Showing posts with label PSF. Show all posts
Showing posts with label PSF. Show all posts

Friday, June 13, 2014

ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல்

ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல் (13 ஜூன் 1831 – 5 நவம்பர் 1879) பிறந்த நாள் இன்று.
கணிதவியலாளரும், கோட்பாட்டு இயற்பியலாளரும் ஆவார். இவரது முக்கியமான சாதனை மின்காந்தவியல் கோட்பாடு ஆகும்.
மின்னியல், காந்தவியல் மற்றும் ஒளியியல் சார்ந்த, ஒன்றுக்கொன்று தொடர்பற்ற முன்னைய கவனிப்புக்கள், சோதனைகள், சமன்பாடுகள் போன்றவற்றை இணைத்து மேற்படி கோட்பாட்டை இவர் உருவாக்கினார்.
மக்ஸ்வெல்லின் சமன்பாடுகள் என அழைக்கப்படும் இவரது சமன்பாடுகள், மின்சாரம், காந்தப்புலம், ஒளி அனைத்துமே ஒரே தோற்றப்பாட்டின் வெளிப்பாடுகளே என விளக்கின.
இதனைத் தொடர்ந்து மேற்படி துறைகளின் முன்னைய விதிகள், சமன்பாடுகள் எல்லாமே மக்ஸ்வெல்லின் சமன்பாடுகளின் எளிமையான வடிவங்கள் ஆயின. மின்காந்தவியலில் மக்ஸ்வெல்லின் பணி இயற்பியலில் இரண்டாவது பெரிய ஒன்றிணைப்பு எனப்படுகின்றது. முதலாவது ஒன்றிணைப்பு நியூட்டனால் செய்யப்பட்டது.

Thursday, October 31, 2013

மாசில்லா பூமிக்கு சத்தமில்லா தீபாவளி அவசியம்.



நண்பர்களே..

பண்டிகைகள் கொண்டாட்டங்கள் இல்லாத ஒரு தேசத்தைக் கற்பனை செய்து பாருங்கள்.ஒன்றுகூட அகப்படாது. பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் மனித சமூகம் தேவையின் பொருட்டு, தானே சிருஷ்டித்துக் கொண்டவையே. புராணப் பொய்மைகள் ஜோடிக்கப்பட்ட பின்னர் பண்டிகை தோற்றுவிக்கப்படவில்லை. மாறாக மக்கள் கொண்டாடிய பண்டிகைகளை மதங்கள் ஹைஜாக் செய்து அதற்கு புராண முலாம் பூசின. புனிதம் கற்பிக்கப்பட்டது.

இன்றைக்கும் தீபாவளி கும்பிட்டுவிட்டீர்களா எனக் கேட்பவர்களே அதிகம்.தீபாவளி கொண்டாடினீர்களா எனக் கேட்பவர்கள் மிகமிகச் சொற்பம்.

விழாக்களுக்கு பஞ்சமில்லாத இந்த காலகட்டத்தில் விழாக்கள் நல்லதுக்கா? கெட்டதுக்கா? என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

வசதியான வீடுகளில் கொண்டாடப்படும் விழாக்கள் பெருமளவில் அவர்களுக்கு உற்சாகத்தையும் புத்துணர்வையும் ஏற்படுத்துவதாக இருக்கின்றன. அதற்காக செய்யப்படும் சில ஏற்பாடுகள்தான் அவர்களுக்கு புதிதாக இருக்கும்.

ஏழ்மையான குடும்பங்களிலோ நிலைமை வேறு.. அந்த ஒரு நாள் மகிழ்ச்சிக்காக மாடாய் உழைப்பது, கடனை வாங்கிக் கொண்டாடுவது என சிக்கிச் சீரழிந்து மற்ற நாட்களின் மகிழ்ச்சியையும் சேர்த்துத்தொலைக்கும் கொடுமை! இதைப்பற்றி மேலும் விரிவாக நீங்களும் உங்கள் நண்பர்களும் விவாதித்துக் கொள்ளுங்கள்!

விழாக்கள் கொண்டாடுவதற்கு பல நேர்மறையான காரணங்கள் இருக்கின்றன. ஆனாலும் நமது கொண்டாட்ட முறைகள் இருக்கின்றனவே.. ஒவ்வொரு விழாக்களின்போதும் நாம் அதை முறைப்படுத்த வேண்டியிருக்கிறது. ஏனென்றால் நாம் சொல்லிக்கொள்வது போல 'அந்த ஒருநாள்' ஏற்படுத்தும் விளைவுகள் அன்றோடு போவதில்லை!

மகிழ்ச்சி என்ற பெயரில் நீங்கள் கொண்டாடிவிட்டுப் போய்விடுவீர்கள், தண்டனைகள் அனுபவிக்கப் போவது அடுத்த தலைமுறைக் குழந்தைகளும் அல்லவா?

எனவே நாம் இப்போது தீபாவளிக்காய்ச்சலில் இருப்பதால் அதுபற்றிச் சிந்திப்பது நல்லது.

"உனக்கு மகிழ்ச்சி தருவதெல்லாம் எனக்கும் மகிழ்ச்சியைத்தரும் என் சின்னஞ்சிறிய மகனே,ஆனாலும் வெடித்துச்சிதறும் வேட்டுக்களிலும்,சீறி ஒளிப்பிழம்பாகும் மத்தாப்புகளிலும் உன்னைப்போல் சில சிவகாசிச்சிறுசுகளின்,சிதைந்த கனவுகளும் சிறைப்பட்ட வாழ்வுமே தெரிவதனால்,வேட்டுக்களும் மத்தாப்புக்களும் வேண்டாம் மகனே"  பேனா மனோகரன். அவர்களின் கவிதையும் நினைத்து பார்க்க வேண்டிய தருனம் இது

நமது இன்றைய சமூகமானது தனித்தனிக் கட்டிடங்களாகவும் தனித்தனிக் கட்டிடங்கள் தனித்தனிக் குடும்பங்களாகவும் தனித்தனிக் குடும்பங்கள் தனித்தனி மனிதர்களாகவும் ஒரு ஆளுமையின் இருப்பு என்பது அனாதையாகிக் கொண்டே இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் சமூகக்கொண்டாட்டங்கள் பற்றி நாமெல்லாம் சிந்திக்கவும் விவாதிக்கவும் வேண்டியிருக்கிறது.

சமூகக் கொண்டாட்டங்கள் மூலம் ஒத்த கருத்துடைய/ ஒரே கட்டிடத்தில்/ஒரே பகுதியில் வாழக்கூடிய அல்லது சொந்த பந்தங்கள் அனைவரும் ஒன்றாகக்கூடி ஒரே இடத்தில் கொண்டாடமுடியும். இதனால் தனித்தனி ஏற்பாடுகள் தேவையில்லை. காணுமிடமெல்லாம் குப்பைகள் நிறையும் நிலையில்லை. குறிப்பிட்ட நேரம், ஒரே இடம் என்பதால் தேவையற்ற இரைச்சல், அலைச்சல், குழப்பங்கள் இல்லை. சிறப்பாக சூழல் மேலாண்மை செய்யமுடியும். மிகமுக்கியமாக எரிபொருள்/ஆற்றல் சிக்கனம். இதற்காக பள்ளி,கல்லூரிகள், விடுதிகள்,மருத்துவமனைகள் ஆகிய இடங்களிலிருந்து தூரமாய் உள்ள திறந்தவெளி மைதானங்களைத் தேர்வுசெய்வது நல்லது.

*தனியாகக் கொண்டாடுவதை இனியேனும் தவிர்ப்போம்!
*வெடி வெடிப்பதால், வெளிவரும் புகையால் பொதுமக்களுக்கு தேவையற்ற மன உளைச்சல், தலைவலி, சுவாசக்கோளாறு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் தோல் வியாதிகள் போன்றவற்றைத் தவிர்ப்போம்.

மேலும் அளவுக்கதிகமான நில மாசு காற்று மாசு ஒலி மாசு போன்றவற்றைத் தவிர்ப்போம்.

தேவையற்ற மின்நுகர்வைத் தவிர்ப்போம்

விளக்கெண்ணையைக் கண்டுபிடித்தவன் அதை சந்தோஷமாகப் பகிர்ந்துகொண்டு கொண்டாடிய நாளே தீபாவளி என்பார் அயோத்திதாசப் பண்டிதர். சமூக அறிவியல் ரீதியாக பண்டிகைகள் குறித்த ஆய்வும் புரிதலும் தேவைப்படுகிறது.மனிதநேயத்தையும் மகிழ்ச்சியையும் மேன்மைப்படுத்தும் பண்டிகைகள் மட்டுமே சடங்குத்தனமான இன்றையப் பண்டிகைகளை அப்புறப்படுத்தும்.

அது ஒற்றை நாளில் ஒற்றை அறிவிப்பில் வந்துவிடாது.இப்போதே அதற்கு முயற்சியைத் துவங்கினால் காலகதியில் அவை மக்கள் பண்டிகையாக முகிழ்க்கும்.

தீப ஒளி ஏற்றுவோம்.

*விழாக்களின் வடிவங்களை மாற்றுவோம்.
*தொடர்ந்து சிந்திப்போம்! பகிர்ந்து கொள்வோம்! செயல்படுவோம்!
*இது குறித்த உரையாடலைத் தொடங்குவோமே!

Thursday, April 19, 2012

சிறுநீரக மாற்று சிகிச்சை


சிறுநீரகங்கள் மனித உடலில் மிக முக்கியமான இரு உறுப்புகள். அவரைக்காய் வடிவத்தில் உள்ள இவை விலா எலுப்புக்கூட்டிற்குக் கீழ் முதுகெலும்புக்கு இருபக்கத் திலும் அமைந்திருக்கின்றன. இரத் தத்திலிருந்து கழிவுப் பொருள் களையும் நீரையும் அகற்றி சிறுநீர் வழியாக வெளியேற்றும் வேலை யை அவை செய்கின்றன. ஒரு வீட் டைக் கூட்டிப் பெருக்கிக் குப்பை களை அகற்றாவிட்டால் என்ன ஆகும்? சிறுநீரகம் இல்லை யெனில் உடலின் நிலையும் அது தான். ஒவ்வொரு நாளும் சுமார் 50 காலன் ரத்தத்தைச் சுத்தி கரித்து கழிவுகளை அவை பிரித் தெடுக்கின்றன. கழிவுகள் சிறுநீர்க் குழாய்கள் வழியாக சிறுநீர்ப்பை யை அடைகின்றன.

பின்னர் சிறு நீராக அவை வெளியேறுகின்றன. நீரிழிவு நோய், அதிக ரத்த அழுத்தம், புகை பிடித்தல், குடிப் பழக்கம் போன்ற காரணங்களால் சிறுநீரகங்கள் பாதிப்புக்குள்ளாக நேரும். உயிர் வாழ்வதற்கு ஒரு சிறு நீரகமே போதுமானது. எனவே சிறு நீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரோக்கியமான ஒருவரிடமிருந்து ஒரு சிறுநீரகத்தை எடுத்துப் பொருத்துவது சிறுநீரக மாற்று சிகிச்சை என அழைக்கப்படுகிறது.சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை சிறுநீரக மாற்று சிகிச்சைக்குப் பெயர் பெற்றது. இந்த ஆண்டு மார்ச் 20 அன்று அங்கு 1000-வது தடவையாக இச் சிகிச்சை நடைபெற்றது. இந்தியா வில் இந்த சாதனையைச் செய்த முதல் அரசு மருத்துவமனை இந்த மருத்துவமனையே என்கிறார் மருத் துவமனையின் டீன் வி. கனகசபை.25 ஆண்டுகளுக்கு முன் 1987 ஜூலை 10 அன்று இந்த மருத்துவமனையின் முதல் சிறு நீரக மாற்று சிகிச்சையைச் செய் தவர் டாக்டர் எம்.ஏ. முத்துசேதுபதி. “25 ஆண்டுகளில் 1000 சிறுநீரக மாற்று சிகிச்சை நடந்திருப்பது ஒரு சாதனைதான். 1982-ல் ராயப் பேட்டை அரசு மருத்துவமனையில் முதன்முதலாக இந்த சிகிச்சையை நாங்கள் செய்தோம். பிறகு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்ற லாகி வந்ததும் அந்த சிகிச்சையைத் தொடர்ந்தோம். 25 ஆண்டுகளுக்கு முன் மாற்று சிறுநீரகம் பொருத்திக் கொண்டவர்களில் சுமார் 80 சதம் பேருக்கு சிகிச்சைக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் மட்டுமே வாழக் கூடிய வாய்ப்பு இருந்தது. படிப்படி யாக இதில் முன்னேற்றம் ஏற்பட் டது. தமிழகத்தில் சிறுநீரக மாற்று சிகிச்சை வெற்றிகரமாக நடை பெற்று வருவதற்குக் காரணம், சிகிச்சை செய்துகொண்டவர் களுக்கு அவர்கள் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்புத் திறன் ஒடுக்க மருந்துகள் (iஅஅரnடிளரயீயீசநளளiடிn னசரபள) இலவசமாக அளிக்கப்பட்டதுதான்” என்கிறார் டாக்டர் முத்துசேதுபதி. “இன்று இந்த மருந்துகளின் விலை 10000 ரூபாயிலிருந்து 12000 ரூபாய் வரை ஆகிறது.

மாநில அரசு நோய் எதிர்ப்புத் திறன் சிகிச்சைக்கு 2 கோடி ரூபாயை ஒதுக்கியிருக் கிறது” என்கிறார் டாக்டர் கனக சபை. மரணமடைந்தவர்களின் சிறு நீரகத்தை எடுத்து நோயாளிகளுக் குப் பொருத்தும் சிகிச்சை (உயனயஎநச வசயளேயீடயவே) 1996-ல் முதன் முத லாக இங்கு நடைபெற்றாலும் 2008-ஆம் ஆண்டிலிருந்தே பரவ லாக நடைபெறத் தொடங்கியிருக்கிறது.உலக சிறுநீரக நாளாக மார்ச் 8 அனுசரிக்கப்படுகிறது. அன்று சென்னையில் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்டவர் களும், சிறுநீரக தானம் செய்தவர் களும் மாற்று சிறுநீரகம் பொருத்திக் கொள்ள இருக்கும் நோயாளி களைச் சந்தித்து உரையாடினர். 17 ஆண்டுகளுக்கு முன் மாற்று சிறு நீரகம் பொருத்திக் கொண்ட ஒருவர் தன்னுடைய அனுபவங்களை மற்ற வர்களுடன் பகிர்ந்து கொண்டார். சிகிச்சை மேற்கொள்ள இருக்கும் நோயாளிகளுக்கு இந்த சந்திப்பு உற்சாகத்தையும் நம்பிக்கையை யும் அளித்தது. “சிகிச்சைக்குப் பிறகு 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் நோயாளிகளை நான் அறிவேன். நோய் எதிர்ப்புத் திறன் ஒடுக்க மருந்துகளின் விளைவாக ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சை அளிப்பதுதான் சவாலாக இருக் கிறது” என்கிறார் டாக்டர் முத்து சேதுபதி.சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டவர்களுக்கு மாற்று சிறுநீர கமே புனர்வாழ்வு அளிக்கிறது. எனவே, இத்துறையில் உள்ள சவால்களைச் சந்தித்து நூற்றுக்கு நூறு வெற்றி அடைய எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துவோம்.

பேராசிரியர் கே. ராஜு
(உதவிய கட்டுரை : தி இந்துவில் திருமிகு ஆர். சுஜாதா எழுதியது)

Sunday, February 12, 2012

முட்களாக மாற்றப்படும் பூக்கள்



தமிழ்சமூகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அன்றாட நிகழ்வாகிவிட்டன. ஆனால் சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் வகுப்பறை யிலேயே ஆசிரியை ஒருவரை ஒன்பதாவது வகுப்பு மாணவன் ஒருவன் கொடூரமாக குத்திக் கொலை செய்துள்ளது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இது ஒரு தனிமனித விரோத குரோதம் சார்ந்த குற்றம் அல்ல. இந்தப் படுகொலை இன்றைய சமூக அமைப்பு, கல்விச்சூழல், பாடத்திட்டம், ஆசிரியர்- மாணவர் உறவு, பெற்றோர் - பிள்ளைகள் உறவு என பல்வேறு தளங்களில் ஆயிரமாயிரம் கேள்விகளை எழுப்புகிறது. 

கொலை செய்யப்பட்ட ஆசிரியை உமா மகேஸ்வரி கனிவானவர். அதேநேரத்தில் கண்டிப்பானவர் என்றும் அனைத்து மாணவர்களிடமும் அன்போடு பழகக்கூடியவர் என்றும் சக ஆசிரியைகள் கூறியுள்ளனர். கொலை செய்த மாணவன் நல்ல பழக்கவழக்கங்களைக் கொண் டிருந்தவன்தான்.

குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட வேண்டியது இன்றைய பாடத்திட்டமும்தான். ஒரே மாதிரியான கல்விமுறை, பாடத்திட்டம் வேண்டும் என்பதற்காக இந்திய மாணவர் சங்கம் நீண்ட நெடுங்காலமாகப் போராடி வருகிறது. சமூக பொறுப்புணர்வுள்ள ஆசிரியர் சங்கங்களும் இதே கோரிக்கையை முன்வைக்கின்றன. இதன் ஒரு பகுதிதான் சமச்சீர்கல்வி. 

ஆனால், நவீன தாராளமயமாக்கல் சூழலில் கல்வி வணிகமயமாக்கப்பட்டுவிட்டது. எந்த அளவுக்கு கனமான புத்தகங்களை மாணவர்கள் சுமந்து செல்கிறார்களோ அதுவே அறிவின் அடையாளம் என்று சித்தரிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் மாணவர்களை கசக்கிப்பிழி கின்றன. மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விகிதம் மட்டும் அளவுகோலாக முன்வைக்கப்படுகிறது. இதே சித்ரவதைக்கு ஆசிரிய சமூகமும் உள் ளாக்கப்படுகிறது. 

இதனால் ஏற்பட்ட மன அழுத்தம்தான் ஒரு கள்ளமறியா பிஞ்சை கொலைகாரனாக மாற்றியுள்ளது. இந்தி மொழிப்பாடம் தமக்கு கொஞ்சம் கூட புரியவில்லை என்றும், இது குறித்து ஆசி ரியை தொடர்ந்து கண்டித்ததால் கொலை செய் யும் முடிவுக்கு வந்ததாகவும் அந்த மாணவன் கூறியுள்ளான். ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் தாய்மொழிவழிக் கல்விக்குப் பதிலாக பல மொழிகளை கற்பிப்பதாக தனியார் பள்ளிகள் விரிக்கும் வர்த்தக வலையில் விழுந்ததால் ஏற் பட்ட விபரீத விளைவுகளில் இதுவும் ஒன்று.

மறுபுறத்தில், இளைய தலைமுறையை நஞ் சாக மாற்றுவதில் திரைப்படம், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும் முக்கியப் பங்கு வகிக் கின்றன. மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சமூகப் பொறுப்பற்ற பொறுக்கிகளாகவே ஊடகங் கள் சித்தரிக்கின்றன. அண்மையில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய கொலைவெறி பாடல் இதற்கு ஒரு உதாரணம்.

மறுபுறத்தில் ஆசிரியர் - மாணவர் உறவில் பாடத்திட்டத்தின் சுமை இயல்பான உறவை கெடுத்து வைத்திருக்கிறது. பெற்றோர் - பிள்ளைகள் உறவும் சீரானதாக இல்லை. மதிப்பெண் மட்டுமே ஒரே தகுதியாகக் கருதும் அள வுக்கு பெற்றோர்களை மாற்றியுள்ளது இன்றைய சமூகக் கல்விமுறை. 

சென்னைப் பள்ளியில் நடைபெற்ற சம்பவம் இன்றைய சமூகத்திற்கு ஒரு பாடம். இந்தக் கோணத்தில் இதை உணர்ந்து, தீர்வு காண்பதே எதிர்காலத்தில் இளம் கொலையாளி உருவாவதைத் தடுக்கும்.

Saturday, December 24, 2011

சர்வதேச அளவில் நடக்கும் அறிவியல் உருவாக்குவோம் திட்டத்திற்கு ஆய்வு அறிக்கைகள் வரவேற்பு


புதுவை அறிவியல் இயக்கம்பிரான்ஸ் நாட்டு பிரான்ஸ் பல்கலைக்கழகம் தெற்கு 11 உடன்  (University of Paris, South 11, France) இணைந்து சர்வதேச அளவில் அறிவியல் உருவாக்குவோம் (Make ScienceCompetition) திட்டத்தை / போட்டியை இந்தியாவில் தொடர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக புதுச்சேரிஅரசுப் பள்ளி மாணவர்கள் மட்டும் பங்குபெறும் வகையில் புதுவை அறிவியல் இயக்கம், புதுச்சேரிஅரசு பள்ளிக் கல்வித்துறையின் மாநில பயிற்சி மையத்துடன் இணைந்து வெற்றிகரமாக நடத்திவருகிறது.

2012 ஆம் ஆண்டிற்கான அறிவியல் உருவாக்குவோம் போட்டிக்கான ஆய்வறிக்கைகள் வரவேற்கப்படுகின்றன. விதிமுறைகள்:

1.     இப்போட்டியில் புதுச்சேரி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளிகள் மட்டுமே பங்கேற்க முடியும்.

2.     இத்திட்டம் ஜனவரி 2012 முதல் ஏப்ரல் 2012 வரை நடைபெறும்.

3.      7வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மட்டுமே பங்குபெறலாம்.

4.     ஆய்வுத்திட்டம் இயற்பியல், வேதியல், கணிதம், அடிப்படை உயிரியியல் ஆகிய பிhpவுகளில் இருக்கலாம்.

5.     ஆங்கிலத்தில் மட்டுமே திட்ட குறிப்புகளை ஆனுப்ப வேண்டும்.
  
6.      கடைசித்தேதி வரும் 2011 டிசம்பர் 28க்குள்  அனுப்ப வேண்டும்.

7.      மேலும் விவரங்களுக்கும் திட்டத்திற்காக விண்னப்படிவத்திற்கும் கிழ்ண்ட மின்அஞ்சல் முகவயிலும் தொலைப் பேசியிலும் தொடர்பு கொள்ளலாம்: மின்அஞ்சல் : cerdpsf@gmail.com  Ph:  0413 -2290733

ஆய்வு அறிக்கைகள் மின் அஞ்சல் மூலம் பெறப்பட்டு அவை பிரான்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கபட்டும் அவற்றில் சிறந்த 12 ஆய்வுத்திட்டங்களை மட்டும் தேர்வு செய்து அனுப்புவார்கள். அந்த திட்டங்கள் துவக்கத்திற்கான உதவி ஊக்கதொகை வழங்கபடும். பிறகு அந்த திட்டம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு அவை மீண்டும் பிரான்ஸ் பல்கலைக்கழத்திற்கு அனுப்பட்டு வீடியோ கான்பிரன்சிங் மூலம் சிறந்த 4 ஆய்வு குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றிக்கு  சான்றிதழும் முதல் பரிசுக்கு 300  Euro முன்று இரண்டாம் பரிசுக்கு தலா 100 Euro அளிக்கப்படும். இந்த வாய்ப்பினை அனைத்து அரசுப் பள்ளிகளுகம் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Friday, December 23, 2011

விண்வெளிக்கு வீரர்களை கொண்டு செல்லலும் புதிய விண்கலம் ஸ்பேஸ்எக்ஸ்


விண்வெளி அமைப்பான நாஸா தனது ஷட்டில் ரக விண்கலங்கள் உபயோகிப்பதை முடிவுக்கு கொண்டுவந்த நிலையில், ஸ்பேஸ்எக்ஸ்ரக விண்கலங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரஉள்ளது.

ஏறக்குறைய 30 ஆண்டுகள் 135 முறை ஏவப்பட்ட ஸ்பெஸ் ஷட்டில்ரக விண்கலங்கள் ஏராளமான விண்வெளி வீரர்களை விண்ணுக்கு கொண்டு சென்றது. தற்போது இதற்கு பதில் மிக நவீனரக ஷட்டில்களை நாஸா உருவாக்கி வருகிறது. அதுவரை வீரர்களை விண்ணுக்கு அழைத்துச் செல்லவும் பூமிக்கு திரும்பச் செலுத்தவும் ரஷ்யாவின் சோயூஸ் கேப்சூல்களையே அமெரிக்கா சார்ந்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் அமெரிக்காவில் பல விண்துறை நிறுவனங்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

கலிபோர்னியாவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள டிராகன் ரக கேப்சூலுக்கு நாஸா அனுமதி தந்துள்ளது. இந்த கேப்சூல் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும். இதில் பயணிக்கும் விஞ்ஞானிகள் வானில் கட்டப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்று, கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு விட்டு, இந்த கேப்சூலிலேயே பூமிக்குத் திரும்புவர்.ஷட்டில் ரக விண்கலம் விமானத்தைப் போல பூமியில் தரையிறங்கும்.ஆனால் இந்த கேப்சூல் பாராசூட் மூலம் பூமியில் தரையிறங்கும்.
ரஷ்யா தான் ஆரம்பம் முதலே கேப்சூல்களை பயன்படுத்தி வந்தது. தற்போது அமெரிக்கா கேப்சூலை பயன்படுத்தவுள்ளது. அமெரிக்கா 2012 பிப்ரவரி மாதம் 7ம் தேதி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தும் என்றும் இதில் வீரர்கள் செல்ல மாட்டார்கள்என்பதும், சரக்குகள் ஏற்றிச்செல்லும் இந்த கேப்சூல், சர்வதேச விண்வெளி மையத்துக்கு அதை கொண்டு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்குள்ள விஞ்ஞானிகள் சரக்குகளை இறக்கிய பின், இந்த கேப்சூல் பூமிக்கு திரும்பும். பசிபிக் கடலில் பாராசூட் முலம் இந்தக் கலம் தரையிறங்கும்இந்த விண்கலத்தை உருவாக்கியுள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை நிறுவியவர் பே பால் நிறுவனரான எலோன் முஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, November 17, 2011

கல்விச் சிந்தனைகள்




” அறிவு நமக்கு ஆற்றலை அளிக்கிறது
அன்பு நம்மை முழுமையடையச் செய்கிறது”

 டாக்டர். ராதாகிருஷ்ணன் முன்னாள் குடியரசு தலைவர்

நமது இந்தியாவில் 504 பல்கலைக் கழகங்கள் உள்ளன. மொத்தக் கல்லூரிகள் 25,951. இதில் மகளீர் கல்லூரிகள் 2565. இக் கல்லூரிகளில் படிக்கம் மாணவர்களின் எண்ணிக்கை 1.36 கோடி. இதில் பெண்கள் 56.49 லட்சம். 

” கல்வி என்பது மிகவும் ஆற்றல் வாய்ந்த கருவி
 உலகை மாற்றுவதற்கு அதைப் பயன்படுத்த முடியும்”
                                            
-நெல்சன் மண்டேலா

” அடிப்படை அறிவை வளர்க்கின்ற கல்வியைப் புகட்ட நினைக்காமல், பட்டதாரிகளை உற்பத்தி செய்வது பல்கலைக் கழகங்களின் நோக்கமாக இருக்கக்கூடாது.
                                     
  - ஜவஹர்லால் நேரு.

” அனைத்து குழந்தைகளும் ஓவியர்களே, பிரச்சனை என்னவென்றால்
 வளர்ந்த பிறகும் எப்படி ஓவியராகவே இருப்பது என்பதுதான்”
                                                                  
- பிக்காஸோ

” ஒரு மாணவனுக்கு உண்மையான பாடப்புத்தகம் அவனுடைய ஆசிரியர்தான்”  

 - மஹாத்மா காந்தி

” வீட்டுக்கொரு புத்தகசாலை வேண்டும். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம், அலங்காரப் பொருட்களுக்கும், போக போக்கியப் பொருட்களுக்கும் தரப்படும் நிலை மாறி, புத்தகச் சாலைக்கு அந்த இடம் தரப்படவேண்டும். உணவு, உடை அடிப்படை தேவை. அந்த தேவையை பூர்த்தி செய்ததானதும் முதல் இடம் புத்தகச் சாலைக்கே தரப்படவேண்டும்.

 - அண்ணாத்துரை

“நான் நிலவு வரை செல்வதற்கு உதவியது தாய்மொழி தமிழ்தான்.” 



-    மயில்சாமி அண்ணாத்துரை

” இயல்பிலேயே எதையும் கற்கும் ஆற்றல் குழந்தைகளிடம் உண்டு, மாணவர்களுக்கு எந்த ஆசிரியரும் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் கற்றுகொள்கிற வாய்ப்பை மகிழ்ச்சிக்குரியதாகவும், நடைமுறைக்கு ஏற்றதாகவும் ஏற்படுத்தித் தருவது மட்டும்தான்.”                   

 - ஜே. ஷாஜஹான்

கல்வியில் தோல்விக்கு இடமில்லை, அனுமதியில்லை என்ற நிலை கொணருவது பெரும் புரட்சிதான்.    

  - டாக்டர். ஆர். ராமானுஜம்

” மாற்றம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. பழைய நிலைமைகளை நியாயப்படுத்தினால் எந்த மாற்றமும் கல்வியில் வரமுடியாது”
          
  - எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க

”கூட்டாக சேர்ந்து கற்பது சிறந்த அரசியல். தனியாகக் கற்பது சுயநலம் என்று புரிந்துகொண்டோம்.”                     

 - பார்பியானா மாணவர்கள்  

” அவர் பிரதமாராக இருக்கும்போது லிப்டில் வந்தார். திடீரென்று லிப்ட் பழுதாகிவிட்டது. 20 நிமிடங்கள் போராடி லிப்டைத் திறந்தனர். வெளியே வந்த அவர் அதிகாரிகளை அழைத்தார். ஓர் ஆலோசனை சொன்னார். ”லிப்டில் சிறியதாய் ஒரு நூலகம் அமைக்கலாம்” என்றார்”   

 - ஜவஹர்லால் நேரு

மொபா. மதுரை

Saturday, November 12, 2011

குழந்தைகள் அறிவியல் திருவிழா



காரைக்காலில் 5 நாள் நடைபெறும் குழந்தைகள் அறிவியல் திருவிழா நடைபெற்றது காரைக்காலில் கல்வித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறை மற்றும் புதுவை அறிவியல் இயக்கம் சார்பில் 5 நாட்கள் நடைபெறும் குழந்தைகள் அறிவியல் திருவிழா கோவில்பத்து அரசு உயர்நிலைப் பள்ளியில் துவங்கியது.

அறிவியல், மொழி, கலை, இலக்கியம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை வளரும் தலைமுறையினர் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு துவங்கப்பட்ட இந்த குழந்தைகள் அறிவியல் திருவிழா கடந்த ஆண்டு ஏனாம் பகுதியில் நடைபெற்றது. 2வது ஆண்டாக காரைக்காலில் நடைபெறும் இந்தத் திருவிழாவில் புதுச்சேரி, மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த அறிவியல் திறன் பெற்ற   50 மாணவர்களும், காரைக்காலில் அறிவியலில் சிறந்து விளங்கும் 50 மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
மூன்று பிராந்தியங்களில் உள்ள கலாசாரம், பழக்கவழக்கம், அறிவியல் முறைகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட குழந்தைகள் அறிவியல் திருவிழாவில் 6 பிரிவுகளின் கீழ் நிகழ்ச்சிகள் நடந்தன. அறிவியலின் செயல்பாடு, எண்கள், கற்பனை வளமும் காகித கலையும் அதிசயங்களை விவரித்தல், இயற்கை படிப்பு, அறிவியல் பொம்மை தயாரித்தால் ஆகிய தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடந்தன.
தினந்தோறும் மாலை நேரத்தில் 3 பிராந்திய மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

Saturday, October 15, 2011

அறிவியல் விழிப்புணர்வு திறனறி போட்டி



மாணவர்களிடையே அறிவியல் ஆக்கத் திறனை வளர்க்கும் வகையில், புதுச்சேரி அறிவியல் இயக்கம் தமிழ்நாடு அறிவியல்இயக்கத்துடன் இணைந்து, அறிவியல் விழிப்புணர்வு திறனறி போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது.


போட்டியில், 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம்.

6 முதல் 8ம் வகுப்பு வரை, 9 முதல் 12ம் வகுப்பு வரை என, இரு பிரிவுகளில் போட்டி நடக்கும். 

போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், வரும் 30ம் தேதிக்குள் ரூ.100 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பதிவுசெய்யும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஓராண்டு காலத்திற்கு ரூ.84 மதிப்புள்ள துளிர் அறிவியல் மாத இதழ்கள் மாதந்தோறும் அனுப்பிவைக்கப்படும்.

 ஜந்தர் மந்தர் (ஆங்கிலம்) இதழ் வேண்டுவோர் பதிவுக்கட்டணமாக ரூ.150/-(ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்)செலுத்தவேண்டும். 

போட்டிக்கான எழுத்துத் தேர்வு அடுத்த மாதம் 26ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் நடக்கும்.

எழுத்துத் தேர்வில் 120 நிமிடத்தில் 100 வினாக்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் வினாத்தாள் அமையும்.

வினாத் தாள் தமிழ், ஆங்கிலத்தில் அமையும்.

தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். 

புதுச்சேரி அளவில் முதலிடம் பெறும் 5 மாணவர்களுக்கு (இளநிலை) அடுத்த ஆண்டு மாகியில் நடக்கவுள்ள மாநில குழந்தைகள் அறிவியல் திருவிழாவில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும். 

புதுச்சேரி அளவில் முதல் 50 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு புதுச்சேரி அறிவியல் இயக்க மாத இதழான அறிவியல் முரசு ஒரு ஆண்டுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்படும். 

இப்போட்டிக்கான ஒருங்கிணைப்பாளர்கள்,பள்ளி முதல்வர்கள்/தலைமையாசிரியர்கள் பூர்த்தி செய்த படிவத்துடன் நுழைவுக்கட்டணத்தை வங்கி வரைவாக அல்லது பணவிடையாக மாநில ஒருங்கிணைப்பாளரின் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.


வங்கி வரைவு துளிர்,சென்னை என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுக்கவேண்டும். (DD in favour of Thulir, Payable at Chennai) 


இப்போட்டிக்கான முதல் பதிவுப்பட்டியல் 28.10.2011க்கு முன்னரும் உரிய வங்கிவரைவு மற்றும் பங்கேற்பாளர் பட்டியல்-முழு முகவரியுடன் மாநில ஒருங்கிணைப்பாளரின் தஞ்சாவூர் முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். ஐம்பது பதிவுகளுக்கு மேல் உள்ள பள்ளிகள் தேர்வுமையமாகச் செயல்படலாம்.


 பள்ளிகளுக்கான பரிசுகள்

100 மாணவர்களுக்கு மேல் பங்கேற்கும் ஒவ்வொரு பள்ளிக்கும் மூன்று அறிவியல்  மென்தட்டுகள்(சி.டி.) 


200 பதிவுகளுக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு.. முதல் பரிசு -ரூ.5000 மதிப்புள்ள அறிவியல் நூலகம். 


இரண்டாம் பரிசு -ரூ.3000 மதிப்புள்ள அறிவியல் நூலகம்
மூன்றாம் பரிசு -ரூ.2,000 மதிப்புள்ள அறிவியல் நூலகம்


பள்ளிகளுக்கான பரிசுகள் உயர் அளவு பதிவுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.


இதற்கு துளிர் மற்றும் ஜந்தர்மந்தர் பதிவுகள் சேர்த்துக் கணக்கில் கொள்ளப்படும். இப்போட்டிகள் குறித்த அதிக விபரங்கள் தேவைப்படுவோர் மாநில ஒருங்கிணைப்பாளரையோ, மாவட்ட ஒருங்கிணைப்பாளரையோ தொடர்பு கொள்ளலாம். 


புதுவை மாநில ஒருங்கிணைப்பாளர் 


பா. ரவிச்சந்திரன் 
10, இரண்டாவது தெரு
பெருமாள் ராஜாத்தோட்டம்
ரெட்டியார்பாளையம்
புதுச்சேரி -10 
மின் அஞ்சல்: cerdpsf@gmail.com


விபரங்களுக்கு 0413 2290733, 94880 74341, 9442786122 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


மாநில ஒருங்கிணைப்பாளர் 


முனைவர்.அ.வள்ளிநாயகம் 

132சி,முனிசிபல் காலனி 6வது வீதி,      
தஞ்சாவூர்-613007                            
போன்-04362-240784                                  
செல்-94438 65864       

                                       


Friday, October 14, 2011

‘நோயர்’ விருப்பம்


வெகுகாலத்துக்கு முன் நடந்த சம்பவம் ஒன்று. ஒரு வயதான அம்மையார் மருத்துவரிடம் மூட்டு வலி என்று சென்றார். மருத்துவர் ஸ்டெதெஸ்கோப்பை எடுத்தார்.

அப்போதுஅந்த நோயாளி அதிச யித்தார். “நானும் எத்தனையோ டாக் டர்களிடம் காட்டிவிட்டேன். யாருமே இந்த குழாயை மூட்டில் வைத்துப் பார்க்கவே இல்லையே ராசா”

உஷாரான அந்த மருத்துவர் ஸ்டெதெஸ்கோப்பை மூட்டில் வைத்துப் பார்த்தார்.

பாட்டிக்கு பரம திருப்தி. அதில் வேடிக்கை என்னவெனில், மூட்டில் வைத்து விட்டு, பழக்கதோஷத்தில் டாக்டர் “மூச்சை நல்லா இழுத்து விடுங்க” என்றதுதான்!

ஒரு துணி எடுக்கச் செல்லும் போது நம் மனதில் ஒரு எதிர்பார்ப்பு இருப்பதுபோல், மருத்துவரிடம் செல்லும்போது நோயுற்றவர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இன்ன வியாதிதான் நமக்கு. அதற்கு இது தான் காரணம். இதுதான் வைத்தி யம் என்று ஒரு எதிர்பார்ப்போடு தான் வருவார்கள். திறமையைவிட இந்த ‘நோயர்’ விருப்பத்தைப் பூர்த்தி செய்வதே ஒரு மருத்து வரைப் புகழ்பெற்றவராக்குகிறது.

எல்லா நோய்களுக்கும் ஊசி போட்டால்தான் சரியாகும் என்பது பெரும்பாலான நோயர் விருப்பமாக உள்ளது. அதிலும் சிலர் வலது கை வலி என்று போனேன், இடதுகை யில் ஊசி போட்டுவிட்டார்கள் என்று நுகர்வோர் நீதிமன்றம் வரை போவதுண்டு.

நெல்லை டவுனில் ஒரு புகழ் பெற்ற மருத்துவர் இருந்தார். அவரது கிளினிக் திஹார் ஜெயில் போல் நிரம்பி வழியும். காரணம் அவரது தனித்தன்மையே. நாம் எந்தப்பகுதியில் வலி என் கிறாமோ அந்தப்பகுதியிலேயே ஊசி போடுவார். சற்றும் மிகைப்படுத்த லற்ற உண்மை இது. இது தெரியா மல் வரிசையில் காத்திருந்த ஒருவர் இந்த விஷயத்தைக் கேள்விப்பட் டதும், தலை தெறிக்க வெளியே ஓடி விட்டார். வேறு ஒன்றுமில்லை; அவர் மூல வியாதிக்காகச் சிகிச்சை பெற வந்திருந்தார்.

இப்பொழுதெல்லாம் குழந்தை பெறுவது கூட இயற்கையாக அன்றி நாள் நட்சத்திரம் பார்த்துப் பெரியவர் களின் விருப்பப்படிதான் நடைபெறு கிறது. “ரோகிணி நட்சத்திரம் வேண் டாம். மாமாவுக்கு ஆகாது. அதனால் இன்னும் இரண்டு நாள் கழித்து சிசேரியன் வைத்துக் கொள்ளலாமா டாக்டர்” என்று கேட்பது சாதாரண மாகிவிட்டது. எதிர்காலத்தில் மகப் பேறு மருத்துவமனைகளில் ட்யூட்டி டாக்டர் போல் ட்யூட்டி ஜோதிடர் களும் இருக்கலாம்.
நோயுற்றவரின் எதிர்பார்ப்பும், உடன் இருப்பவரின் விருப்பமும் வேறு வேறாக இருக்கும். மேலை நாட்டில் பத்து வருடங்களாக மூக் கடைப்பால் அவதிப்பட்டிருந்த ஒரு பெண், மூக்கடைப்பு சரியானதும், கணவர் மீது துர்நாற்றம் அடிக்கிறது என்று விவாகரத்து செய்துவிட்டார்.

எதற்காக சிகிச்சைக்கு வருகி றார் என்பதைத்தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம். குடிப்பழக்கத் தினால் பாதிக்கப்பட்ட ஒருவர் என் னிடம் வந்தார். “குடிச்சு குடிச்சுக் கையெல்லாம் ரொம்ப நடுங்குது டாக் டர். எப்படியாவது நீங்கதான் இதை நிறுத்தணும்” என்றார்.

‘கவலைப்படாதீங்க! உங்க குடிப் பழக்கத்தை நிறுத்திடலாம்’ என் றேன். திடுக்கிட்ட அவர், “அதெல் லாம் வேண்டாம் டாக்டர். இந்த கை நடுக்கத்தை மட்டும்நிறுத்துங்க! சரக்கெல்லாம் கொட்டி நிறைய வீணாகுது” என்றார்.

ஒரே வியாதியால் இருவர் பாதிக் கப்படலாம். ஆனால் இருவரும் ஒன் றல்ல. நேயர் விருப்பம்போல் நோயர் விருப்பமும் தனித்தன்மையுடையதே.

டாக்டர் ஜி.ராமானுஜம்
நன்றி: புதிய ஆசிரியன் 

Tuesday, September 6, 2011

பாட்டல் தண்ணீர் குடிப்பவரா ஒரு நிமிடம் :வீடியோ





பாட்டலில் அடைத்து வைக்கப்படும் தண்ணீரைக் குடிப்பது ஆரோக்கியமானது அல்ல.

Saturday, August 27, 2011

தேசிய அறிவியல் ஆசிரியர்கள் மாநாடு 2011


 தேசிய அறிவியல் ஆசிரியர்கள் மாநாடு, தேசிய அறிவியல் தொழில்நுட்ப மையம் (NCSTC)> அறிவியல் தொழில் நுட்பத்துறை(DST)  புதுடெல்லி,மற்றும் தேசிய அறிவியல் தொழில் நுட்பமைய கூட்டுக்குழு( NCSTC-NETWORKபுதுடெல்லி ஆகிய அமைப்புகள் இனைந்து கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை இப்மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

 இம்மாநாடு நாட்டில் உள்ள அறிவியல் ஆசிரியர்களுக்கு இடையே அடிப்படையான தொடர்பை ஏற்படுத்தவும், அவர்களுக்கு இடையே அறிவியல் விழிப்புணர்வையும், அறிவியல் மனப்பான்மையை வளர்ப்தற்காக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இம்மாநாட்டின் மூலம் ஆசிரியகள் சமூகத்தினர்களிடையே புதிய கருத்துகளை பரிமாறிக்கொள்ளவும்,அறிவியல் கல்வியில் உருவாகி உள்ள ஆக்கபூர்வமான புதிய முறைகளை பரிமாறிக்கொள்ளவும், அடிப்படையாக அமைவதோடு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உருவாகி உள்ள அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை மற்றவர்கள் பகிர்ந்துக்கொள்வதற்கான வாய்ப்பை இந்த மாநாடு ஏற்படுத்தி வருகிறது.



இந்தியாவில் மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்படும் இம்மாநாடு இந்த ஆண்டு “அறிவியல் கல்வியின் சாவல்கள் மற்றும் வளர்ச்சி”(Trends & Chanllengs in Science Education)  என்ற கருப்பொருட்ளை மையமாகக் கொண்டும்இ துணைத் தலைப்புகளாக 1. “அறிவியல் கற்றல் -கற்பித்திதலில் புதுமைகள்” 2. “அறிவியல் பாடங்களை தொடர்புப்படுத்துதல்” 3. “வேதி அறிவியல் மற்றும் வாழ்க்கைத்தரம்” ஆகிய தலைப்புகளில் நடத்தப் படுகிறது. இம்மாநட்டில் ஆசிரியர்கள்இ கல்வியாளர்கள், ஆராய்ச் சியாளர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், பி.எட் கல்லுரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியரிகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் பங்கேற்கலாம்.



 மேற்கண்ட முன்று தலைப்புகலை அடிப்படையாக கொண்டு ஆங்கிலம் அல்லது இந்தியில் ஆய்வுகட்டுரைகள், சுவரொட்டிகள் தயாரித்து வரும்  அக்டோபர் 15 2011 க்குள் பேரா.P.ளு வர்மா, தேசிய ஒருங்கிணைப்பாளர், தேசிய அறிவியல் ஆசிரியர்கள் மாநாடு, அறிவியல் கல்லலூரி, பட்னா,பீகார்-800005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு: http://www.ncstc-network.org/ntsc6/index.php மற்றும் புதுவை அறிவியல் இயக்கத்தை அனுவகவும். தொடர்பு எண்கள்: 04132290733, 9488074341, 944322588.


Friday, August 5, 2011

புதுவை "கல்விக் கருத்தரங்கம்"




புதுவை அறிவியல் இயக்கம் சார்பாக 06.08.2011 சனிக்கிழமை கல்விக் கருத்தரங்கமும் புதுவை அறிவியல் இயக்கத்தின் பொதுக்குழுவும் நடைபெற உள்ளது.

காலை 10.00 மணிக்கு புதுவை செயின்ட் பேட்ரிக் மேனிலைப் பள்ளி வளாகத்தில் அறிவியல் இயக்கத்தின் தலைவரும், ஜிப்மர் குழந்தைகள் நல தலைமை மருத்துவருமான திரு.S.சினிவாசன் அவர்கள் தலைமையில் நடைபெறும் கருத்தரங்க துவக்க விழாவிற்கு மாண்புமிகு கல்வி அமைச்சார் P.M.L கல்யாணசுந்தரம் அவார்கள் கருத்தரங்கை துவக்கி வைத்து சிறப்புரையாற்றவும் உள்ளார்.

தலைசிறந்த கல்வியாளரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான டாக்டர் வே.வசந்திதேவி அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார்.

சமச்சீர் கல்விகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர்களில் ஒருவரும் கல்வியாளருமான N. மாதவன் அவர்களும், “புதுவையின் உயர்கல்விகுறித்து புதுவை பல்கலைக் கழகத்தின் சர்தேச கல்வி மற்றும் அரசியல் துறை பேராசிரியர் டாக்டர். லாசரஸ் சாம்ராஜ் அவர்களும்,  “கற்பித்தல் முறையும் ஆசிரியர் கல்வியும்குறித்து புதுவை அறிவியல் இயக்கத்தின் துணைத் தலைவர் டாக்டர்.தா.பரசுராமன் அவர்களும்,  “கல்வித்தரம்குறித்து புதுவை அறிவியல் இயக்கத்தின் துணைத் தலைவர் ஹேமாவதி அவர்களும், “இலவசக் கட்டாயக் கல்விகுறித்து புதுவை அறிவியல் இயக்கத்தின் துணைத் தலைவர் தட்சணாமூர்த்தி அவர்களும், உரை நிகழ்த்த உள்ளனர். அறிவியல் இயக்க செயலர்  ரவிச்சந்திரன் கருத்தரங்க வரவேற்புரையாற்றவும், அறிவியல் இயக்க பொதுச்செயலார் s.சேகர், நோக்கவுரையாற்றவும், செயலர் ஆர்.மாரிமுத்து நன்றியுரை நிகழ்த்தவும் உள்ளனர்.

 பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெற உள்ள பொதுக்குழுவிற்கு காரைக்கால் மாவட்டத் தலைவர் பேராசிரியார் கே.சம்பந்தம் தலைமை ஏற்கவும், செயல் அறிக்கையை இயக்க பொதுச்செயலாளர் S.சேகர் அவர்கள் முன்வைக்கவும், பொருளாளர் R.ரமேஷ் நிதிநிலை அறிக்கை வைக்கவும் உள்ளார். செயலாளர் மா.சுதார்சன் நன்றியுரையுடன் முடியும் பொதுக்குழுவில் அறிவியல் இயக்கத்தின் எதிர்கால வேலைகளும் திட்டமிடப்பட உள்ளது. புதுவையின் கல்வி நிலைகுறித்து, கல்விவளர்ச்சி குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

Thursday, June 23, 2011

எமனாகும் எண்டோசல்பான்

 அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது, அதனினும் அரிது கூன், குருடு, செவிடு நீங்கி பிறப்பது அரிது என்றார் அவ்வையார். அப்படி அழகிய மகனாய், மகளாய் பிறந்த மக்களுக்கு எமனாக எண்டோசல்பான் என்ற மருந்தை ஆளும் மத்திய அரசே வழங்கி கொல்வது சரியா? கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் எண்டோசல்பான் பூச்சி மருந்தால் ஏற்பட்ட பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. முத்தளமடா, ஸ்வர்க் போன்ற இடங்களில் இப்பூச்சிக்கொல்லி மருந்து ஹெலிகாப்டர் மூலம் முந்திரி மற்றும் மாம்பழத் தோட்டங்களில் தெளிக்கப்பட்டது. 

இதனால் அப்பகுதிகளில் அதிக அளவிலான நோய்களும், சிறுவர், சிறுமியருக்கு மன வளர்ச்சி குறைபாடும், மன நல பிரச்சனைகளும், நரம்பு மண்டல பாதிப்புகளும் ஏற்பட்டது. எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து குறித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது . உயர்நீதி மன்ற உத்தரவிற்கு இணங்க, கேரள அரசாங்கம் 2005ல் எண்டோசல்பானைத் தடை செய்தது. இன்றும் அதன் அபாயம் தொடர்கின்றன.
1995ம் ஆண்டு முதல் எண்டோசல்பான் பூச்சி மருந்தை பயிர்களுக்கு பயன்படுத்த ஆரம்பித்த பின்னணியில் இதுவரை 500 உயிர்கள் பலியாகியுள்ளன. 1970களுக்கு பிறகு என்று கணக்கிட்டால் சுமார் 4 ஆயிரம் பேர் எண்டோசல்பானால் உயிரிழந்துள்ளனர். இந்த பூச்சி மருந்தை பயன்படுத்தியதின் தொடர்விளைவால் இன்றைக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெரும் துயரத்தை அனுபவித்து வருகிறார்கள். 9ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் செவித்திறனை இழந்திருக்கிறார்கள், உடல் உறுப்பு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எண்டோசல்பான் எளிதில் ஆவியாகக் கூடிய பொருள். எண்டோசல்பான் மிக சுலபமாக காற்றில் கலந்துவிடும். 150 நாட்களுக்கும் மேலாக அழியாமல் இருக்கும். பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டுள்ள இடங்களில் மழைப் பெய்தால், எண்டோசல்பான் மழை நீரில் கலந்துவிடும். இதனால் மண்ணும், நீரும் விஷமாக மாறிவிடுகிறது. மண்ணில் விளையும் உணவுப் பொருட்களிலும், மனித உடலில் பெரும் பாதிப்புகளை நீண்ட காலத்திற்கு ஏற்படுத்தும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
குருதியில் நேரடியாகச் சுரந்து மனிதனின் பாலியல் செயல்பாடு முதல் பல்வேறு செயல்பாடுகளுக்குக் காரணமாகும் ‘என்டோகிரைன்‘ சுரப்பியை எண்டோசல்பான் தாக்குகிறது. இதனை பல்வேறு அறிவியல் ரீதியான சோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது நரம்பு மண்டலத்தை கடுமையாக பாதிக்கின்றது. “முக்கியமாக, கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளும் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நீண்டகாலம் அதிக அளவிலான எண்டோசல்பானை சுவாசிப்பதன் காரணமாக, மன நல வளர்ச்சியின்மை, மன நல குறைபாடு, நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்கள், குழந்தைகள் பிறக்கும்போதே குறைபாடுடன் பிறத்தல் போன்ற விளைவுகளால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்”. இத்தோடு ஆண் மற்றும் பெண் இனப்பெருக்கத் தன்மையையும் பாதிக்கின்றது. பருத்தி மற்றும் முந்திரி பயிர்களுக்காக பயன்படுத்தப்படும் எண்டோசல்பான் பூச்சி மருந்து உலகிலேயே அதிகமாக உபயோகப்படுத்தப்படுவதும், பரிந்துரைக்கப்படுவதும் இந்தியாவில் தான் என புள்ளிவிபரங்கள் கூறுகிறது. “இந்தியாவில் எண்டோசல்பான் 48 பெயர்களில் விற்கப்படுகிறது.” கர்நாடகா, பஞ்சாப் அசாம் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் இது அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காய்கறிகள், பழங்கள், பயிர்கள், முந்திரி, முருங்கை, வெங்காயம் உள்ளிட்ட பயிர்களுக்கு கூடுதலாக பயன்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் 2011 மே 20ம் தேதி அன்று வால்பாறை அருகே உள்ள காஞ்சமலை பகுதியில் கருமலை குரூப் நிர்வாகத்திற்கு உட்பட்ட தேயிலை தோட்டத்தில் எண்டோசல்பான் மருந்து தெளிக்கப்பட்ட போது காற்றில் பரவியது. தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 16 பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கேரளமும், கர்நாடகமும் தடை செய்துள்ள எண்டோசல்பான் பூச்சி மருந்தை உடனடியாக நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன. மனித வாழ்வுக்கும், மண்வளத்திற்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் கடுமையான சேதாரத்தை ஏற்படுத்தி வருகிறது. அப்படிபட்ட இந்த ரசாயன மருந்து இன்னும் நமது நாட்டில் பகிரங்கமாக விற்கப்பட்டு வருகிறது. கேரளாவில் தடை இருந்தாலும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து தங்கு தடையின்றி சென்று கொண்டிருந்தது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் உடன் தடை செய்யப்பட வேண்டும் என்றபோது தடை செய்வது குறித்து ஆய்வு நடத்த குழு அமைக்கப்படும் என்றார் முன்னாள் முதல்வர் திரு. மு.கருணாநிதி அவர்கள். கடந்த கேரள இடது முன்னணி அரசு தனது அதிகார வரம்புக்கு உட்பட்டு, எண்டோசல்பானால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் அளித்தது. ஆனால், மத்திய அரசு, பாதிக்கப்பட்ட மக்களை பற்றி சிந்திக்கவோ, உதவிடவோ எந்த முயற்சியும் செய்யவில்லை.
 எண்டோசல்பான் 125 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், நம் நாட்டிலும் இதற்கு தடை விதிக்கக்கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கேரள மாநிலக்குழு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது.
எண்டோசல்பானால் மனித உயிருக்கும், சுற்றுச் சூழலுக்கும் எந்தவிதத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறித்து ஆராய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் டைரக்டர் ஜெனரல் தலைமையிலும், விவசாய கமிஷனர் தலைமையிலும் இரண்டு கமிட்டிகளை சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ளது. எண்டோசல்பான் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டுமா அல்லது தற்போதுள்ள கையிருப்புகளுக்கு மட்டும் தடைவிதித்து, இந்த மருந்தில் மாற்றம் செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து இந்த கமிட்டி அறிக்கை அளிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மற்ற எல்லா விஷயங்களை விட மனித உயிர் மேலானது என்பதால், எண்டோசல்பானை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் எட்டு வார காலத்துக்கு தடை விதிப்பதாக நீதிபதிகள் தங்கள் இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். மறு உத்தரவு வரும் வரை எண்டோசல்பான் உற்பத்தியாளர்களின் லைசென்சை முடக்கி வைக்கும்படியும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மையத்தின் ஆய்வுக் குழுவும், 3 ஆண்டு காலம் தீவிர ஆய்விற்கு பின் எண்டோசல்பான் பூச்சி மருந்தை, உலகம் முழுவதிலும் தடை செய்ய வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது. ஸ்டாக் ஹேம் சுற்றுச்சூழல் மாநாட்டில், தடை செய்யப்பட வேண்டிய மருந்துகள் தொடர்பாக இந்தக் குழு முன்வைத்துள்ள பட்டியலில் எண்டோசல்பான் முதலிடத்தில் உள்ளது. உலகிலுள்ள 173 நாடுகள் எண்டோசல்பான் போன்ற நச்சுத்தன்மை மிக்க பூச்சிக்கொல்லி மருந்துக்கு சர்வதேச அளவிலான தடை பிறப்பிப்பது குறித்து விவாதித்தன. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட 125 நாடுகள் எண்டோசல்பானுக்குத் தடை விதித்துவிட்டன. மீதமுள்ள 48 நாடுகளில் 47 நாடுகள், மௌனம் காத்தன. இந்தியா மட்டும் தான் எண்டோசல்பானை தடை செய்யக்கூடாது என வாதிட்டது.
உலகில் 70 சதவீத எண்டோசல்பான் இந்தியாவில் தான் தயாரிக்கப்படுகிறது. மிச்சமுள்ள 30 சதவீதத்தை பிரேசிலும் இஸ்ரேலும் தயாரிக்கின்றன. உலகின் மொத்த உற்பத்தியான 12,800 டன்னில், இந்தியாவில் மட்டும் 9000 டன் எண்டோசல்பான் உற்பத்தி செய்யப்படுகிறது. எண்டோசல்பான் மருந்தினை தயாரித்த ஜெர்மன் நிறுவனம் உற்பத்தியை நிறுத்திவிட்டது. இப்போது அந்த நிறுவனம் புதிய மருந்தை கண்டுபிடித்து அதை வளரும் நாடுகள் மீது திணிக்கவே, எண்டோசல்பான் மீதான தடையை அந்த நிறுவனமே ஆதரித்து வருகிறது என்று இந்திய எண்டோசல்பான் மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இந்திய பூச்சி மருந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் தாவே, புகார் கூறியுள்ளனர். ஒரு லிட்டர் எண்டோசல்பானில் விலை ரூ. 286 ஆகும். ஆனால், இதற்குப் பதிலாக ஐரோப்பிய நிறுவனங்கள் பரிந்துரைக்கும் பூச்சி மருந்தின் விலை லிட்டர் ரூ. 2,000ல் இருந்து ரூ. 13,000 வரை இருக்கும் என்கிறார்கள்.
இப்படி கார்ப்பரேட் நிறுவனங்களின் வர்த்தக போட்டியில் சாதாரண விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், எதிர்கால சந்ததியினர், மண்வளம் பாதிக்கப்படுவதை பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் லாபவெறியில் மனித வாழ்வோடு விளையாடிக் கொண்டிருக்கின்றனர். 
ரசாயன மருந்துகள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்ப்பந்தத்திற்கு அடி பணியாமல், கோடிக்கணக்கான விவசாயிகள், பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாடு முழு வதும் மேலும் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க உடனடியாக எண்டோசல்பான் மருந்துக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். இந்த மருந்தை பயன்படுத்தியதால் ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பிடவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கவும் ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும்.


செ.முத்துக்கண்ணன்
இளைஞர் முழக்கம்
ஜூன்2011

Monday, June 13, 2011

அறிவியல் முரசு மாத இதழ்

Ariviayal Murasu June 2011

Friday, June 10, 2011

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 புத்தக அறிமுகம்


எப்பொழுதோ வந்திருக்கவேண்டிய இச்சட்டம் தற்போதாவது வந்திருப்பது மகிழ்ச்சியே. மக்களிடம் இச்சட்டம் குறித்த விழிப்புணர்வே இதன் பயனை அடைவதற்கும் குறைகளைக் களையக் குரல் கொடுக்கவும் உதவும் என்ற உயரிய நோக்கில் உருவாக்கப்பட்ட புத்தகம் இது.

ஆசிரியர் : இரா. தட்சிணாமூர்த்தி
எ. சுவாமிராஜ்
விலை: ரூ. 15
பக்கம் : 62

பதிப்புஅறிவியல் வெளியீடு ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & புதுவை அறிவியல் இயக்கம் )
ஆனுகவும் / அழைக்கவும்


புதுவை அறிவியல் இயக்கம்
10.இரண்டாவது தெரு ,பெருமாள் ராஜா தோட்டம்,ரெட்டியார்பாளையம்
புதுச்சேரி
தொலைப்பேசி எண்கள்.0413-2290733


தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
245, அவ்வை சண்முகம் சாலை
கோபாலபுரம்
சென்னை-86
தொலைப்பேசி எண்கள்:044-28113630