இந்தியாவில் இதற்கெனவே ஒரு அமைப்பு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்றது. அதுதான் BPNI (Breastfeeding Promotion Network of India) இந்த அமைப்பு உலக தாய்ப்பால் வார நிகழ்வை 1992 முதல்இந்தியாவில் ஒருங்கிணைத்து வருகிறது.
தாய்ப்பால் தருவது, தாயின் உடல்நலனுக்கும் உகந்தது. குழந்தை பிறந்த முதல் அரை மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க தொடங்க வேண்டும். முதல் முறை கொடுக்கப்படும் பால், குழந்தை யின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கப்படுகிறது. குழந்தைக்கு தேவையான புரதங்கள் இதில் அடங்கியுள்ளன. குழந்தை பிறந்தது முதல், ஆறு மாதம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் எனவும், குழந்தையின் உடல்நிலையை பொறுத்து 2 வயது வரை தாய்ப்பால் வழங்க வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனமும் வலியுறுத்துகிறது.
முழுமையான தாய்ப்பால் வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் 1.5 மில்லியன் குழந்தை மரணங்களைத் தவிர்க்க முடியும் (யுனிசெப்). தாய்ப்பால் கொடுக்கப்படாத குழந்தைகள், நோய்வாய்ப்படும் வாய்ப்பு அதிகம். குழந்தை மரணங்களும் தாய்ப்பால் தருவதால் தவிர்க்கப்படுகிறது. ஒவ்வாமை, காதுகளில் ஏற்படும் தொற்று போன்றவற்றிலிருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. குழந்தைகளின் பற்கள், நாக்கு உட்பட பேச பயன்படும் உறுப்புகள் வேகமாக வளர்ச்சியடைய தாய்ப்பால் தருவது அவசியம். குழந்தைக் கும்,தாய்க்கும் இடையேயான பிணைப்பு தாய்ப்பால் தருவதன் மூலம் அதிகரிக்கிறது.
பாலூட்டும் தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோயின் ஆபத்து 50 % குறைகிறது. சரியான தாய்ப்பால் பெற்ற குழந்தை களின் நுண்ணறிவு பிற குழந்தைகளை விடவும் 8 புள்ளிகள் அதிகமெனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இது தவிர நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகளும் சில புள்ளி விபரங்களும் இருக்கின்றன. உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 6.9 மில்லியன் குழந்தைகள் இறக்கின்றனர். நாளொன்றுக்கு சுமார் 14000 குழந்தைகள் இறந்து கொண்டுதான் இருக்கின்றனர். சரியான முறையில் தாய்ப்பாலூட்டு வதன் மூலம் 8,30,000 குழந்தை இறப்புகளைத் தடுக்க முடியும். குழந்தை பிறந்த 1 மணி நேரத்தில் பாலூட்டுவதன் மூலம் 22% இறப்புகளையும் 24 மணி நேரத்திற்குள் பாலூட்டுவதன் மூலம் 16% இறப்புகளையும் தவிர்க்க இயலும்.
குழந்தை பிறந்தவுடன் 1 முறை பாலூட்டுவதும் 1 நாள் கழித்து 3 முறை பாலூட்டுவதும் சமமே. 6 மாதங்களுக்கு முழுமையான தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகள் நிமோனியாவில் இறப்பதற்கு 15 மடங்கும், வயிற்றுப் போக்கால் இறப்பதற்கு 11 மடங்கும் வாய்ப்புள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக் கின்றன. உலகில் 93 பில்லியன்/ மூன்றில் இரண்டு மடங்கு குழந்தை களுக்கு 6 மாதங்களுக்குள்ளாகவே தாய்ப்பால் தவிர்த்த செயற்கை உணவுகள் வழங்கப்படுகின்றன. குழந்தைகளுக்கான பால் வர்த்தகம் மட்டுமே உலக அளவில் 25 பில்லியன் டாலர் அளவிற்கு நடைபெறுகிறது.
குழந்தை உணவுப்பொருள் தயாரிப்பு தொழில் வளர்ச்சியில் 31% இலக்கு நிர்ணயித்துள்ளனர். அவர்களின் முக்கிய வியாபாரச் சந்தையாக / இலக்காக இருப்பது நமது ஆசியக் கண்டமே.
தாய்ப்பால் வாரம்:
WABA அமைப்புதான் சர்வதேச அளவில் இந்த தாய்ப்பால் வாரம் நிகழ்வை ஒருங்கிணைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மையக்கருத்து வலியுறுத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான மையக் கருத்தாக தாய்ப்பாலுக்கு ஆதரவு: அன்னையருக்கு நெருக்கமாக. Breastfeeding Support: Closed to Mothers) என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிகழ்வை அனுசரிப்பதற்கான காரணங்கள் ஐந்து. 1. தாய்ப்பால் விழிப்புணர்வு குறித்த கவனத்தை ஈர்ப்பது 2. பேறுகாலப் பெண்களுக்கு அனுபவ தாய்மார்களின் ஆலோசனைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவது. பேறுகால பெண்களுக்கான ஆலோசனை முகாம்களை நடத்துவது. 3. தாய்ப்பால் ஆதரிப்போரை பயிற்சிகள் மூலம் மேம்படுத்துவது 4. பேறுகால பெண்களுக்கு ஆதர வாக உள்ளூர் சமூக ஆதரவைத் திரட்டுவது 5. பேறுகாலப் பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்க சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 10 படிநிலைகளைப் பின்பற்ற அரசுகளை வலியுறுத்துவது. முழுமையாக தாய்ப்பால் வழங்குவோர் சராசரியை உயர்த்தவும் அரசுகளை வலியுறுத்துவது.
உலக சுகாதார நிறுவனம் & யுனிசெப் தாய்ப்பால் ஆதரவு, விழிப்புணர்வுக்காக அறிவித்துள்ள பத்து படிநிலைகள்:
1. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை எழுத்துப்பூர்வமான தகவல றிக்கைகளின் மூலமாக அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் தொடர்ந்து நினைவூட்டப்பட வேண்டும்.
2. தாய்ப்பால் ஊட்டச்செய்வதற்கான பணிகளைச் செய்வதற்கான முறையான பயிற்சி சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
3. அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் தாய்ப்பாலின் அவசியம் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.
4. பிரசவம் நிகழ்ந்த அரை மணிநேரத்திற்குள் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டத் தொடங்கிட உதவ வேண்டும்.
5. குழந்தையிடமிருந்து தனித்திருந்தாலும் தாய்மார்களுக்கு பாலூட்டலுக்கான பயிற்சியளித்தல் வேண்டும்.
6. மருத்துவ உதவிக்காக மட்டும் அன்றி வேறெவ்வித காரணத் திற்காகவும் குழந்தைக்கு தாய்ப்பால் தவிர்த்த திட> திரவ உணவுகளைக் கொடுக்கக் கூடாது.
7. தாயும் சேயும் ஒன்றாக இருக்க செய்தல் வேண்டும்.
8. தேவைக்கேற்ப தாய்ப்பாலூட்ட ஊக்குவிக்க வேண்டும்
9. பால் பாட்டில்கள் தடை செய்வது
10. தாய்ப்பால் ஆதரவு குழுக்கள் அமைத்து மருத்துவமனை, கிளினிக்-ல் இருந்து சென்ற பின்பும் தாய்மார்களுக்கு ஆலோசனை, ஆதரவு அளித்திட வேண்டும்.
மேலும் பேறுகாலப் பெண்கள் குழந்தைகளுக்கு முழுமையாக தாய்ப்பாலூட்ட ஐந்து புறச்சூழல் ஆதரவு தேவை எனவும் றுஹக்ஷஹ அமைப்பு வலியுறுத்துகிறது. அதாவது 1. குடும்ப, சமூக ஆதரவு, 2. பணியிடம், சுற்றுச்சூழல் 3. அவசரகாலச்சூழலிலும் உரிய ஏற்பாடுகள் (உம்.உத்தரகாண்ட் வெள்ளப்பாதிப்பு போன்ற பேரழிவு நேரங்களில் கூட) 4. சுகாதார நிலைமை 5.அரசுத்தரப்பு (ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, சட்ட திட்டங்கள் வகுப்பதில்)
தாய்ப்பால் வழங்குவதில் என்ன பிரச்சினை?:
தாய்ப்பால் வழங்குவதை அப்பெண்ணின் சமூக, பண்பாடு,கலாச்சார, பொருளாதார,கல்விப் பின்புலங்களும் தீர்மானிக்கின்றன என்பதை பல்வேறு ஆய்வுகளும் கூறுகின்றன. முக்கியமாக எங்கும் எதிலும் லாபம் ஒன்றே குறியெனத் திரியும் பன்னாட்டு, உள்நாட்டு
பகாசுரக் கம்பெனிகளின் அநியாயம் தாங்கமுடியாத அநியாயமாக இருக்கிறது. தாய்ப்பாலை, தாய்-சேய் பாசத்தை, குழந்தை வளர்ப்பை மூலதனமாகக் கொண்டு பல்வேறு கம்பெனிகள் தமது தயாரிப்பு களைச் சந்தைக்கு கொண்டு வருகின்றன. தாய்ப்பால் தனியுண வாக குறைந்த பட்சம் 6 மாதங்கள் வழங்குவதில் கூட உலக அளவில் திருப்திகரமான சராசரி நிலையை அடைய முடியாததற்கு இந்தக் கம்பெனிகளின் வியாபார தில்லுமுல்லுகளும் தந்திரங்களுமே பெருங்காரணமாய் இருக்கின்றன.
இவர்களைக் கட்டுப்படுத்தவே IBFAN என்ற அமைப்பின் முயற்சியால் உலக சுகாதார நிறூவனம், யுனிசெப் ஆகியவை 1981ல் பால்துணைப்பொருட்கள், சந்தைப்படுத்துதலுக்கான சர்வதேச விதிமுறைகளை (International Code of Marketing Breastmilk Substitute) வகுத்துள்ளன.
பால் துணைப்பொருட்கள், பால் பாட்டில்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களை முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு விளம்பரங்கள் செய்வது, பொருட்களை பிரபலப் படுத்தும் பொருட்டு பரிசாகத் தருவது, சாம்பிள்-ஆகத் தருவது,இதற்காக மருத்துவமனை மற்றும் சுகாதார கட்டமைப்பு வசதிகள், மருத்துவர்கள், பணியாளர்களைப் பயன்படுத்துவது, பொருட்களில் குழந்தையுடன் கூடிய தாய்மார்களின் படங்களைப் பயன்படுத் துவது, தாய்ப்பாலின் மகத்துவத்தைக் குறைக்கும் வகையில் வாசகங் களை அச்சிடுவது, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகளைக் “கவனிப்பது”, நன்கொடை வழங்குவது, கல்வி சார்ந்த பிற செயல்பாடுகளுக்கான அச்சு, காட்சி ஊடகங் களை நேரடியாக அல்லது மறைமுகமாகப் பயன்படுத்துவது, மருத்து வர்களுக்கு சன்மானம் கொடுப்பது, அவர்களின் உயர்கல்வி, ஆராய்ச்சிகளுக்கு நிதியுதவி செய்வது ஆகியவை தடைசெய்யப் படுகின்றன.
சரி இந்தியாவின் நிலைமை?
IBFAN- (ஆசியா) அமைப்பால் தாய்ப்பால் வழங்குவதில் உள்ள முன்னேற்றம், கொள்கை ரீதியான பிரச்சினைகள், கள நிலைமைகளை ஆசிய அளவில் 50 நாடுகளில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படுகிறது. 2012-ல் வெளியான WBTI (World Breastfeeding Trends Initiative) அறிக்கை நம் தாய்த் திரு நாட்டைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.. 15 அம்சங் களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், இந்தியாவில் இருக்கின்ற மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளைத் திறம்பட ஒருங்கிணைப்பதில் பின்னடைவு, IYCF (Infant and Young Child Feeding) குறித்த தேசிய வழிகாட்டு நெறிமுறைகளை கீழ்மட்ட அளவுகளில் கொண்டுசெல்வதில் பின்னடைவு, உருவாக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளும் ஒதுக்கப்படுகின்ற நிதி அளவினைக் கருத்தில் கொள்ளவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
குழந்தைகளுக்கு முழுமையான தாய்ப்பால் கிடைப்பதற்கான சர்வதேச பத்து படிநிலைகளை நடைமுறைப்படுத்துவதில் போதிய அக்கறை காட்டவில்லை. BFH (Baby Friendly Hospital) அமைப்பை உருவாக்குவதில் 2005 முதல் எவ்விதத்திலும் முன்னேற்றம் காணப் படவில்லை. (உலக அளவில் 156 நாடுகளில் 20,000 மருத்துவ மனைகள் மட்டுமே. BFH அமைப்பை 82 சதவீதம் மகப்பேறு மருத்துவமனைகளில் நிறுவிய உலகின் முதல் மாநிலமாக கேரளா (இந்தியா) வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. ஆனாலும் தற்போதும் இந்தியாவில் 10 சதவீதம் மருத்துவமனைகள் தான். கியூபாவில் 87 சதவீதம், சீனாவில் ஊரகப்பகுதிகளில் 68ரூ நகர்ப்பகுதிகளில் 48 சதவீதம் என 6000 மருத்துவமனைகள்- UNICEF & StC)
IMS -2003 சட்டத்தை முழுமையாக, வலுவாக கொண்டு செல்ல தேவையான கட்டமைப்புகளை உருவாக்கவில்லை. சட்டத்தை மீறு பவர்கள் குறித்த நடவடிக்கை எடுக்க மாவட்ட, மாநில அளவுகளில் வலுவான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. சட்டம் நடைமுறைப் படுத்தப் படுவதைக் கண்காணிக்க பயிற்சி பெற்ற உரிய அலுவலர்கள் இல்லை.இச்சட்டம் குறித்து மக்களிடையே மிகமிகக் குறைந்த அளவே விழிப்புணர்வு உள்ளது. ((WBTI)
(இந்தியாவில் இளம்குழந்தைகளுக்கான பால் துணைப் (பதிலி) பொருட்கள், உணவு மற்றும் பால்பாட்டில்கள் தயாரிப்பு, விநியோக ஒழுங்குமுறைச்சட்டம் (IMS ACT-1993) கொண்டு வரப்பட்டது. 2003ல் அச்சட்டத்திற்கு (-Infant Milk Substitute, Feeding Bottles and Infant Foods (Regulation of Production, Supply and Distribution) Amendment Act, 2003) வலுகூட்டும் பொருட்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் இளம்தாய்மார்களை குறிவைத்து செய்யப்படும் நேரடி மற்றும் மறைமுக விளம்பரங்கள் தடை செய்யப் பட்டன.
பிறந்த 6 மாதங்களுக்குள் பகுதியாகவோ, முழுமையாகவோ தாய்ப்பாலுக்கு மாற்றாக முன்வைக்கப்படும் பால் துணைபொருட்கள்
(Lactogen-1, Lactogen-2, Nestogen-1, Nestogen2, Lactodex- 1, Lactodex - 2, Amul Spray, Zerolac, Dexolac, ProSoyal , Simyl-MCT, Similac Neosure போன்றவை), பால் பாட்டில்கள்: Bonny Baby, Hello Baby, Wipro போன்ற அனைத்து வகைக் கம்பெனிகளின் தயாரிப்புகளும்... உணவுகள்: 6 மாதம் முதல் 2 வயது வரையிலான குழந்தை களுக்கான உணவுகளாக முன்வைக்கப்படும் Nestum,Cerelac, Farex, Weano, Veelac, Infacare, First Food, Dexrice, Easum, Junior Horlicks, Growing up milk, health drinks போன்றவையும் இச் சட்ட வரையறைக்குள் வருகின்றன. பால்துணைப்பொருட்கள் சந்தைப் படுத்துதலுக்கான சர்வதேச விதிமுறைகளுள் ((International Code of Marketing Breastmilk Substitute) பல சரத்துகள் இச்சட்டத்திலும் பிரதிபலிக்கின்றன.)
மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணிமுன் பயிற்சி போது மானதாக இல்லை. அங்கன்வாடி, ANM, ASHA பணியாளர்களுக் கான பயிற்சியில் IYCF குறித்த கருத்துகள் இடம்பெறவே இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
நமது இந்தியாவில் ஆண்டுதோறும் 26 மில்லியன் குழந்தைகள் பிறக்கின்றனர் (NFHS -3). அதில் 25 சதவீதம் குழந்தைகளுக்கு மட்டுமே பிறந்த 1 மணி நேரத்தில் தாய்ப்பால் வழங்கப்படுகிறது. 20 மில்லியன் குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு மட்டும் கூட முழுமையாக தாய்ப்பால் உணவு கிடைப்பதில்லை. 13 மில்லியன் குழந்தைகளுக்கு 6-9 மாதங்களில் தாய்ப்பாலுடன் சரியான இணை உணவுகள் கிடைக்கவில்லை. ஆறு மாதங்களுக்கு முழுமையான தாய்ப்பால் கிடைப்பதில் கடந்த 20 ஆண்டுகளாக பெரிய அளவில் மாற்றம் ஏதுமில்லை. 20 % குழந்தைகள் மட்டுமே ஆறு மாதங்களுக் குப் பிறகும் அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் பெறுகின் றனர். மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் மட்டுமே அங்கன்வாடிப் பணியாளர்களின் சேவையைப் பெறுகின்றனர்.
நான்கில் ஒரு பங்கு குழந்தைகள் மட்டுமே ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத் தின் கீழ் சத்துணவு பெறுகின்றனர். 18 சதவீதம் குழந்தைகள் மட்டுமே அங்கன்வாடி மையங்களில் எடை பார்த்துள்ளனர்.
இந்தியா பாரம்பரியமாகவே தாய்ப்பாலுக்கு சிறப்பான இடம் அளிக்கும் நாடு. ஓரளவு முன்னேற்றம் தெரிகிறது. தாய்ப்பால் வழங்கும் பெண்களுக்கு சரியான தகவல்கள், வீடு, பணிபுரியும் இடங்களில் உரிய ஏற்பாடு, மகப்பேறு விடுப்பு, குடும்ப உறுப்பினர் களின் ஒத்துழைப்பு இருக்கும்பட்சத்தில் இந்நிலை மேலும் உயரும் எனவும் அறிக்கை தெரிவிக்கிறது. 40.5 சதவீதம் பெண்கள் பிறந்த உட னேயே தாய்ப்பால் வழங்குகின்றனர். 46.8 சதவீதம் பெண்கள் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் வழங்குகின்றனர். அதிகபட்சமாக 24.4 மாதங்கள் தாய்ப்பால் வழங்கப்படுகிறது. 12.5 சதவீதம் பெண்கள் பாட்டில் பால் கொடுக்கின்றனர். 57.1 சதவீதம் பெண்கள் தாய்ப்பால் தவிர்த்த உணவுகளைக் கொடுக்கின்றனர்.
(WBTI ) மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகளுக்குக் கூட முழுமையான தாய்ப்பால் (6 மாதங்கள்) வழங்க இயலாத பத்து நாடுகளில் இந்தியா வும் ஒன்று. (தாய்ப்பால் குறித்த சர்வதேச மாநாடு-2012 அறிக்கை யில் யுனிசெப்)
இந்தியாவில் 2010ல் உரிய நாட்களுக்கு முன்னதாகவே 13 சத வீதம் குழந்தைகள் பிறப்பதாகவும் 20% குழந்தைகள் உயரத்திற்கு ஏற்ற எடையில்லாமலும் 47.9 சதவீதம் குழந்தைகள் வயதிற்கேற்ற வளர்ச்சியில்லாமலும் இருப்பதாகவும் கூறுகிறது உலக சுகாதார அறிக்கை-2013.
சரி, மேற்கண்ட ஆய்விற்கு வருவோம். WBTI ஆய்வில் கொள்கை மற்றும் திட்டங்கள் சார்ந்த 10 அம்சங்களில் 43/100 மதிப் பெண்களும் குழந்தைகளுக்கு உணகூட்டுதல் சார்ந்த 5 அம்சங் களில் 31/50 மதிப்பெண்களும் ஆக மொத்தம் இந்தியா 74/150 மதிப் பெண்கள் பெற்று ஊ கிரேடில் இருக்கிறது. இருந்தபோதிலும் 2005, 2008 ஆம் ஆண்டுகளை ஒப்பிடும்போது 5 மதிப்பெண்கள் அதிக மாகவே பெற்றிருக்கிறது.
இதுவரை போடப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்களில் கடந்த 10, 11 மற்றும் 12வது ஐந்தாண்டுத் திட்டங்களில் தான் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் தொடர்பான விஷயங்களில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்திற்காக 1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதம் ஆக உயர்த்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்வி, மருத்துவம், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கு வதில் மத்திய மாநில அரசுகளுக்கு இருக்கின்ற இருக்கின்ற பாய்ச்சல் வேகம் , இதுபோன்ற செயல்பாடுகளில் இருந்தால் மக்கள் நலம் பெறுவர். திறன் மிக்க குடிமக்களாய்த் திகழ்வர். உழைப்பு பெருகும். உற்பத்தி பெருகும். பொருளாதார வளர்ச்சியால் நாடு நலம் பெறும்.! வளம் பெறும்..!
தேனி சுந்தர், விஞ்ஞான சிறகு