Showing posts with label சூரியகிரகணம். Show all posts
Showing posts with label சூரியகிரகணம். Show all posts

Wednesday, June 1, 2011

வானின் கண்ணாமூச்சி.. ஜூன்..1 ,2011 ..! சூரிய கிரகணம்...!


     அட.. கிரகணமே..! 
   
சூரிய கிரகண நிகழ்வு நேரம்.. நகர் படம்
   
முழு, பகுதி சூரிய கிரகணம் உருவாதல்
     கிரகணம் என்பது ஓர் அருமையான  வானியல் நிகழ்வு. வானில் சுற்றி வரும் பொருள் ஒன்று தற்காலிகமாக வேறொரு வான் பொருளால் மறைக்கப்படும்போது அதனை கிரகணம் (Grahan)என்று அழைக்கப்படுகிறது.கிரகணம் என்பது ஒரு கிரேக்க சொல். இதற்கு அனாதையாய் தனித்து விடப்பட்ட/மறைக்கப்பட்ட என்பதே பொருளாகும்.  பொதுவாக கிரகணம் என்பதை  சூரிய, சந்திர கிரகணங்களையே குறிக்கும் சொல்லாக நாம் கருதுகிறோம். இந்த சூரிய, சந்திர கிரகணங்கள் சூரியன், சந்திரன் மற்றும் பூமிக்கு இடையே நடைபெறும் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு. நம் சூரிய குடும்ப பங்காளியான  வியாழன், சனி கோள்களிலும் அவைகளின் சந்திரன்கள் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் கடக்கும் போதும்,, இரட்டை விண்மீன்களுக்கிடையேயும்  கூட இந்த கிரகண விளையாட்டு தொடர்து நடந்து கொண்டே இருக்கிறது.  

      சூரியனைச் சுற்றி.. சுற்றி வரும் பூமி..!

உலகில் சூரிய கிரகணம் தெரியும் இடங்கள்
 
    இந்த சூரிய குடும்பத்தில் பூமியாகிய நாம் மட்டும் சுற்றவில்லை. நம் குடும்ப நாயகனான சூரியனும்கூட சுற்றுகிறது அதன் தாய்வீடான பால்வழி மண்டலத்தை. வானில் சூரியன், தட்டாமாலை சுற்றுவது போல, தன்னைத்தானே தக தகவென இருந்து சுற்றிக்கொண்டு,தான் வசிக்கும் பால்வழி மண்டலத்தையும் நொடிக்கு சுமார் 220 -250 கி.மீ வேகத்தில் சுற்றி வருகிறது.இது தன்னிடம் உள்ள ஹைடிரஜனை தொடர்ந்து எரித்தே நமக்கு இப்படி ஒளி வீசும் வாயுப் பந்துதான் சூரியன். இதுவும் கூட ஒரு விண்மீனே..! சூரியன் தனது ஈர்ப்பு சக்தியால்,தான் சுற்றுவது மட்டுமின்றி, தனது குடும்ப உறுப்பினரான  8 கோள்கள், அவற்றின் துணைக்கோள்கள், விண்கற்கள் மற்றும் தனது குடும்ப கடைசி உறுப்பினரான வால் மீன்களையும் இழுத்துக்கொண்டே  சுற்றி வருகிறது.     சூரியனின் விட்டம் 13 , 84 ,000000 கி.மீ. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு, 14 ,9565139.438 கி.மீ. ஆனால் இந்த பிரம்மாண்டமான சூரியனை,3 474.8 கி.மீ விட்டமுள்ள குட்டியூண்டு நிலா , தன் நிழலால், சூரியனை நம் பார்வையிலிருந்து மறைக்கும் விளையாட்டுத்தான்  நாளை நிகழ உள்ளது. 


முழு சூரிய கிரகண நிகழ்வைக் கண்டே, கிரேக்கர்கள் சூரியக் கடவுளின் வடிவை, இறக்கையுடன் வடித்தனர்.

     நமக்கு இந்த தூரம், தொலைவு பற்றி  ஒரு வினாக் குறி/ சந்தேகம் மனதுள் எழும். அது சரி.. இந்த சந்திரனோ ரொம்ப பொடிசு..! இது எப்படி இவ்...வ்ளோ. பெரிய அசுர சூரியனை மறைக்கிறது என்பதுதான்.! சூரியனின் விட்டம் சந்திரனின் விட்டத்தைப் போல 400 மடங்கு அதிகம். அதே போல, சூரியனுக்கும்,பூமிக்கும் இடையிலுள்ள தூரம் , பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலுள்ள தூரத்தைப் போல 400 மடங்கு அதிகம். இது ஓர் அரிதான ஒற்றுமை/ஒப்புமை எனலாம். எனவேதான், நாம் பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியனும், சந்திரனும் ஒரே அளவில் காணப்படுகிறது. 
     எல்லா அமாவாசையும் .. கிரகணம்.. வராதா..? கருப்பு ..நிலா..!
     
முழு சூரிய கிரகணம்/கருப்பு நிலா
   
    சூரியன் , சந்திரன்,பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திரனின் நிழல் சூரியனை மறைப்பதால் சூரிய கிரகண நிகழ்வு உண்டாகிறது.இதில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் இருக்கும். சூரிய கிரகணம் அமாவாசை நாளில்தான் உருவாகும். சூரியன்,பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் , முழு நிலா நாளில் வரும்போது சந்திர கிரகணம் உண்டாகும். இதில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி இருக்கும். பூமியின் நிழல் நிலவின் மேல் விழுகிறது. எல்லா அம்மாவாசை நாளிலும் சூரிய கிரகணமும், எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணமும் உண்டாவதில்லை. காரணம், சந்திரன் தன் அச்சில் 5 டிகிரி சாய்வாக பூமியைச் சுற்றுவதே..! இதனால் எல்லா சமயங்களிலும் சூரிய, சந்திர, பூமி நாயகர்கள் ஒரே நேர்கோட்டில் வருவதில்லை.  

    வருடத்தில்..படையெடுக்கும்..கிரகணங்கள்..!
  
©2011 Peter Prevec, ©2011 Peter Prevec
படிப்படியாய் உருவாகும் சூரிய கிரகணம்.. பிறை சூரியன்
     பொதுவாக ஓர் ஆண்டில், 2 -7 கிரகணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த 2011 ம் ஆண்டில் 4 பகுதி சூரிய கிரகணங்களும், 2 சந்திர கிரகணங்களும் தெரியும். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம், ஜனவரி 4 ம் நாள் நிகழ்ந்தது. அடுத்த சூரியகிரகணம் நாளை, ஜுன் முதல் நாள்தான். 
இந்த ஆண்டில் வரும் கிரகண அட்டவணை இதோ.! 
  • 2011 , ஜனவரி 4 , பகுதி சூரிய கிரகணம்.
    2011, ஜனவரி 4 ம் நால், சூரிய கிரகணம்
  • 2011 , ஜுன் 1 , பகுதி சூரிய கிரகணம் 
  • 2011 , ஜுன் 15 , முழு சந்திர கிரகணம்
  • 2011 , ஜுலை 1 , பகுதி சூரிய கிரகணம்
  • 2011 , நவம்பர் 25 , பகுதி சூரிய கிரகணம்
  • 2011 ,டிசம்பர் 10 , முழு சந்திர கிரகணம் 

     நாளை.. பூமி.. சந்திக்கும்.. சந்திர நிழல் ..இடங்கள்..!
   
2011,ஜூன் 1,பகுதி சூரிய கிரகணம் தெரியும்பகுதிகள். மஞ்சளாய் தெரிவது சூரியன் உதயம்,மறைவு.பசுமை நிறப் பகுதி கிரகணம் தெரியும் இடங்கள்

     நாளை 2011 ,ஜூன் 1 ம் நாள் பூமியின் வட பகுதி, ஒரு பகுதி சூரிய கிரகண நிகழ்வை அனுபவித்து மகிழப் போகிறது. இந்த சூரிய கிரகணம், நாளை சூரியன் உதிக்கும்போது பூமிப் பந்தின் வடபகுதியிலுள்ள சைபீரியாவில் மற்றும் வட சீனாவில் துவங்குகிறது. இங்கே, சூரிய கிரகணத்தின் பெனூம்ரா(penumbra)   எனப்படும், கருமை குறைந்த நிழல் பகுதி  இங்கேதான், 19 .25 .18 மணிக்கு (சர்வதேச நேரப்படி) பூமியை முதலில் தொட்டு முத்தம் தருகிறது. அதன் பின் இரண்டு மணி நேரம் சென்ற பின்னர், பெரிதான கிரகணம் சர்வதேச நேரப்படி,சரியாக 21 .16 .11 மணிக்கு நிகழ்கிறது.   அந்த நேரத்தில் கிரகணத்தின் அளவு 0.601 தான். சந்திரனின் நிழல் சூரியனை முழுமையாக மறைக்கவில்லை. ஆனால் இந்த அற்புதமான பகுதி கிரகணத்தின் சிறப்பு என்னவென்றால், சூரியன் நட்ட நடுநிசியில்  வட துருவ தொடுவானை ஆசையுடன் ஆர்வமாய் வட்டமிட்டு சுற்றும்போதுதான் , இந்த பகுதி சூரிய கிரகண நிகழ்வு உருவாகிறது என்பதுதான். அப்போது வடதுருவப் பகுதியில் ஆர்டிக் கடற்கரையில் வாழும் மேற்கு சைபீரிய மக்கள் இந்த கண்கொள்ளாக் காட்சியை  கண்டு களிப்பார்கள். பெரும்பாலும் அலாஸ்கா மற்றும் வட கனடாவினர் பகுதி சூரிய கிரகணத்தைக் காணும் வாய்ப்பு பெறுகின்றனர். ஆனால் பெனூம் பராவின் தெற்கு எல்லை வளைவாக தெற்கு பெர்பான்க்ஸ் கிலிருந்து புது  புருன்ச்விக்(south of Fairbanks to central New Brunswick) மற்றும்  நோவா ஸ்கொடியா (Nova Scotia)  வரை எட்டிப்பார்க்கிறது. 
    புது  நாடகத்தில்..நாயகர்.. ஒரு நாள் மட்டும்..நடிக்க.. வந்தாய்..! 
      
2011,ஜுன் 1 ம் நாள், சூரியகிரகணம்.. தெரியும் இடங்கள்
 
     
ஐஸ்லாந்தில், ஜுன் 1 ம் நாள், சூரியகிரகணம்.. 60%
      ரெய்க்ஜாவிக், ஐஸ் லாந்து (Reykjavik, Iceland) பகுதிகளில் பகுதி சூரிய கிரகணம் தெரிவது . 0.462 அளவு மட்டுமே.இதில் ஒரு அற்புதமும், அபூர்வ  நிகழ்வும் என்ன தெரியுமா? நார்வேயின் வட பகுத்து முழுவதும், ஸ்வீடன் மற்றும் பின்லாந்து போன்ற இடங்களில் நடுநிசி நாயகனான பகலவன், கிரகண காட்சியில் வட தொடுவானத்திற்கு மேல் தொங்கிக் கொண்டு திரியும். இந்த காட்சியை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் நண்பர்களே..! இந்த பகுதி சூரிய கிரகண விளையாட்டு சர்வதேச நேரப்படி 23 .06 .56 க்கு முடிவடைகிறது. அப்போது கிரகணத்தின் பெனூம்பரா பகுதி பூமியை விட்டுவிட்டு ஓடிப் போய்விடுகிறது.இந்த நாடகத்தின் கடைசிக்  காட்சி, அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள வட நியூபவுன்ட்லாண்டில்(north of Newfoundland) தான் நடைபெறுவதற்காக சூரிய, சந்திர நாயக நடிகர்களால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.  
       என்ன ஆனாலும்.. சூரிய.கிரகணம்..கலக்கல்தான்..!
      
2011, ஜூன் 1 ல், கனடாவில் கிரகணம்
  
 

 
 வட அமெரிக்கா, வட ஐரோப்பா மற்றும் வட ஆசிய மக்கள் இந்த பகுதி சூரிய கிரகணத்தைப் பார்க்கும் வாய்ப்பு பெறுகின்றனர். அலாஸ்காவின் மூன்றில் இருபகுதி மக்களும் , வட கனடாவும் நிலவின் நிழல் சூரியனின் 20 % மறைப்பதையே  காண முடியும். அதிக பட்ச மறைப்பு ரஷ்யாவின் வடக்கு கடற்கரையில் தான் நிகழ்கிறது. இங்கே சூரியவட்டத்தின் 60 % காணாமல் போகும், நிலவின் நிழல் இதன்மேல் படர்வதால்...!  சூரிய கிரகணம் என்பது, பகுதியாக இருந்தாலும் கூட அதி அற்புதமானதுதான் என்கிறார் வானவியல் இதழ்   ஆசிரியரான மைக்கேல் இ.பாக்கிச்(Michael E. Bakich). இதனுடன் ஒரு முறை நாம் பயணித்தால், வாழ்க்கையை முழுதும் அனுபவித்த இன்பத்தை நாம் பெற முடியும்.  

   
  
 
   கி.மு. 6 ம் நூற்றாண்டில் மெடோனிக் மற்றும் சாரோஸ் எனற வானவியல் விஞ்ஞானிகள் மீண்டும், மீண்டும்    வரும் கிரகணங்களைக் கவனித்தனர். அவை ஓர்ஒழுங்கு முறையில் வருவதைப் பார்த்தனர். அவற்றை வகைப் படுத்தினர். அவர்களின் பெயராலேயே கிரகணங்கள் வந்து போவதை சாரோஸ் சுழற்சி/காலம் மற்றும்  மெடோனிக் காலம் என்று அழைக்கப் படுகிறது. இன்று நாம் சாரோஸ் சுழற்சியையே பின்பற்றுகிறோம்.    பூமி மற்றும் சந்திரனின் பாதைகள் சந்திக்கும் புள்ளியிலிருந்து, சூரியன் நிலவினுடைய 18 .5  டிகிரி பாகைக்குள் இருக்கும்போது மட்டுமே சூரிய கிரகணம் நிகழ வாய்ப்பு உள்ளது. 18வருடங்கள், 11 நாட்கள், 8மணி நேரம் என்பது ஒரு சாரோஸ் சுழற்சி/காலம் ஆகும். 
     சாரோஸ் சுழற்சி 118 ..1280 ஆண்டுகள்..!
       
சாரோஸ் சுழற்சி 118..2029,சூரிய கிரகண ம்
       இந்த சூரிய கிரகணம் சாரோஸ் சுழற்சி 118 எண்ணைப் பெற்றுள்ளது.இந்த சாரோஸ் சுழற்சியில்
  மொத்தம் 72 கிரகணங்கள் உள்ளன. பகுதி கிரகணங்கள்:8 ;முழு கிரகணங்கள்:40 ; இடைப்பட்டது/ஹைபிரிட்:2 ; வளைய/கணக்கான கிரகணம்:15 ;அதன் பகுதி கிரகணம்:7 என மொத்தம் 72 கிரகணங்கள்.இதற்கான மொத்த காலகட்டம், 1280 ஆண்டுகள் ஆகும்.  இந்த சுழற்சியின் முதல் பகுதி சூரிய கிரகணம், தென் துருவத்தில் அண்டார்டிக்காவின் மேல் அற்புதமாய் குடிகொண்டது. அந்த நிகழ்வு நாள், 0803 ம் ஆண்டு, மே மாதம் 24 ம் நாளாகும்.ஒவ்வொரு 18 ஆண்டுகளிலும் இந்த சாரோஸ் சுழற்சி மீண்டும் மீண்டும் வரும்.இந்த முறை எனபது , சந்திரனின் நோடு/சாய்மானம்  வருவதைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த நூறாண்டு காலத்தில், இந்த சாரோஸ் சுழற்சி 118, தென் துருவத்திலிருந்து இப்போதுதான் வட துருவத்தை எட்டிப் பிடித்திருக்கிறது. இந்த சாரோஸ் சுழற்சி முடிய இன்னும் 5 கிரகணங்கள் பாக்கி உள்ளன. எப்போது முடியும் தெரியுமா..? அதனைப் பார்க்க 2083 , ஜூலை 15 வரை காத்திருக்க வேண்டும்..! அதுவும் வட தருவ ஆர்டிக் பகுதியில் தான் முடியும்..! நமது சந்ததிகள் பார்த்து/கேட்டு மகிழ்வார்கள்.
      சூரிய குடும்ப...கோள்களின்.. கிரகணங்கள் ..! 
      
சனியில்...
   
செவ்வாய்.. கிரகணம்
    நம் பூமி தவிர வேறு கோள்களில் இப்படி கிரகணத்தைப் பார்க்க முடியுமா? கட்டாயம் பார்க்கலாம். நமது பூமி போலவே, சூரிய குடும்ப உறுப்பினரான, செவ்வாய், வியாழன், சனி மற்றும் புளூட்டோவிலும் சூரிய கிரகணங்கள் நிகழும் நண்பா..! என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மைதான். செவ்வாய் கோளில், அதன் துணைக் கோள்களான, போபோஸ் மற்றும் டெய்மோஸ் மூலம் சூரிய கிரகணம் உண்டாகிறது. இங்கே  போபோஸ் வழித்தடத்தில் உருவாகும் கிரகணம் மிகக் குறைந்த நேரம், அதாவது 20 நொடிகள் மட்டுமே..! நமது குடும்பத்தின் பெரிய அண்ணாச்சியான வியாழனுக்கு 69 மேற்பட்ட துணைக் கோள்களும், ஏராளமான குட்டிக் குட்டி துணைக்கோள்களும், உள்ளன. இவற்றில் அமால்தியா, அயோ, யுறேபா, கனிமேடு மற்றும் காலிஸ்டோ என்ற 5 துணைக் கோள்கள் மூலம் மட்டுமே சூரிய கிரகணம் உருவாகிறது..! ஆனால் புதன் மற்றும் வெள்ளி கோள்களில் சூரிய கிரகணம் ஏற்படாது. ஏனெனில் இவைகளுக்கு துணைக் கோள்கள் இல்லை. 
      30 .. நாட்களில்.... 3 கிரகண..கொண்டாட்டங்கள்..! 
     இந்த மாத..ஜூன் 30 நாட்களுக்குள்  மூன்று கிரகண கொண்டாட்டங்கள் நமக்கு கிடைக்க இருக்கின்றன. ஆம் நண்பர்களே..! சூரிய கிரகணம் ஏற்பட்ட 15 வது நாளின் முன்போ/பின்போ கட்டாயமாய் சந்திர கிரகணம் உண்டாகும். இன்று.. ஜூன் முதல் நாள் பகுதி சூரிய கிரகணம். இன்னும் 15 நாட்களுக்குள், முழு சந்திர கிரகணம் ஜூன் 15 ம் நாள். அதனைத் தொடர்ந்தே அடுத்த 15 நாட்களுக்குள், ஜூலை 1 ம் நாள்,மீண்டும் பகுதி சூரிய கிரகணம் என்றால், வானின் இப்படி ஒரு சாகச விளையாட்டைக் காண நமக்கெல்லாம் சந்தோஷக் கொண்டாட்டம்தானே..!




Basic RGB கிரகண நிகழ்வு



2011,ஜுன் 1 ம் நாள், சூரியகிரகணம்..












அசிரியன் களிமண் பலகையில் கிரகண பதிவு




மெசபடோமியாவில் வான் ஆராய்ச்சி




சூரிய கிரகணம் உருவாதல்


கி.மு 1306 ல் பாப்பிரஸில் பதிவு

பேரா. மோகனா