Sunday, March 18, 2012

எண்ணெய் வித்துக்களிலிருந்து உயிரி எரிபொருள் அரசு ஊக்கப்படுத்துமா?




நாட்டின் எரிபொருள் தேவையை சமாளிக்க இறக்குமதியை மட்டுமே நம்பியிருந்தால் கடுமையான நெருக்கடியை சந்திக்க வேண்டி வரும். ஆகையால் உணவுக்கு பயன்படாத எண்ணெய் வித்துக்களில் இருந்து உயிரி எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்தியாவின் எரிபொருள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே, செல்கிறது. நாட்டின் மொத்த எரிபொருள் தேவையில் சுமார் 70 விழுக்காட்டிற்கு மேல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மக்கள் தொகை பெருக்கம், நாட்டின் வாகனங்கள் பெருக்கம், அவசியமற்ற ஆடம்பரம் என நாட்டின் எரிபொருள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தியாவில் எரிபொருள் பயன்பாடு சுமார் 63 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.சர்வதேச எண்ணெய் சந்தையில் ஏற்பட்டு வரும் நிலையற்ற தன்மை, தவறான பொருளாதார கொள்கை காரணமாக எதிர்காலத்தில் எரிபொருள் விஷயத்தில் நம்நாடு நெருக்கடியை சந்திக்க வேண்டிவரும். ஏற்கனவே கச்சா எண்ணெய் மூலம் தயாரிக்கப்படும் பெட்ரோல்-டீசலை உபயோகிப்பதால் ஏற்படும் பருவ நிலை மாற்றங்கள் சுற்றுச்சூழலை மிகவும் பாதிப்பதாக உள்ளது.

இத்தகைய சூழலில் கச்சா எண்ணெய் சார்ந்த எரிபொருளுக்கு மாற்றாக உயிரி எரிபொருளை உற்பத்தி செய்து பயன்படுத்துவதன் மூலம், நாட்டின் எரிபொருள் தேவையை சமாளிப்பதோடு மட்டுமல்லாமல் சுற்றுச் சூழலையும் பாதுகாக்க இயலும். உணவுக்கு பயன்படாத எண்ணெய் வித்துக்களில் இருந்து உயிரி எரிபொருள் எந்ததெந்த வித்துக்களில் இருந்து பெற முடியும் என்ற ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அதில், உணவுக்கு பயன்படாத எண்ணெய் வித்துக்களில் இருந்து உயிரி எரிபொருள் உற்பத்தி செய்வதற்கு வாய்ப்பு வசதிகள் அதிகமாக இருக்கிறது; ஆனால் அதனை நாம் முழுமையாக பயன்படுத்தவில்லை; கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு சதவிகிதமாவது இந்த உணவுக்கு பயன்பாடாத எண்ணெய்வித்துக்களில் இருந்து எடுக்கப்படும் உயிரி எரிபொருள் உற்பத்திக்கு கொடுத்தால், நமக்கான எரிபொருள் தேவையில் கணிசமான பகுதியை நாமே பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்று கூறுகின்றனர்.குறிப்பாக காட்டாமணக்கு, புன்னை,இலுப்பை, மற்றும் புண்ணை மரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் மூலம் உயிரி எரிபொருள் உற்பத்தி செய்ய இயலும் என்பது வெற்றிகரமாக கண்டறியப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.கச்சா எண்ணெய் மூலம் பெறப்படும் எரிபொருளை விட உயிரி எரிபொருள் எவ்விதத்திலும் குறைந்தது இல்லை என்பதும், குறிப்பாக சுற்றுச்சூழலுக்குஎவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என்பதும் ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற நீலகிரி மலை ரயில் இந்த உயிரி எரிபொருள் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.
உணவுக்கு பயன்படாத எண்ணெய்வித்துக்கள் என்று கண்டறியப்பட்டுள்ள இந்த மரங்களை வளர்ப்பதற்கு அதிக அளவில் தண்ணீர் தேவையில்லை என்பது கூடுதல் வசதி ஆகும். மேலும் தொடர் கவனிப்பும் தேவைப்படாது. அரசு சரியாக திட்டமிட்டு செயல்படுத்த ஆரம்பித்தால் மிகப்பெரிய பலனை அடைய முடியும். இந்தியாவில் பயனற்ற நிலையில் பல லட்சக்கணக்கான ஹெக்டேர் தரிசு நிலங்கள் இருக்கிறது. அந்த இடங்களில் புங்கன், கட்டாமணக்கு போன்ற எண்ணெய் வித்துக்களை பயிரிட்டு பயன்படுத்த துவங்கலாம். இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். கூடுதலாக தரிசு நிலங்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும்.

 இதன் மூலம் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும். இதுபற்றி மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் துரைராசு ஐ.எப்.எஸ். யிடம் கேட்டபோது:உணவுக்கு பயன்படாத உயிரி எரிபொருள் உற்பத்திக்கு காட்டாமணக்கு, புங்கன் உள்ளிட்ட 10 மர வித்துக்கள் மூலப்பொருட்களாக உள்ளன.

இந்த மாவித்துகள் உற்பத்தியில் கன்று நடுவது முதல் வளர்த்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவது வரை உள்ள பிரச்சனைகளை எளிதாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மரம் மற்றும் விதைகள் பற்றிய விபரங்களும், அதன் உயர்ந்த பலன் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கல்லூரி மாணவ- மாணவியருக்கு இது குறித்த சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்ததப்படுகிறது. இந்த முகாம்களில் உயிரி எரிபொருளின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உயிரி எரிபொருளுக்கான முலப்பொருட்கள் தயாரிப்பு முறைகள் விரிவாக விளக்கப்படுகிறது. மேலும் உயிரி எரிசக்தியின் மர வளர்ப்பு பற்றி மரப்பண்ணைகளுக்கு நேரிடையாக அழைத்துச் சென்று அவர்களின் சந்தேகங்களை நீக்குவதோடு, சிறந்த ஆலோசனைகளையும் பெறுகிறோம் என்றார். மின் சக்தியின் உற்பத்தியை எடுத்துக் கொண்டால் நிலக்கரி மூலம், காற்றின் மூலம், நீரின் மூலம், சூரிய ஒளியின் மூலம், அணுசக்தி மூலம் என பல முறைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
பல வகைகளில் தயாரிக்கப்படும் மின்சாரமே இன்றைய காலகட்டத்தில் மிகப் பெரும் பற்றாக்குறையாக நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் வகையில் தடைப்பட்டு வருகிறது.

 இதே நிலைதான் எரிசக்திக்கும். இறக்குமதியை மட்டுமே நம்பிக் கொண்டு அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொள்ளாமல், “ உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்த்துவிட்டது. அதனால் இங்கும்பெட்ரோல் - டீசல் விலையை தாறுமாறாக உயர்த்துவது தவிர்க்க இயலாதது” என விலையை உயர்த்துவதையேகொள்கையாக கொண்டிராமல், உணவுக்கு பயன்படாத எண்ணெய்வித்துக்களில் இருந்து உயிரி எரிபொருள் உற்பத்தி முறையை ஊக்கப்படுத்த அரசு முன்வர வேண்டும். அப்போதுதான் எரிபொருளின் தேவையை ஓரளவு பூர்த்தி செய்தும், சுற்றுச்சூழலையும் பாதுகாத்திட முடியும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

-இரா.சரவணபாபு