தீபாவளி அவசியம்.



நண்பர்களே..

பண்டிகைகள் கொண்டாட்டங்கள் இல்லாத ஒரு தேசத்தைக் கற்பனை செய்து பாருங்கள்.ஒன்றுகூட அகப்படாது. பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் மனித சமூகம் தேவையின் பொருட்டு, தானே சிருஷ்டித்துக் கொண்டவையே. புராணப் பொய்மைகள் ஜோடிக்கப்பட்ட பின்னர் பண்டிகை தோற்றுவிக்கப்படவில்லை. மாறாக மக்கள் கொண்டாடிய பண்டிகைகளை மதங்கள் ஹைஜாக் செய்து அதற்கு புராண முலாம் பூசின. புனிதம் கற்பிக்கப்பட்டது.

இன்றைக்கும் தீபாவளி கும்பிட்டுவிட்டீர்களா எனக் கேட்பவர்களே அதிகம்.தீபாவளி கொண்டாடினீர்களா எனக் கேட்பவர்கள் மிகமிகச் சொற்பம்.

விழாக்களுக்கு பஞ்சமில்லாத இந்த காலகட்டத்தில் விழாக்கள் நல்லதுக்கா? கெட்டதுக்கா? என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

வசதியான வீடுகளில் கொண்டாடப்படும் விழாக்கள் பெருமளவில் அவர்களுக்கு உற்சாகத்தையும் புத்துணர்வையும் ஏற்படுத்துவதாக இருக்கின்றன. அதற்காக செய்யப்படும் சில ஏற்பாடுகள்தான் அவர்களுக்கு புதிதாக இருக்கும்.

ஏழ்மையான குடும்பங்களிலோ நிலைமை வேறு.. அந்த ஒரு நாள் மகிழ்ச்சிக்காக மாடாய் உழைப்பது, கடனை வாங்கிக் கொண்டாடுவது என சிக்கிச் சீரழிந்து மற்ற நாட்களின் மகிழ்ச்சியையும் சேர்த்துத்தொலைக்கும் கொடுமை! இதைப்பற்றி மேலும் விரிவாக நீங்களும் உங்கள் நண்பர்களும் விவாதித்துக் கொள்ளுங்கள்!

விழாக்கள் கொண்டாடுவதற்கு பல நேர்மறையான காரணங்கள் இருக்கின்றன. ஆனாலும் நமது கொண்டாட்ட முறைகள் இருக்கின்றனவே.. ஒவ்வொரு விழாக்களின்போதும் நாம் அதை முறைப்படுத்த வேண்டியிருக்கிறது. ஏனென்றால் நாம் சொல்லிக்கொள்வது போல 'அந்த ஒருநாள்' ஏற்படுத்தும் விளைவுகள் அன்றோடு போவதில்லை!

மகிழ்ச்சி என்ற பெயரில் நீங்கள் கொண்டாடிவிட்டுப் போய்விடுவீர்கள், தண்டனைகள் அனுபவிக்கப் போவது அடுத்த தலைமுறைக் குழந்தைகளும் அல்லவா?

எனவே நாம் இப்போது தீபாவளிக்காய்ச்சலில் இருப்பதால் அதுபற்றிச் சிந்திப்பது நல்லது.

"உனக்கு மகிழ்ச்சி தருவதெல்லாம் எனக்கும் மகிழ்ச்சியைத்தரும் என் சின்னஞ்சிறிய மகனே,ஆனாலும் வெடித்துச்சிதறும் வேட்டுக்களிலும்,சீறி ஒளிப்பிழம்பாகும் மத்தாப்புகளிலும் உன்னைப்போல் சில சிவகாசிச்சிறுசுகளின்,சிதைந்த கனவுகளும் சிறைப்பட்ட வாழ்வுமே தெரிவதனால்,வேட்டுக்களும் மத்தாப்புக்களும் வேண்டாம் மகனே"  பேனா மனோகரன். அவர்களின் கவிதையும் நினைத்து பார்க்க வேண்டிய தருனம் இது

நமது இன்றைய சமூகமானது தனித்தனிக் கட்டிடங்களாகவும் தனித்தனிக் கட்டிடங்கள் தனித்தனிக் குடும்பங்களாகவும் தனித்தனிக் குடும்பங்கள் தனித்தனி மனிதர்களாகவும் ஒரு ஆளுமையின் இருப்பு என்பது அனாதையாகிக் கொண்டே இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் சமூகக்கொண்டாட்டங்கள் பற்றி நாமெல்லாம் சிந்திக்கவும் விவாதிக்கவும் வேண்டியிருக்கிறது.

சமூகக் கொண்டாட்டங்கள் மூலம் ஒத்த கருத்துடைய/ ஒரே கட்டிடத்தில்/ஒரே பகுதியில் வாழக்கூடிய அல்லது சொந்த பந்தங்கள் அனைவரும் ஒன்றாகக்கூடி ஒரே இடத்தில் கொண்டாடமுடியும். இதனால் தனித்தனி ஏற்பாடுகள் தேவையில்லை. காணுமிடமெல்லாம் குப்பைகள் நிறையும் நிலையில்லை. குறிப்பிட்ட நேரம், ஒரே இடம் என்பதால் தேவையற்ற இரைச்சல், அலைச்சல், குழப்பங்கள் இல்லை. சிறப்பாக சூழல் மேலாண்மை செய்யமுடியும். மிகமுக்கியமாக எரிபொருள்/ஆற்றல் சிக்கனம். இதற்காக பள்ளி,கல்லூரிகள், விடுதிகள்,மருத்துவமனைகள் ஆகிய இடங்களிலிருந்து தூரமாய் உள்ள திறந்தவெளி மைதானங்களைத் தேர்வுசெய்வது நல்லது.

*தனியாகக் கொண்டாடுவதை இனியேனும் தவிர்ப்போம்!
*வெடி வெடிப்பதால், வெளிவரும் புகையால் பொதுமக்களுக்கு தேவையற்ற மன உளைச்சல், தலைவலி, சுவாசக்கோளாறு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் தோல் வியாதிகள் போன்றவற்றைத் தவிர்ப்போம்.

மேலும் அளவுக்கதிகமான நில மாசு காற்று மாசு ஒலி மாசு போன்றவற்றைத் தவிர்ப்போம்.

தேவையற்ற மின்நுகர்வைத் தவிர்ப்போம்

விளக்கெண்ணையைக் கண்டுபிடித்தவன் அதை சந்தோஷமாகப் பகிர்ந்துகொண்டு கொண்டாடிய நாளே தீபாவளி என்பார் அயோத்திதாசப் பண்டிதர். சமூக அறிவியல் ரீதியாக பண்டிகைகள் குறித்த ஆய்வும் புரிதலும் தேவைப்படுகிறது.மனிதநேயத்தையும் மகிழ்ச்சியையும் மேன்மைப்படுத்தும் பண்டிகைகள் மட்டுமே சடங்குத்தனமான இன்றையப் பண்டிகைகளை அப்புறப்படுத்தும்.

அது ஒற்றை நாளில் ஒற்றை அறிவிப்பில் வந்துவிடாது.இப்போதே அதற்கு முயற்சியைத் துவங்கினால் காலகதியில் அவை மக்கள் பண்டிகையாக முகிழ்க்கும்.

தீப ஒளி ஏற்றுவோம்.

*விழாக்களின் வடிவங்களை மாற்றுவோம்.
*தொடர்ந்து சிந்திப்போம்! பகிர்ந்து கொள்வோம்! செயல்படுவோம்!
*இது குறித்த உரையாடலைத் தொடங்குவோமே!

Wednesday, July 31, 2013

உலக தாய்ப்பால் வாரம் 2013


தாய்ப்பாலின் அவசியம்: 

WHO, UNICEF, WABA (World Alliance for Breastfeeding Action), IBFAN (International Baby Food Action Network போன்ற அமைப்புகள் சர்வதேச அளவில் தாய்ப்பால் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் காக பல பணிகளைச் செய்து வருகின்றன. 

இந்தியாவில் இதற்கெனவே ஒரு அமைப்பு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்றது. அதுதான் BPNI (Breastfeeding Promotion Network of India) இந்த அமைப்பு உலக தாய்ப்பால் வார நிகழ்வை 1992 முதல்இந்தியாவில் ஒருங்கிணைத்து வருகிறது.

தாய்ப்பால் தருவது, தாயின் உடல்நலனுக்கும் உகந்தது. குழந்தை பிறந்த முதல் அரை மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க தொடங்க வேண்டும். முதல் முறை கொடுக்கப்படும் பால், குழந்தை யின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கப்படுகிறது. குழந்தைக்கு தேவையான புரதங்கள் இதில் அடங்கியுள்ளன. குழந்தை பிறந்தது முதல், ஆறு மாதம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் எனவும், குழந்தையின் உடல்நிலையை பொறுத்து 2 வயது வரை தாய்ப்பால் வழங்க வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனமும் வலியுறுத்துகிறது. 

முழுமையான தாய்ப்பால் வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் 1.5 மில்லியன் குழந்தை மரணங்களைத் தவிர்க்க முடியும் (யுனிசெப்). தாய்ப்பால் கொடுக்கப்படாத குழந்தைகள், நோய்வாய்ப்படும் வாய்ப்பு அதிகம். குழந்தை மரணங்களும் தாய்ப்பால் தருவதால் தவிர்க்கப்படுகிறது. ஒவ்வாமை, காதுகளில் ஏற்படும் தொற்று போன்றவற்றிலிருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. குழந்தைகளின் பற்கள், நாக்கு உட்பட பேச பயன்படும் உறுப்புகள் வேகமாக வளர்ச்சியடைய தாய்ப்பால் தருவது அவசியம். குழந்தைக் கும்,தாய்க்கும் இடையேயான பிணைப்பு தாய்ப்பால் தருவதன் மூலம் அதிகரிக்கிறது. 

பாலூட்டும் தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோயின் ஆபத்து 50 % குறைகிறது. சரியான தாய்ப்பால் பெற்ற குழந்தை களின் நுண்ணறிவு பிற குழந்தைகளை விடவும் 8 புள்ளிகள் அதிகமெனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இது தவிர நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகளும் சில புள்ளி விபரங்களும் இருக்கின்றன. உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 6.9 மில்லியன் குழந்தைகள் இறக்கின்றனர். நாளொன்றுக்கு சுமார் 14000 குழந்தைகள் இறந்து கொண்டுதான் இருக்கின்றனர். சரியான முறையில் தாய்ப்பாலூட்டு வதன் மூலம் 8,30,000 குழந்தை இறப்புகளைத் தடுக்க முடியும். குழந்தை பிறந்த 1 மணி நேரத்தில் பாலூட்டுவதன் மூலம் 22% இறப்புகளையும் 24 மணி நேரத்திற்குள் பாலூட்டுவதன் மூலம் 16% இறப்புகளையும் தவிர்க்க இயலும்.

குழந்தை பிறந்தவுடன் 1 முறை பாலூட்டுவதும் 1 நாள் கழித்து 3 முறை பாலூட்டுவதும் சமமே. 6 மாதங்களுக்கு முழுமையான தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகள் நிமோனியாவில் இறப்பதற்கு 15 மடங்கும், வயிற்றுப் போக்கால் இறப்பதற்கு 11 மடங்கும் வாய்ப்புள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக் கின்றன. உலகில் 93 பில்லியன்/ மூன்றில் இரண்டு மடங்கு குழந்தை களுக்கு 6 மாதங்களுக்குள்ளாகவே தாய்ப்பால் தவிர்த்த செயற்கை உணவுகள் வழங்கப்படுகின்றன. குழந்தைகளுக்கான பால் வர்த்தகம் மட்டுமே உலக அளவில் 25 பில்லியன் டாலர் அளவிற்கு நடைபெறுகிறது. 

குழந்தை உணவுப்பொருள் தயாரிப்பு தொழில் வளர்ச்சியில் 31% இலக்கு நிர்ணயித்துள்ளனர். அவர்களின் முக்கிய வியாபாரச் சந்தையாக / இலக்காக இருப்பது நமது ஆசியக் கண்டமே.

தாய்ப்பால் வாரம்:

WABA அமைப்புதான் சர்வதேச அளவில் இந்த தாய்ப்பால் வாரம் நிகழ்வை ஒருங்கிணைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மையக்கருத்து வலியுறுத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான மையக் கருத்தாக தாய்ப்பாலுக்கு ஆதரவு: அன்னையருக்கு நெருக்கமாக. Breastfeeding Support: Closed to Mothers) என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிகழ்வை அனுசரிப்பதற்கான காரணங்கள் ஐந்து. 1. தாய்ப்பால் விழிப்புணர்வு குறித்த கவனத்தை ஈர்ப்பது 2. பேறுகாலப் பெண்களுக்கு அனுபவ தாய்மார்களின் ஆலோசனைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவது. பேறுகால பெண்களுக்கான ஆலோசனை முகாம்களை நடத்துவது. 3. தாய்ப்பால் ஆதரிப்போரை பயிற்சிகள் மூலம் மேம்படுத்துவது 4. பேறுகால பெண்களுக்கு ஆதர வாக உள்ளூர் சமூக ஆதரவைத் திரட்டுவது 5. பேறுகாலப் பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்க சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 10 படிநிலைகளைப் பின்பற்ற அரசுகளை வலியுறுத்துவது. முழுமையாக தாய்ப்பால் வழங்குவோர் சராசரியை உயர்த்தவும் அரசுகளை வலியுறுத்துவது.

உலக சுகாதார நிறுவனம் & யுனிசெப் தாய்ப்பால் ஆதரவு, விழிப்புணர்வுக்காக அறிவித்துள்ள பத்து படிநிலைகள்:

1. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை எழுத்துப்பூர்வமான தகவல றிக்கைகளின் மூலமாக அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் தொடர்ந்து நினைவூட்டப்பட வேண்டும்.

2. தாய்ப்பால் ஊட்டச்செய்வதற்கான பணிகளைச் செய்வதற்கான முறையான பயிற்சி சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

3. அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் தாய்ப்பாலின் அவசியம் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.

4. பிரசவம் நிகழ்ந்த அரை மணிநேரத்திற்குள் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டத் தொடங்கிட உதவ வேண்டும்.

5. குழந்தையிடமிருந்து தனித்திருந்தாலும் தாய்மார்களுக்கு பாலூட்டலுக்கான பயிற்சியளித்தல் வேண்டும்.

6. மருத்துவ உதவிக்காக மட்டும் அன்றி வேறெவ்வித காரணத் திற்காகவும் குழந்தைக்கு தாய்ப்பால் தவிர்த்த திட> திரவ உணவுகளைக் கொடுக்கக் கூடாது.

7. தாயும் சேயும் ஒன்றாக இருக்க செய்தல் வேண்டும்.

8. தேவைக்கேற்ப தாய்ப்பாலூட்ட ஊக்குவிக்க வேண்டும் 

9. பால் பாட்டில்கள் தடை செய்வது

10. தாய்ப்பால் ஆதரவு குழுக்கள் அமைத்து மருத்துவமனை, கிளினிக்-ல் இருந்து சென்ற பின்பும் தாய்மார்களுக்கு ஆலோசனை, ஆதரவு அளித்திட வேண்டும்.

மேலும் பேறுகாலப் பெண்கள் குழந்தைகளுக்கு முழுமையாக தாய்ப்பாலூட்ட ஐந்து புறச்சூழல் ஆதரவு தேவை எனவும் றுஹக்ஷஹ அமைப்பு வலியுறுத்துகிறது. அதாவது 1. குடும்ப, சமூக ஆதரவு, 2. பணியிடம், சுற்றுச்சூழல் 3. அவசரகாலச்சூழலிலும் உரிய ஏற்பாடுகள் (உம்.உத்தரகாண்ட் வெள்ளப்பாதிப்பு போன்ற பேரழிவு நேரங்களில் கூட) 4. சுகாதார நிலைமை 5.அரசுத்தரப்பு (ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, சட்ட திட்டங்கள் வகுப்பதில்)
தாய்ப்பால் வழங்குவதில் என்ன பிரச்சினை?:
தாய்ப்பால் வழங்குவதை அப்பெண்ணின் சமூக, பண்பாடு,கலாச்சார, பொருளாதார,கல்விப் பின்புலங்களும் தீர்மானிக்கின்றன என்பதை பல்வேறு ஆய்வுகளும் கூறுகின்றன. முக்கியமாக எங்கும் எதிலும் லாபம் ஒன்றே குறியெனத் திரியும் பன்னாட்டு, உள்நாட்டு
பகாசுரக் கம்பெனிகளின் அநியாயம் தாங்கமுடியாத அநியாயமாக இருக்கிறது. தாய்ப்பாலை, தாய்-சேய் பாசத்தை, குழந்தை வளர்ப்பை மூலதனமாகக் கொண்டு பல்வேறு கம்பெனிகள் தமது தயாரிப்பு களைச் சந்தைக்கு கொண்டு வருகின்றன. தாய்ப்பால் தனியுண வாக குறைந்த பட்சம் 6 மாதங்கள் வழங்குவதில் கூட உலக அளவில் திருப்திகரமான சராசரி நிலையை அடைய முடியாததற்கு இந்தக் கம்பெனிகளின் வியாபார தில்லுமுல்லுகளும் தந்திரங்களுமே பெருங்காரணமாய் இருக்கின்றன.
இவர்களைக் கட்டுப்படுத்தவே IBFAN என்ற அமைப்பின் முயற்சியால் உலக சுகாதார நிறூவனம், யுனிசெப் ஆகியவை 1981ல் பால்துணைப்பொருட்கள், சந்தைப்படுத்துதலுக்கான சர்வதேச விதிமுறைகளை (International Code of Marketing Breastmilk Substitute) வகுத்துள்ளன.

பால் துணைப்பொருட்கள், பால் பாட்டில்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களை முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு விளம்பரங்கள் செய்வது, பொருட்களை பிரபலப் படுத்தும் பொருட்டு பரிசாகத் தருவது, சாம்பிள்-ஆகத் தருவது,இதற்காக மருத்துவமனை மற்றும் சுகாதார கட்டமைப்பு வசதிகள், மருத்துவர்கள், பணியாளர்களைப் பயன்படுத்துவது, பொருட்களில் குழந்தையுடன் கூடிய தாய்மார்களின் படங்களைப் பயன்படுத் துவது, தாய்ப்பாலின் மகத்துவத்தைக் குறைக்கும் வகையில் வாசகங் களை அச்சிடுவது, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகளைக் “கவனிப்பது”, நன்கொடை வழங்குவது, கல்வி சார்ந்த பிற செயல்பாடுகளுக்கான அச்சு, காட்சி ஊடகங் களை நேரடியாக அல்லது மறைமுகமாகப் பயன்படுத்துவது, மருத்து வர்களுக்கு சன்மானம் கொடுப்பது, அவர்களின் உயர்கல்வி, ஆராய்ச்சிகளுக்கு நிதியுதவி செய்வது ஆகியவை தடைசெய்யப் படுகின்றன.

சரி இந்தியாவின் நிலைமை?

IBFAN- (ஆசியா) அமைப்பால் தாய்ப்பால் வழங்குவதில் உள்ள முன்னேற்றம், கொள்கை ரீதியான பிரச்சினைகள், கள நிலைமைகளை ஆசிய அளவில் 50 நாடுகளில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படுகிறது. 2012-ல் வெளியான WBTI (World Breastfeeding Trends Initiative) அறிக்கை நம் தாய்த் திரு நாட்டைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.. 15 அம்சங் களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், இந்தியாவில் இருக்கின்ற மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளைத் திறம்பட ஒருங்கிணைப்பதில் பின்னடைவு, IYCF (Infant and Young Child Feeding) குறித்த தேசிய வழிகாட்டு நெறிமுறைகளை கீழ்மட்ட அளவுகளில் கொண்டுசெல்வதில் பின்னடைவு, உருவாக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளும் ஒதுக்கப்படுகின்ற நிதி அளவினைக் கருத்தில் கொள்ளவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

குழந்தைகளுக்கு முழுமையான தாய்ப்பால் கிடைப்பதற்கான சர்வதேச பத்து படிநிலைகளை நடைமுறைப்படுத்துவதில் போதிய அக்கறை காட்டவில்லை. BFH (Baby Friendly Hospital) அமைப்பை உருவாக்குவதில் 2005 முதல் எவ்விதத்திலும் முன்னேற்றம் காணப் படவில்லை. (உலக அளவில் 156 நாடுகளில் 20,000 மருத்துவ மனைகள் மட்டுமே. BFH அமைப்பை 82 சதவீதம் மகப்பேறு மருத்துவமனைகளில் நிறுவிய உலகின் முதல் மாநிலமாக கேரளா (இந்தியா) வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. ஆனாலும் தற்போதும் இந்தியாவில் 10 சதவீதம் மருத்துவமனைகள் தான். கியூபாவில் 87 சதவீதம், சீனாவில் ஊரகப்பகுதிகளில் 68ரூ நகர்ப்பகுதிகளில் 48 சதவீதம் என 6000 மருத்துவமனைகள்- UNICEF & StC)

IMS -2003 சட்டத்தை முழுமையாக, வலுவாக கொண்டு செல்ல தேவையான கட்டமைப்புகளை உருவாக்கவில்லை. சட்டத்தை மீறு பவர்கள் குறித்த நடவடிக்கை எடுக்க மாவட்ட, மாநில அளவுகளில் வலுவான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. சட்டம் நடைமுறைப் படுத்தப் படுவதைக் கண்காணிக்க பயிற்சி பெற்ற உரிய அலுவலர்கள் இல்லை.இச்சட்டம் குறித்து மக்களிடையே மிகமிகக் குறைந்த அளவே விழிப்புணர்வு உள்ளது. ((WBTI)
(இந்தியாவில் இளம்குழந்தைகளுக்கான பால் துணைப் (பதிலி) பொருட்கள், உணவு மற்றும் பால்பாட்டில்கள் தயாரிப்பு, விநியோக ஒழுங்குமுறைச்சட்டம் (IMS ACT-1993) கொண்டு வரப்பட்டது. 2003ல் அச்சட்டத்திற்கு (-Infant Milk Substitute, Feeding Bottles and Infant Foods (Regulation of Production, Supply and Distribution) Amendment Act, 2003) வலுகூட்டும் பொருட்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் இளம்தாய்மார்களை குறிவைத்து செய்யப்படும் நேரடி மற்றும் மறைமுக விளம்பரங்கள் தடை செய்யப் பட்டன.

பிறந்த 6 மாதங்களுக்குள் பகுதியாகவோ, முழுமையாகவோ தாய்ப்பாலுக்கு மாற்றாக முன்வைக்கப்படும் பால் துணைபொருட்கள்
(Lactogen-1, Lactogen-2, Nestogen-1, Nestogen2, Lactodex- 1, Lactodex - 2, Amul Spray, Zerolac, Dexolac, ProSoyal , Simyl-MCT, Similac Neosure போன்றவை), பால் பாட்டில்கள்: Bonny Baby, Hello Baby, Wipro போன்ற அனைத்து வகைக் கம்பெனிகளின் தயாரிப்புகளும்... உணவுகள்: 6 மாதம் முதல் 2 வயது வரையிலான குழந்தை களுக்கான உணவுகளாக முன்வைக்கப்படும் Nestum,Cerelac, Farex, Weano, Veelac, Infacare, First Food, Dexrice, Easum, Junior Horlicks, Growing up milk, health drinks போன்றவையும் இச் சட்ட வரையறைக்குள் வருகின்றன. பால்துணைப்பொருட்கள் சந்தைப் படுத்துதலுக்கான சர்வதேச விதிமுறைகளுள் ((International Code of Marketing Breastmilk Substitute) பல சரத்துகள் இச்சட்டத்திலும் பிரதிபலிக்கின்றன.)
மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணிமுன் பயிற்சி போது மானதாக இல்லை. அங்கன்வாடி, ANM, ASHA பணியாளர்களுக் கான பயிற்சியில் IYCF குறித்த கருத்துகள் இடம்பெறவே இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

நமது இந்தியாவில் ஆண்டுதோறும் 26 மில்லியன் குழந்தைகள் பிறக்கின்றனர் (NFHS -3). அதில் 25 சதவீதம் குழந்தைகளுக்கு மட்டுமே பிறந்த 1 மணி நேரத்தில் தாய்ப்பால் வழங்கப்படுகிறது. 20 மில்லியன் குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு மட்டும் கூட முழுமையாக தாய்ப்பால் உணவு கிடைப்பதில்லை. 13 மில்லியன் குழந்தைகளுக்கு 6-9 மாதங்களில் தாய்ப்பாலுடன் சரியான இணை உணவுகள் கிடைக்கவில்லை. ஆறு மாதங்களுக்கு முழுமையான தாய்ப்பால் கிடைப்பதில் கடந்த 20 ஆண்டுகளாக பெரிய அளவில் மாற்றம் ஏதுமில்லை. 20 % குழந்தைகள் மட்டுமே ஆறு மாதங்களுக் குப் பிறகும் அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் பெறுகின் றனர். மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் மட்டுமே அங்கன்வாடிப் பணியாளர்களின் சேவையைப் பெறுகின்றனர். 

நான்கில் ஒரு பங்கு குழந்தைகள் மட்டுமே ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத் தின் கீழ் சத்துணவு பெறுகின்றனர். 18 சதவீதம் குழந்தைகள் மட்டுமே அங்கன்வாடி மையங்களில் எடை பார்த்துள்ளனர்.

இந்தியா பாரம்பரியமாகவே தாய்ப்பாலுக்கு சிறப்பான இடம் அளிக்கும் நாடு. ஓரளவு முன்னேற்றம் தெரிகிறது. தாய்ப்பால் வழங்கும் பெண்களுக்கு சரியான தகவல்கள், வீடு, பணிபுரியும் இடங்களில் உரிய ஏற்பாடு, மகப்பேறு விடுப்பு, குடும்ப உறுப்பினர் களின் ஒத்துழைப்பு இருக்கும்பட்சத்தில் இந்நிலை மேலும் உயரும் எனவும் அறிக்கை தெரிவிக்கிறது. 40.5 சதவீதம் பெண்கள் பிறந்த உட னேயே தாய்ப்பால் வழங்குகின்றனர். 46.8 சதவீதம் பெண்கள் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் வழங்குகின்றனர். அதிகபட்சமாக 24.4 மாதங்கள் தாய்ப்பால் வழங்கப்படுகிறது. 12.5 சதவீதம் பெண்கள் பாட்டில் பால் கொடுக்கின்றனர். 57.1 சதவீதம் பெண்கள் தாய்ப்பால் தவிர்த்த உணவுகளைக் கொடுக்கின்றனர்.

(WBTI ) மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகளுக்குக் கூட முழுமையான தாய்ப்பால் (6 மாதங்கள்) வழங்க இயலாத பத்து நாடுகளில் இந்தியா வும் ஒன்று. (தாய்ப்பால் குறித்த சர்வதேச மாநாடு-2012 அறிக்கை யில் யுனிசெப்)

இந்தியாவில் 2010ல் உரிய நாட்களுக்கு முன்னதாகவே 13 சத வீதம் குழந்தைகள் பிறப்பதாகவும் 20% குழந்தைகள் உயரத்திற்கு ஏற்ற எடையில்லாமலும் 47.9 சதவீதம் குழந்தைகள் வயதிற்கேற்ற வளர்ச்சியில்லாமலும் இருப்பதாகவும் கூறுகிறது உலக சுகாதார அறிக்கை-2013. 

சரி, மேற்கண்ட ஆய்விற்கு வருவோம். WBTI ஆய்வில் கொள்கை மற்றும் திட்டங்கள் சார்ந்த 10 அம்சங்களில் 43/100 மதிப் பெண்களும் குழந்தைகளுக்கு உணகூட்டுதல் சார்ந்த 5 அம்சங் களில் 31/50 மதிப்பெண்களும் ஆக மொத்தம் இந்தியா 74/150 மதிப் பெண்கள் பெற்று ஊ கிரேடில் இருக்கிறது. இருந்தபோதிலும் 2005, 2008 ஆம் ஆண்டுகளை ஒப்பிடும்போது 5 மதிப்பெண்கள் அதிக மாகவே பெற்றிருக்கிறது.
இதுவரை போடப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்களில் கடந்த 10, 11 மற்றும் 12வது ஐந்தாண்டுத் திட்டங்களில் தான் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் தொடர்பான விஷயங்களில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்திற்காக 1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதம் ஆக உயர்த்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்வி, மருத்துவம், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கு வதில் மத்திய மாநில அரசுகளுக்கு இருக்கின்ற இருக்கின்ற பாய்ச்சல் வேகம் , இதுபோன்ற செயல்பாடுகளில் இருந்தால் மக்கள் நலம் பெறுவர். திறன் மிக்க குடிமக்களாய்த் திகழ்வர். உழைப்பு பெருகும். உற்பத்தி பெருகும். பொருளாதார வளர்ச்சியால் நாடு நலம் பெறும்.! வளம் பெறும்..!

தேனி சுந்தர், விஞ்ஞான சிறகு

Sunday, February 12, 2012

முட்களாக மாற்றப்படும் பூக்கள்



தமிழ்சமூகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அன்றாட நிகழ்வாகிவிட்டன. ஆனால் சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் வகுப்பறை யிலேயே ஆசிரியை ஒருவரை ஒன்பதாவது வகுப்பு மாணவன் ஒருவன் கொடூரமாக குத்திக் கொலை செய்துள்ளது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இது ஒரு தனிமனித விரோத குரோதம் சார்ந்த குற்றம் அல்ல. இந்தப் படுகொலை இன்றைய சமூக அமைப்பு, கல்விச்சூழல், பாடத்திட்டம், ஆசிரியர்- மாணவர் உறவு, பெற்றோர் - பிள்ளைகள் உறவு என பல்வேறு தளங்களில் ஆயிரமாயிரம் கேள்விகளை எழுப்புகிறது. 

கொலை செய்யப்பட்ட ஆசிரியை உமா மகேஸ்வரி கனிவானவர். அதேநேரத்தில் கண்டிப்பானவர் என்றும் அனைத்து மாணவர்களிடமும் அன்போடு பழகக்கூடியவர் என்றும் சக ஆசிரியைகள் கூறியுள்ளனர். கொலை செய்த மாணவன் நல்ல பழக்கவழக்கங்களைக் கொண் டிருந்தவன்தான்.

குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட வேண்டியது இன்றைய பாடத்திட்டமும்தான். ஒரே மாதிரியான கல்விமுறை, பாடத்திட்டம் வேண்டும் என்பதற்காக இந்திய மாணவர் சங்கம் நீண்ட நெடுங்காலமாகப் போராடி வருகிறது. சமூக பொறுப்புணர்வுள்ள ஆசிரியர் சங்கங்களும் இதே கோரிக்கையை முன்வைக்கின்றன. இதன் ஒரு பகுதிதான் சமச்சீர்கல்வி. 

ஆனால், நவீன தாராளமயமாக்கல் சூழலில் கல்வி வணிகமயமாக்கப்பட்டுவிட்டது. எந்த அளவுக்கு கனமான புத்தகங்களை மாணவர்கள் சுமந்து செல்கிறார்களோ அதுவே அறிவின் அடையாளம் என்று சித்தரிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் மாணவர்களை கசக்கிப்பிழி கின்றன. மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விகிதம் மட்டும் அளவுகோலாக முன்வைக்கப்படுகிறது. இதே சித்ரவதைக்கு ஆசிரிய சமூகமும் உள் ளாக்கப்படுகிறது. 

இதனால் ஏற்பட்ட மன அழுத்தம்தான் ஒரு கள்ளமறியா பிஞ்சை கொலைகாரனாக மாற்றியுள்ளது. இந்தி மொழிப்பாடம் தமக்கு கொஞ்சம் கூட புரியவில்லை என்றும், இது குறித்து ஆசி ரியை தொடர்ந்து கண்டித்ததால் கொலை செய் யும் முடிவுக்கு வந்ததாகவும் அந்த மாணவன் கூறியுள்ளான். ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் தாய்மொழிவழிக் கல்விக்குப் பதிலாக பல மொழிகளை கற்பிப்பதாக தனியார் பள்ளிகள் விரிக்கும் வர்த்தக வலையில் விழுந்ததால் ஏற் பட்ட விபரீத விளைவுகளில் இதுவும் ஒன்று.

மறுபுறத்தில், இளைய தலைமுறையை நஞ் சாக மாற்றுவதில் திரைப்படம், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும் முக்கியப் பங்கு வகிக் கின்றன. மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சமூகப் பொறுப்பற்ற பொறுக்கிகளாகவே ஊடகங் கள் சித்தரிக்கின்றன. அண்மையில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய கொலைவெறி பாடல் இதற்கு ஒரு உதாரணம்.

மறுபுறத்தில் ஆசிரியர் - மாணவர் உறவில் பாடத்திட்டத்தின் சுமை இயல்பான உறவை கெடுத்து வைத்திருக்கிறது. பெற்றோர் - பிள்ளைகள் உறவும் சீரானதாக இல்லை. மதிப்பெண் மட்டுமே ஒரே தகுதியாகக் கருதும் அள வுக்கு பெற்றோர்களை மாற்றியுள்ளது இன்றைய சமூகக் கல்விமுறை. 

சென்னைப் பள்ளியில் நடைபெற்ற சம்பவம் இன்றைய சமூகத்திற்கு ஒரு பாடம். இந்தக் கோணத்தில் இதை உணர்ந்து, தீர்வு காண்பதே எதிர்காலத்தில் இளம் கொலையாளி உருவாவதைத் தடுக்கும்.

Wednesday, January 11, 2012

குழந்தைகளின் கல்விக்கு வெறும் 1 விழுக்காடுதானா?

குழந்தைகளின் அடிப்படைக் கல்வி, உலக அவையத்து இந்தியா முந்தியிருக்க மிக மிக முக்கியத் தேவை. ஆனால், இந்தியாவில் மிகவும் பிந்தியிருப்பது குழந்தைகளின் கல்விக்கு அளிக் கப்படும் முக்கியத்துவம்தான். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்காக ஒதுக்கப்படும் அரசு செலவினம் ஒருபோதும் அதிகபட்சமாக 4.3 விழுக்காட்டிற்கு மேல் உயர்ந்ததில்லை. இது உயர்கல்வி உள்ளிட்ட அனைத்துத்துறைகளுக்குமான மொத்தத் தொகை. அடிப்படையான தொடக்கக்கல்விக் கான நிதி மிகமிகக் குறைவு.

இந்தப் பின்னணியில் குழந்தைகளின் கல் விக்காக என மத்திய-மாநில அரசுகள் ஒதுக்கு கிற நிதியிலும் கூட, நேரடியாக அவர்களுடைய கல்விக்கு என ஒதுக்கப்படுவது வெறும் 6 விழுக் காடுதான் என்று அண்மையில் மேற்கொள்ளப் பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. பாடப்புத்தகங் கள், சீருடைகள், பள்ளியிலிருந்து பாதியில் விலகுகிற குழந்தைகளின் பிரச்சனைகள் இவற் றுக்காக ஒதுக்கப்படுகிற நிதி ஏற்பாடுகள் அந்த 6 விழுக்காட்டிற்குள் அடங்குகிறது. 78 விழுக் காடு வரையில் ஆசிரியர்களின் ஊதியத்திற்கும், 14 விழுக்காடு நிதி பள்ளிகளின் உள்கட்டுமான செலவுகளுக்காகவும் செல்கின்றன. கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு ஒதுக்கப்படும் நிதியோ வெறும் 1 விழுக்காடுதான்!

2009 - 2010 கல்வியாண்டுக் கட்டத்தில் பல் வேறு மாநிலங்களின் பட்ஜெட்டுகளில் தொடக் கக் கல்விக்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றிய அந்த அறிக்கை, இந்த ஒதுக்கீடுகளின் உண்மையான இலக்காகிய குழந்தைகள் எந்த அளவுக்குப் பயனடைந்திருக்கிறார்கள் என ஆராய்கிறது. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மாநிலங் களில், தொடக்கக்கல்விக்கான நிதி ஒதுக்கீடு, பணக்கணக்கின்படி கணிசமாக அதிகரிக்கப் பட்டிருக்கிறது. 2007-08ம் ஆண்டில் ரூ.68,710 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2009-10ல் அது ரூ.97,255 கோடியாக உயர்த்தப்பட்டது. மாநிலத் துக்கு மாநிலம் மாறுபட்ட இதில் சில வேறுபாடு கள் இருக்கின்றன என்றாலும், ஒட்டுமொத்த மாகப் பார்க்கிறபோது குழந்தைகளின் நேரடிக் கல்விக்கு மிகச் சொற்பமான தொகைதான் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஆசிரியர்களின் ஊதியம் அவர்களது நெடும் போராட்டத்தின் பலனாகக் கிடைத்திருப்பது. அதே போல் கூரையில்லாப் பள்ளிக்கூடங்கள் இன்னும் தொடர்கிற நிலையில் உள்கட்டுமானங் களுக்காக, இன்னும் பல மடங்கு நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. ஆனால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் எதற்காக? குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைத்தாக வேண்டும் என்பதற் காகத்தானே? அதற்கான நேரடி நிதியை 1 விழுக்காடு அளவுக்குக் குறைத்துவிட்டு, மற்ற செலவினங்களை மட்டும் அதிகரிப்பதால் என்ன பயன்? ஆசிரியர்களுக்கான நிதி ஒதுக் கீடு குறைவாக உள்ள மாநிலங்களும் இருக்கின் றன. அதற்குக் காரணம் நிரந்தர ஆசிரியர்களுக்கு பதிலாக, கணிசமான எண்ணிக்கையில் ஒப் பந்த ஆசிரியர்கள் குறைந்த ஊதியத்தில் நியமிக் கப்பட்டிருப்பதுதான்!

கட்டாய இலவசக் கல்விச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு குழந்தை களுக்கு நேரடியாக பலனளிக்கும் நிதி குறை வாக இருப்பது ஒருவகையில் அந்தச் சட்டத் தையே மீறுவதாகிவிடும். வசதியுள்ளவர்கள் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்க, அரசுப்பள்ளிகளில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கான தரமான கல்வி உரிமையை மறுப்பதாகிவிடும். கல்வியில் ஏற்றத்தாழ்வை ஒழிக்க, போதுமான நிதி ஒதுக்கீட்டிற்கான போராட்டம் வலுப்பெற வேண்டியதன் அவசியத் தைத்தான் இந்த ஆய்வு புலப்படுத்துகிறது.

Tuesday, November 29, 2011

கல்வி குற்றத்தில் சிறந்த தமிழ்நாடு!


சாலை விபத்து, தற்கொலைகள், கள்ள நோட்டுப் புழக்கம், மாணவர்கள் தற்கொலை, போலி பாஸ்போர்ட், முதியோர்கள் பாதுகாப்பு எனப் பல குற்றங்களில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது தமிழ்நாடு.

அடுத்த வரியைப் படித்து அதிர்ச்சி அடைய வேண்டாம். சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் பல குற்றங்களில் தமிழகம் முதல் மாநிலமாக விளங்குகிறது. சாலை விபத்து, தற்கொலைகள், கள்ள நோட்டுப் புழக்கம், மாணவர்கள் தற்கொலை, போலி பாஸ்போர்ட், முதியோர்கள் பாதுகாப்பு என்று பல வகையான குற்றங்களில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறோம் நாம். தேசியக் குற்றப் பதிவுத்துறை (‡National Crime Records Bureau - NCRB) சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் இந்தத் தகவல்களைத்  தெரிவிக்கின்றன.

சாலை, ரயில் விபத்துகள்

சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருப்பது தமிழகம். 15 ஆயிரத்து 409 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்த இடம் ஆந்திராவிற்கு (15,337 பேர்), அடுத்து உத்தரப்பிரதேசத்திற்கும் மகாராஷ்டிராவிற்கும்.

நாடு முழுக்க கடந்த 2010ம் ஆண்டு 1.61 லட்சம் விபத்துகள் பதிவாகியுள்ளன. அதாவது, நாட்டில் ஒவ்வொரு நாளும் சாலையில், ரயில் பாதையில் 18 பேர் இறக்கிறார்கள். சாலை விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் (1.61 லட்சம் விபத்துகளில் 1.34 லட்சம் விபத்துகள் சாலை விபத்துகள்). இதுவரை இந்தியாவிலேயே இல்லாத அளவிற்குக் கடந்த ஆண்டு விபத்துகள் நடந்துள்ளன.

இதற்குப் பெருகி வரும் வாகனங்கள் ஒரு காரணமாக கூறப்படுகிறது. 2008ம் ஆண்டில் இருந்ததைவிட 28 சதவீதம் வாகனப் பதிவு அதிகரித்துள்ளது. 20 சதவீதச் சாலை விபத்துகள் இரு சக்கர வாகனங்களாலும் 28 ஆயிரத்து 800 விபத்துகள் கனரக வாகனங்கள், டிரக்குகளாலும் நடந்துள்ளன.

தற்கொலைகள்
வேலையின்மை, வறுமை, கடன் தொல்லை, வரதட்சணைக்கொடுமை போன்றவற்றால் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 21 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். 2010ம் ஆண்டு இந்தியாவில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 599 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதிலும் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. அந்த ஆண்டு தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்டவர்கள் 16,561 பேர். நாட்டில் நடந்த தற்கொலைகளில் 57.2 சதவீதம் தமிழகம், மேற்கு வங்காளம் (16,037), மகாராஷ்டிரா (15,916), ஆந்திரா (15,901), கர்நாடகா (12,651) ஆகிய ஐந்து மாநிலங்களில் நடந்துள்ளன. இதில் திகைக்க வைக்கும் விஷயம் என்னவென்றால், தற்கொலை செய்துகொள்பவர்களில் 65.8 சதவீதம் பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்!

முதியோர் பாதுகாப்பு


தமிழகத்தில் முதியோர்கள் பாதுகாப்பாக வாழ்கிறார்களா? இல்லை என்றுதான் உதட்டைப் பிதுக்கத் தோன்றுகிறது. ஆனால், இதில் ஒரு சின்ன ஆறுதல். ஆந்திராவையும் உத்தரப்பிரதேசத்தையும் அடுத்து, முதியோர்களுக்கு பாதுகாப்பு இல்லாத மூன்றாவது மாநிலமாகத்தான் இருக்கிறது தமிழகம்.

ஆனால், அதிர வைக்கும் விஷயம் என்னவென்றால் வயதான பெண்களின் பாதுகாப்பு நிலை கவலைக்குரிய வகையில் மோசமடைந்திருக்கிறது. 50 வயதிற்கு மேற்பட்ட 227 பெண்கள் 2010ம் ஆண்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டு 93 பெண்களும் கொலை செய்யப்பட்டிருந்தனர். 2010ம் ஆண்டு 50 வயதைத் தாண்டிய 100 ஆண்களும் 2009ம் ஆண்டு 246 ஆண்களும் கொலையுண்டிருந்தனர்.

‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பின் தொலைபேசி எண்ணுக்கு (1253) தினமும் 10க்கும் அதிகமான அழைப்புகள் உதவி கேட்டு வருவதாகவும் அதில் இரண்டு முதியவர்கள் தங்களுக்கு பாதுகாப்புக் கேட்பதாகவும் கூறுகிறார்கள். பெரும்பாலும் வயதானவர்கள் தனியாகவே வாழ்கிறார்கள். பணம், நகை என்று கொள்ளையடிப்பவர்களின் இலக்கு இவர்கள் மேலேயே இருக்கிறது. காவல்துறையின் தகவல்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 54 முதியவர்கள் மாநிலத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும 10 படுகொலைகள் நடந்துள்ளன.

போலி பாஸ்போர்ட்

போலி பாஸ்போர்ட், விசாவுடன் பறப்பதற்கான வசதியான இடமாகவே தமிழக விமான நிலையங்கள் இருப்பதாக தேசியக் குற்றப் பதிவுத்துறையின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. நாடு முழுவதும் பதிவான இதுபோன்ற 937 வழக்குகளில் 398 பேர் தமிழகத்தில் பிடிபட்டுள்ளனர். தொடர்ந்து கேரளாவில் 209 பேரும் மேற்கு வங்களத்தில் 102, மகாராஷ்டிரா 69, ஆந்திரா 68 வழக்குகள் பதிவாகி உள்ளன. மற்ற மாநிலங்களில் பெரும்பாலும் ஒரு வழக்குகூட இல்லை அல்லது 50க்கும் குறைவான வழக்குகளே பதிவாகியுள்ளன. இந்தியாவிலேயே பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் அதிகம் நடக்கும் நகரம் கோவை. தொடர்ந்து திருச்சி, திருவனந்தபுரம் உள்ளது. இதனாலேயேசென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் கூறுகிறார்கள்.

தமிழகத்திலிருந்து தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள் என்று சுமார் 40 இடங்களுக்கு நேரடி விமான சேவை இருப்பது, அதிகப் பயணிகள் போன்ற காரணங்கள் போலி பாஸ்போர்ட்டுக்கு கூறப்படுகிறது. சென்னையில்தான் அதிக அளவில் ஏஜெண்ட்கள் இருக்கிறார்கள். மொத்தம் உள்ள 243 பேரில் 197 பதிவு பெற்ற ஏஜெண்ட்கள் உள்ளனர். ஆயிரக்கணக்கில் போலி ஏஜெண்ட்களும் இருக்கிறார்கள். சமீபத்தில் ஐ.நா. அமைப்பின் போதைக் குற்றத்தடுப்புப் பிரிவு வெளியிட்ட ஆவில், போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக இலங்கைத் தமிழர்கள் 23 சதவீதம் பேர் சென்னை சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்துவதாகக் கூறுகிறது.

மாணவர்கள் தற்கொலை

கடந்த 4 ஆண்டுகளில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது 26 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னை, மும்பை, தில்லி போன்ற பெருநகரங்களில்தான் பெரும்பாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதிலும் சென்னைதான் முன்னிலை. சென்னையில் 170 மாணவர்கள், தில்லியில் 133, மும்பையில் 115 மாணவர்களும் 2010ல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.

2009ல் வெறும் 0.9 சதவீதமாக இருந்த முதுநிலை பட்டதாரி மாணவர்களின் தற்கொலை சதவீதம் அடுத்த ஆண்டு 2.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. முதல் ரேங்க் வாங்க வேண்டும், போட்டி மனப்பான்மை, அளவுக்கு அதிகமான கல்விச் சுமை இவையே இதற்குக் காரணம் என உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.

கள்ளநோட்டு

2010ல் சென்னையில் மட்டும் 72 கள்ள நோட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு முந்தைய ஆண்டு வெறும் 42 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. கள்ள நோட்டுகள் அதிகமாகப் புழங்கும் இடம் மும்பை. கிட்டத்தட்ட இந்த விஷயத்தில் மும்பையை (76) நெருங்கிவிட்டோம் நாம். சென்னையை அடுத்து வேலூரிலும் மதுரையிலும் தலா 31 கள்ள நோட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கடுத்த நகரம் கோயம்புத்தூர் (30). பொதுவாகத் தமிழகத்தில் பெருநகரங்களில்தான் கள்ள நோட்டு அதிகம் புழங்குவதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

132 சேக் போஸ்ட்களில் கண்கொத்திப் பாம்பாகப் பார்த்து, கள்ள நோட்டு கடத்துபவர்களைப் பிடித்தாலும் இதன் பின்னணியிலிருந்து செயல்படுபவர்கள் யார் என்பது இன்னும் புரியாத புதிராகவே இருப்பதாகப் போலீஸ் கூறுகிறது. மும்பை, ஜார்கண்ட், மேற்கு வங்காளம் போன்ற இடங்களில் இருந்துதான் இவர்கள் செயல்படுகிறார்கள். மாவட்டங்களில் இருக்கும் வேலையில்லாத இளைஞர்களை கள்ள நோட்டைப் புழங்க விடுவதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் காவல்துறையின் அனுமானம்.

அடையாளம் தெரியாத உடல்கள்

மாநிலம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் ஏழு அடையாளம் தெரியாத உடல்கள் வருவதாகப் புள்ளி விவரம் கூறுகிறது. கடந்த ஆண்டு மட்டும் 2 ஆயிரத்து 795 உடல்கள் வந்திருக்கின்றன. தென்னிந்தியாவில் தமிழகத்தில்தான் இது அதிகம். 2006லிருந்து ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக இந்த எண்ணிக்கை அதிகரித்தே வந்துள்ளது.

போலீஸ் ரெக்கார்டுப்படி 2,739 அடையாளம் தெரியாத உடல்களில் 657 உடல்கள் சென்னை, செங்கல்பட்டு, சூளூர்பேட்டை ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அதற்கு முந்தைய ஆண்டைவிட 248 உடல்கள் அதிகம் கிடைத்துள்ளன. அடையாளம் காண முடியாத உடல்கள் 48 மணி நேரத்தில் மாநகராட்சி உதவியுடன் தகனம் செயப்படுகின்றன அல்லது மருத்துவக் கல்லூரிக்கு தரப்படுகின்றன.
நன்றி கீதா புதியதலைமுறை 

Saturday, November 12, 2011

குழந்தைகள் அறிவியல் திருவிழா



காரைக்காலில் 5 நாள் நடைபெறும் குழந்தைகள் அறிவியல் திருவிழா நடைபெற்றது காரைக்காலில் கல்வித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறை மற்றும் புதுவை அறிவியல் இயக்கம் சார்பில் 5 நாட்கள் நடைபெறும் குழந்தைகள் அறிவியல் திருவிழா கோவில்பத்து அரசு உயர்நிலைப் பள்ளியில் துவங்கியது.

அறிவியல், மொழி, கலை, இலக்கியம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை வளரும் தலைமுறையினர் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு துவங்கப்பட்ட இந்த குழந்தைகள் அறிவியல் திருவிழா கடந்த ஆண்டு ஏனாம் பகுதியில் நடைபெற்றது. 2வது ஆண்டாக காரைக்காலில் நடைபெறும் இந்தத் திருவிழாவில் புதுச்சேரி, மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த அறிவியல் திறன் பெற்ற   50 மாணவர்களும், காரைக்காலில் அறிவியலில் சிறந்து விளங்கும் 50 மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
மூன்று பிராந்தியங்களில் உள்ள கலாசாரம், பழக்கவழக்கம், அறிவியல் முறைகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட குழந்தைகள் அறிவியல் திருவிழாவில் 6 பிரிவுகளின் கீழ் நிகழ்ச்சிகள் நடந்தன. அறிவியலின் செயல்பாடு, எண்கள், கற்பனை வளமும் காகித கலையும் அதிசயங்களை விவரித்தல், இயற்கை படிப்பு, அறிவியல் பொம்மை தயாரித்தால் ஆகிய தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடந்தன.
தினந்தோறும் மாலை நேரத்தில் 3 பிராந்திய மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

Saturday, June 11, 2011

PSF" அறிவியல் உருவாக்குவோம்" திட்டத்தில் சிறந்த 4 ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு

புதுச்சேரி அறிவியல் இயக்கம், பிரான்ஸ் நாட்டு பாரீஸ் பல்கலைக்கழகத்துடன் (தெற்கு-11) இணைந்து சர்வதேச அளவில் “அறிவியல் உருவாக்குவோம்’(Make Science) திட்டத்தை கடந்த ஐந்தான்டுகளாக புதுச்சேரியில் நடத்தி வருகிறது. 2011ம் ஆண்டிற்கான அறிவியல் உருவாக்குவோம் போட்டிக்கான ஆய்வறிக்கைகள் பெறப்பட்டு பிரான்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டது.

இதில் புதுச்சேரி அரசு பள்ளி மாணவ மாணவிகள் எழுதிய 12 ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன. தேர்வு செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளுக்கான ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டன. நிகழ்ச்சி கல்வித்துறை வளாகத்தில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் நடந்தது.
முதலியார்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அடுப்புக்கரி, இயற்கை உரம் மூலம் மண் தாவரம் வளரும் முறை குறித்து செய்த ஆய்வுக் கட்டுரை முதல் பரிசைப் பெற்றது. மண்ணில் வளரும் தாவரங்களுக்கு மண்ணுடன் அடுப்புக் கரி சேர்த்த கலவையின் மூலம் தாவர வளர்ச்சி மிகுதியாக உள்ளது என நிரூபிக்கப்பட்ட ஆய்வுக்கு முதல் பரிசாக 300 யூரோ டாலர் பரிசாக வழங்கப்பட்டது.
அதே பள்ளிக்கு எளிமையான முறையில் மண் பரிசோதனை செய்தல் தொடர்பான ஆய்வுக்கு இரண்டாம் பரிசாக 100 யூரோ டாலர் பரிசு வழங்கப்பட்டது. இப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர் அரவிந்தராஜா தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.
டி.கே.ஆர்.பி. கொரவெளிமேடு பள்ளி மாணவர்கள் “மூடாக்கு பயன்படுத்துவதால் மண்ணில் ஏற்படும் மாற்றங்கள்’ என்ற தலைப்பிலான ஆய்வுக்கு இரண்டாம் பரிசாக 100 யூரோ டாலர் பரிசாக வழங்கப்பட்டது. இப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.
லிசே பிரான்சே பள்ளியில் “இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு தீங்கில்லாத வாசனை திரவியம் தயாரிக்கும் முறை’ குறித்த ஆய்வை ஆசிரியர் கோவர்த்தன் மேற்பார்வையில் நடத்தப்பட்டது. இதற்கு 100 யூரோ டாலர் பரிசாக வழங்கப்பட்டது. முதல் பரிசு மற்றும் 3 இரண்டாம் பரிசுகளை பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் வழங்கினார்.
முதன்மை கல்வி அதிகாரி அனுமந்தன், சிறப்புப் பணி அலுவலர் கிருஷ்ணன், புதுச்சேரி அறிவியல் இயக்க துணைத் தலைவர் ஹேமாவதி, தட்சணாமூர்த்தி, சுதர்சன், சேகர், விஜயமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறிவியல் இயக்க செயலாளர் ரகுநாத் செய்திருந்தார்.

Thursday, June 9, 2011

குழந்தைகளைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?





 இந்தக் கேள்வியை ஆழ்ந்து சிந்தித்தால் நமக்கு கிடைப்பது ஏமாற்றமே. குழந்தைகள் பிறக்கின்றனர், வளர்கின்றனர். மனிதர்களாகின்றனர். இதில் என்ன இருக்கிறது என்று கருதுபவர்களும் இருக்கிறார்கள். குழந்தைகள் பழக்கப்படுத்தப்படாத ஜீவன்கள். அவர்களை நாம் தான் பழக்கப்படுத்தவேண்டும். இந்த சமூகத்தில் வாழ்வதற்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். குழந்தைகள் தம் கனவை அடைகாத்து பொரிக்கும் சாதனங்களாக எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். குழந்தைகளை தங்களுடைய பிற்கால வாழ்க்கைக்கான நிரந்தரவைப்பு நிதியாகச் சிந்திப்பவர்களும், அன்றாடச் செலவுக்கான முதலாக நினைப்பவர்களும் இருக்கிறார்கள். குழந்தைகளைச் சுமையாகக் கருதுபவர்களும்.
கடவுளாகப் போற்றுபவர்களும் இருக்கிறார்கள். இப்படி எல்லாவிதமான சிந்தனைகளும் இருந்தாலும், இப்படி சிந்திக்கிற அனைவருமே குழந்தைகளாக இருந்தவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. குழந்தைமை என்கிற அற்புத உலகத்தில் கணந்தோறும் வாழ்வின் அழுத்தத்தைப் பருகியவர்கள்தான் அனைவரும். ஏனெனில் குழந்தை மானுடத்தின் அபூர்வப்பரிசு.குழந்தைகளின் செயல்பாடுகளில் கோடிப்புதையல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைத் தேடிக் கண்டுகொள்கிற பொறுமை, கவனம், அக்கறை பெரியவர்களுக்கு இல்லை. விரட்டுகிற வாழ்வின் நொடிகளின் பின்னே அரக்கப்பரக்க ஓடிக் கொண்டேயிருக்கிறோம். எப்போதும் பொருளாதார வாழ்வை மட்டுமே மனதில் நிலைநிறுத்திக்கொள்கிறோம். வாழ்தலின் இன்பத்தை உணர்வதேயில்லை.

வாழ்தலின் இன்பமாக குழந்தைகளின் சிறகுகள் விரிந்து பறந்துகொண்டேயிருக்கின்றன. அந்தக் குழந்தைகளின் சிறகுகளில் முதல் காயத்தை சிறுவயதிலேயே பள்ளிக்கு அனுப்பி உண்டுபண்ணுகிறோம். பள்ளியிலும், வீட்டிலும் அதன்பிறகு சொன்னபடி சவுக்கு சொடுக்க ஆரம்பித்து விடுகிறது. பெரியவர்களுக்கு தெரியாத எதுவும் குழந்தைகளுக்குத் தெரியாது. எனவே பெரியவர்களின் சொல்படி கேட்டு நடந்தால் போதும் என்ற அதிகாரம் தன் கொடுங்கரங்களை வீசி குழந்தைகளை அடக்கத்துடிக்கிறது. பள்ளிகள் குழந்தைகளின் அகவியமான, புறவியமான சுதந்திரத்தை ஒடுக்குவதிலேயே முனைப்பாக இருக்கின்றனர். திட்டமிடப்பட்ட முறையில் குழந்தைகளின் படைப்பாக்கத்தைச் சிதைக்கின்றனர். விருப்பங்களை. ஆசைகளை. கண்டுணர்தல்களை மறுக்கின்றனர். சமூகமும் பெரியவர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. பெரியவர்களின் இந்த உலகில் குழந்தைகளுக்கான பிரத்யேக வெளியே இல்லை.
குழந்தைகளுக்கான கதை வெளி இல்லை. பாட்டி, தாத்தாக்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தாயிற்று இல்லையென்றால் புறக்கணிப்பின் துயரத்தில் தனியே வாழ விதிக்கப்பட்டுவிடப்பட்டுள்ளனர். பெரியவர்களைப் போலவே குழந்தைகள் பேசித் திரிகிறார்கள். அதைப்பார்த்துவிட்டு நமது குழந்தைகளிடம் அப்படி பேசச் சொல்லிப்பெருமைப்படுகிறோம் இல்லையென்றால் போலி வாழ்வின் பிரதிபிம்பமாகத் திரையில் வரும் கதாநாயகர்களின் பஞ்ச் டயலாக்கை பேசச் சொல்லிப் பூரித்துபோகிறோம்.வீட்டுக்கு வரும் விருந்தினர்களிடம் எங்கள் வீட்டில் ஒரு அபூர்வபொம்மை இருக்கிறது. அது ரஜினியைப்போல பேசும். பிரபுதேவாவைப்போல ஆடும், குறள் ஒப்பிக்கும், குட்டிக்கரணம் போடும், ஆட்றா ராமா, ஆட்றா ராமா, சலாம் சொல்றா மாமாவுக்கு.... வாட் இஸ் யுவர் நேம்? மாமாட்ட சொல்றா.. ராமா.. என்று குழந்தைகளின் உலகத்திற்குள் அத்துமீறி நுழைகிறோம்.


அந்த உலகத்தின் நுண்ணுணர்வுகளையும், அழகையும், அபூர்வங்களையும், விந்தைகளையும் அழிக்கிறோம். தங்கள் உலகத்திற்குள் அனுமதியின்றி நுழைகிற எவரையும் எதிர்த்துக் கலகம் செய்கின்றன குழந்தைகள். அந்த கலகத்திற்கான காரணங்களைப் புரிந்து கொள்ளலாம். கொடிய வன்முறையெனும் ஆயுதங்களால் அவர்களை அடக்கிஒடுக்குகிறோம். பள்ளி, வீடு, சமூகம் என எங்கு சென்றாலும் குழந்தைகள் தங்கள் சுதந்திரம் ஒடுக்கப்படுவதாகவே உணர்ந்து கொள்கின்றனர். பரிசுத்தமான தேவமலர்களாக பார்த்துக் குலுங்க ஆவல் கொண்ட அவர்கள் மனம் கூம்பி, சோம்பி விடுகிறது. குழந்தைமையில் ஏற்பட்ட காயங்களின் வடுக்களோடேயே அவர்கள் வளர்கின்றனர். தங்களுக்கு என்ன கொடுக்கப்பட்டதோ அதையே அவர்கள் மற்றவர்களுக்குத் தருகிறார்கள். தாங்கள் என்ன அனுபவித்தார்களோ அதையே மற்றவர்கள் அனுபவிக்க விடுகிறார்கள். தாங்கள் என்ன ருசித்தார்களோ அதையே மற்றவர்களுக்கு ருசிக்கக் கொடுக்கிறார்கள்.
கசப்பின், வெறுமையின். விரக்தியின் துன்பத்தின் ஊற்று நீரே அவர்களுடைய உள்ளத்தில் ஊற ஆரம்பிக்கிறது. அதன் ஒவ்வொரு துளியையும் சமூகம் ருசிக்கும் போது புதிய இளந்தலை முறைகளை சபிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளாக இருந்து இளையதலைமுறையினரான இளைஞர்கள் சிரிக்கிறார்கள் கசப்புடன்.முதலில் குழந்தைகளின் உலகத்தைப் புரிந்து கொள்வது, மிகப்பெரிய சவால். அந்த சவாலை பெரியவர்கள் முதலில் எதிர்கொள்ளத் தயாராக வேண்டும். குழந்தைகளும் குட்டி மனிதர்களே என்று உணர்ந்து கொண்டாலே அவர்களை மதிக்கவும், அவர்கள் உலகத்தைப் புரிந்து கொள்ளவும் ஆரம்பித்து விடுவோம். குழந்தைகள் தங்களுடைய குழந்தைமையின் இனிமையை இன்பத்தை. பூரணமாக அனுபவிக்க உதவவேண்டும். அதற்கேற்ற குழந்தைகள் சார்ந்த நடவடிக்கைத் திட்டங்களை உருவாக்க வேண்டும்.

குழந்தைகளின் உளவியல், புரிந்து கொள்ளும் ஆற்றல், கண்டுணரும் திறன், கற்றுக்கொள்ளும் வேகம், உணர்வுகளின் வெளிப்பாடு, கற்பனைத்திறன், அனுபவங்களின் சேகரிப்பு, பகுப்பாய்வு என்று குழந்தைகளின் உலகத்திற்குள் ஊடாடுகிற ஒரு ஆரோக்யமான மனப்பாங்கு தேவையிருக்கிறது. இத்தகைய குழந்தைகள் உலகத்திற்குள் காணாமல்போன தொலைந்துவிட்ட கதைகள், விளையாட்டுகள், படைப்பாகத்திறன்கள் எல்லாவற்றையும் மீட்டெடுக்க வேண்டியதிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகிற குழந்தைகளின் பிரபஞ்சத்தில் இப்போது தெருக்கள் இல்லை, நிலாக்கள் இல்லை, ஆற்றங்கரை, குளத்தங்கரை இல்லை, கூடவிளையாடும் நண்பர்கள் இல்லை, பட்டுப்பூச்சிகள் இல்லை, வண்ணங்களை வீசிசெல்லும் வண்ணத்துப்பூச்சிகள் இல்லை, புரண்டு உருண்டு விளையாட புல்வெளிகள் இல்லை, அலைந்து திரிய காடுமேடுகள் இல்லை, ஆச்சரியப்படுத்தும் அருவிகளோ, அதிசயம் கொள்ளவைக்கும் மலைகளோ இல்லை, குருவிகளும், காக்கைகளும் இல்லை. எல்லாவற்றையும் இழந்துவிட்டு குழந்தைகளின் மனம் அலறுகிறது, ஏங்குகிறது.

              இப்போது இருப்பதெல்லாம் மொழியின் சூட்சுமம் புரியத் துவங்கும்
 முன்பே, பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் சுதந்திரத்தைச் சுவைக்கத் தொடங்குமுன்பே, ஒழுக்கம், ஒழுங்கு, எப்போதும் பூட்டப்பட்ட வீடுகளுக்குள் சிறை, எப்போதும் தின்றுகொண்டேயிருக்க பண்டங்கள். குழந்தைகளையே தின்பண்டங்களாகத் தின்று கொண்டிருக்கும் தொலைக்காட்சிப்பெட்டிகள், ஒவ்வொரு நாளும் ஒரு புத்தம் புது நாளாக மலர வேண்டிய குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் தண்டனையாக மாறிவருகிற அவலம். தூங்கி விழித்ததுமே ஹோம் ஒர்க், பரீட்சை, மார்க், ஏச்சு, பேச்சு, தண்டனை, டாக்டர். என்ஜினீயர், அமெரிக்கா என்று கனவுகளின் சுமை, பர்ஸ்ட் ரேங்க், நூற்றுக்கு நூறு (ஒருமார்க் கூட குறையக்கூடாது) என்று வாழ்வின் முழு அழுத்தத்தையும் தாங்கிக்கொண்டே குழந்தைகள் வளர்கிறார்கள். இன்றைய நிலைமையில் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி வருபவர்கள் குழந்தைகளே.



ஆனால் குழந்தைகளின் உலகம் எது?படைப்பாக்கம் பொங்கித் ததும்பும்

 உலகின் சொந்தக்காரர்கள், எல்லாக் குழந்தைகளும் சிறந்த புனைவியலாளர்கள். சிறந்த கதைசொல்லிகள், சிறந்த கண்டுபிடிப்பாளர்கள், சிறந்த உரையாடல்காரர்கள், சிறந்த கேள்வியாளர்கள், சிறந்த விளையாட்டுக்காரர்கள். கனவின் இசை மீட்டும் கந்தர்வ உலகத்தில் பறந்து திரியும் பட்டாம்பூச்சிகள். மானுட இனத்தின் அபூர்வ மலர்கள். அறிதலின் ஆனந்தத்தை முழுமையாக உணர்ந்தவர்கள் அற்புத உணர்வு பொங்கிப்பிரவகித்துக் கொண்டேயிருக்கும் படைப்பாளிகள் கனவுலகவாசிகள், சமூகமாற்றத்தின் வித்துகள், லட்சிய வீரர்கள், எதிர்காலத்தின் புத்திரர்கள், இந்த பூமியின் வண்ணக் கனவுகள். குழந்தைகளின் உலகத்திற்குள் முதல் அடி எடுத்துவைக்கத் துவங்குவோம். வாருங்கள்... 

உதயசங்கர் 
இளைஞர் முழக்கம்
தொடர்பு முகவரி: 57/21, அருணோதயா காம்ப்ளக்ஸ் 2வது மாடி,ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, பெரியமேடு, சென்னை - 03. தொலைபேசி: 044-25611348    ஆண்டு சந்தா: ரூ.75