சென்ற ஆண்டு கொல்கத்தாவில் 10-வது படிக்கும் ஒரு மாணவி தண்டவா ளத்தைக் கடக்கும்போது ரயில் மோதிய தில் அவளது உடல் கூழாகிவிட்டது. அலைபேசியைக் காதில் வைத்தபடி மூடப் பட்டிருந்த ரயில்வே கேட்டைக் கடந்து சென்ற அச்சிறுமி, 100 மீட்டர் தூரத்தில் வேகமாக ஒரு ரயில் வந்து கொண்டிருந் ததைக் கவனிக்கவில்லை. மற்றவர்கள் போட்ட சத்தமும் அவள் காதில் விழவில் லை. இந்த ஆண்டு ஹெளராவில் 10-வது படித்துக் கொண்டிருந்த நெருங்கிய நண் பர்களான இரு சிறுமிகளும் செல்போ னைக் காதில் வைத்தபடி தண்டவாளத் தைக் கடந்தபோது வேகமாக நெருங்கிக் கொண்டிருந்த ரயிலையோ, அருகிலிருந்த வர்கள் எச்சரிக்கை செய்து போட்ட கூச்ச லையோ கவனிக்கும் நிலையில் இல்லை. இவர்களெல்லாம் தங்கள் அலட்சியத்திற்கு விலையாக தங்கள் உயிரையே தர வேண்டியிருந்தது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
சிங்கப்பூரில் ஒரு சிறு பெண் குழந் தையின் பெற்றோர்கள் கணினித் திரை யில் மூழ்கியிருந்தபோது, பசியால் துடித்த அக்குழந்தை இறந்தே போய்விட்டது. தென் கொரியாவில் கணினி விளையாட்டி லேயே நேரத்தைச் செலவிட்டுக் கொண்டி ருந்ததற்காகத் திட்டிய அம்மாவை ஒரு சிறுவன் கொலை செய்துவிட்டுப் பின்னர் தற்கொலையும் செய்து கொண்டான். உல கெங்கிலும் வயது வித்தியாசமின்றி பல ரைப் பிடித்து ஆட்டும் இந்த மோகத்திற்கு ‘தொழில்நுட்ப அடிமைத்தனம் என்ற பெயர் கூட வைக்கப்பட்டுவிட்டது.
மின்னணுக் கருவிகள் நுகர்வோர் பற்றிய ரிட்ரீவோ என்ற இணையதளம் நடத்திய ஓர் ஆய்வில் ஃபேஸ்புக் அல்லது டிவிட்டரில் மூழ்குவதைக் கட்டுப்படுத்த இயலாத பல பெற்றோர்கள் தங்களது கட மைகளைப் புறக்கணிப்பதாக ஒத்துக் கொண்டனர். தொழில்நுட்பக் கருவிகளுக்கு அடிமைகளாவது பெரும்பாலும் இளைஞர் கள்தாம். தங்களுடைய சமூக வலைத் தளங்களுக்குள் 15 நிமிடங்களுக்கொரு முறை செல்வதென்பது பலருக்கு பழக்க மாகிவிட்டது. சிறிது நேரம் அந்த வலைத் தளங்கள் செயலிழந்து போனாலும் அவர் களால் பொறுக்க முடிவதில்லை. உண வையும் உறக்கத்தையும் கூட இதற்காக மறப்பவர்கள் இருக்கிறார்கள். ஆன்லைன் உரையாடல்களிலோ செல்போன் விளை யாட்டுகளிலோ ஈடுபட்டிருக்கும்போது, கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய அவ சரத் தேவையைக் கூட தள்ளிப் போடக் கூடிய அளவு சிலர் கிறுக்குப் பிடித்தவர் களாக இருப்பது கவலைக்குரியது.
இத்தகைய அளவுகடந்த தீவிரமான ஈடுபாட்டை உடற்கூறு வல்லுநர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவ தோடு ஒப்பிடுகின்றனர்.
தொழில்நுட்ப அடிமைகளை சிறிது நேரம் அவர்களுக் குப் பிரியமான கருவிகளிலிருந்து பிரித்து வைத்தபோது, போதைப் பொருள் கிடைக் காத போதைப் பொருள் அடிமைகள் படும் பாட்டினை ஒத்ததாக அவர்கள் நிலை இருந்ததாக வல்லுநர்கள் அந்த ஆய்வில் கண்டுபிடித்தனர். மேரிலாண்ட் பல் கலைக்கழகத்தில் ஊடகங்கள் பற்றிய சர்வ தேச மையம் 10 நாடுகளைச் சேர்ந்த 1000 பல்கலைக்கழக மாணவர்களிடம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், செல்போன் கள், எம்.பி.3 பிளேயர்கள் போன்ற சாத னங்களிலிருந்து 24 மணி நேரத்திற்கு விலகியிருக்குமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோரால் அது இயலவில்லை. துக்கம். தனிமை, கவலை போன்ற மன அழுத்தங்களுக்கும் இதயப் படபடப்பு போன்ற உடல்நலப் பாதிப்புக ளுக்கும் ஆளானதாக பல மாணவர்கள் தெரிவித்தனர். செல்போன் அருகில் இல் லாவிட்டாலும், செல்போன் ஒலி கேட்ப தைப் போன்ற பிரமை ஏற்பட்டதாகக் கூட ஒரு மாணவன் தன் அனுபவத்தை விவ ரித்தான்! அன்றாடம் தொழில்நுட்பக் கரு விகளோடு இருக்கும் தீவிரப் பிணைப்பு காரணமாக குடும்ப உறவுகள் சீர்கெட்டு வருவதாக பிரபல உளவியல் நிபுணர் ஆண்டனி கிட்மேன் தெரிவிக்கிறார்.
தொழில்நுட்பமும், தொழில்நுட்பக் கருவிகளும் உலகில் பல அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டிருக் கின்றன. ஆனால் அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, அவற்றின் அடிமை களாக நாம் மாறிவிடக் கூடாது. அப்படி மாறினால் நம்முடைய உடல்நலம், சமூக உறவுகள், ஏன், சமயத்தில் உயிரையே கூட அதற்கு விலையாகத் தர வேண்டி யிருக்கும். அளவுக்கு மிஞ்சினால் அமுத மும் விஷம் என்ற முதுமொழி நம் வாழ் வின் ஒவ்வோர் அம்சத்திற்கும் பொருந்தி வரு வதை நாம் கவனத்தில் கொள்வது நல்லது.
பேராசிரியர் கே. ராஜு
(உதவிய கட்டுரை : ஆகஸ்ட் மாத சயன்ஸ் ரிப்போர்ட்டர் தலையங்கம்)