Thursday, October 31, 2013

மாசில்லா பூமிக்கு சத்தமில்லா தீபாவளி அவசியம்.



நண்பர்களே..

பண்டிகைகள் கொண்டாட்டங்கள் இல்லாத ஒரு தேசத்தைக் கற்பனை செய்து பாருங்கள்.ஒன்றுகூட அகப்படாது. பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் மனித சமூகம் தேவையின் பொருட்டு, தானே சிருஷ்டித்துக் கொண்டவையே. புராணப் பொய்மைகள் ஜோடிக்கப்பட்ட பின்னர் பண்டிகை தோற்றுவிக்கப்படவில்லை. மாறாக மக்கள் கொண்டாடிய பண்டிகைகளை மதங்கள் ஹைஜாக் செய்து அதற்கு புராண முலாம் பூசின. புனிதம் கற்பிக்கப்பட்டது.

இன்றைக்கும் தீபாவளி கும்பிட்டுவிட்டீர்களா எனக் கேட்பவர்களே அதிகம்.தீபாவளி கொண்டாடினீர்களா எனக் கேட்பவர்கள் மிகமிகச் சொற்பம்.

விழாக்களுக்கு பஞ்சமில்லாத இந்த காலகட்டத்தில் விழாக்கள் நல்லதுக்கா? கெட்டதுக்கா? என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

வசதியான வீடுகளில் கொண்டாடப்படும் விழாக்கள் பெருமளவில் அவர்களுக்கு உற்சாகத்தையும் புத்துணர்வையும் ஏற்படுத்துவதாக இருக்கின்றன. அதற்காக செய்யப்படும் சில ஏற்பாடுகள்தான் அவர்களுக்கு புதிதாக இருக்கும்.

ஏழ்மையான குடும்பங்களிலோ நிலைமை வேறு.. அந்த ஒரு நாள் மகிழ்ச்சிக்காக மாடாய் உழைப்பது, கடனை வாங்கிக் கொண்டாடுவது என சிக்கிச் சீரழிந்து மற்ற நாட்களின் மகிழ்ச்சியையும் சேர்த்துத்தொலைக்கும் கொடுமை! இதைப்பற்றி மேலும் விரிவாக நீங்களும் உங்கள் நண்பர்களும் விவாதித்துக் கொள்ளுங்கள்!

விழாக்கள் கொண்டாடுவதற்கு பல நேர்மறையான காரணங்கள் இருக்கின்றன. ஆனாலும் நமது கொண்டாட்ட முறைகள் இருக்கின்றனவே.. ஒவ்வொரு விழாக்களின்போதும் நாம் அதை முறைப்படுத்த வேண்டியிருக்கிறது. ஏனென்றால் நாம் சொல்லிக்கொள்வது போல 'அந்த ஒருநாள்' ஏற்படுத்தும் விளைவுகள் அன்றோடு போவதில்லை!

மகிழ்ச்சி என்ற பெயரில் நீங்கள் கொண்டாடிவிட்டுப் போய்விடுவீர்கள், தண்டனைகள் அனுபவிக்கப் போவது அடுத்த தலைமுறைக் குழந்தைகளும் அல்லவா?

எனவே நாம் இப்போது தீபாவளிக்காய்ச்சலில் இருப்பதால் அதுபற்றிச் சிந்திப்பது நல்லது.

"உனக்கு மகிழ்ச்சி தருவதெல்லாம் எனக்கும் மகிழ்ச்சியைத்தரும் என் சின்னஞ்சிறிய மகனே,ஆனாலும் வெடித்துச்சிதறும் வேட்டுக்களிலும்,சீறி ஒளிப்பிழம்பாகும் மத்தாப்புகளிலும் உன்னைப்போல் சில சிவகாசிச்சிறுசுகளின்,சிதைந்த கனவுகளும் சிறைப்பட்ட வாழ்வுமே தெரிவதனால்,வேட்டுக்களும் மத்தாப்புக்களும் வேண்டாம் மகனே"  பேனா மனோகரன். அவர்களின் கவிதையும் நினைத்து பார்க்க வேண்டிய தருனம் இது

நமது இன்றைய சமூகமானது தனித்தனிக் கட்டிடங்களாகவும் தனித்தனிக் கட்டிடங்கள் தனித்தனிக் குடும்பங்களாகவும் தனித்தனிக் குடும்பங்கள் தனித்தனி மனிதர்களாகவும் ஒரு ஆளுமையின் இருப்பு என்பது அனாதையாகிக் கொண்டே இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் சமூகக்கொண்டாட்டங்கள் பற்றி நாமெல்லாம் சிந்திக்கவும் விவாதிக்கவும் வேண்டியிருக்கிறது.

சமூகக் கொண்டாட்டங்கள் மூலம் ஒத்த கருத்துடைய/ ஒரே கட்டிடத்தில்/ஒரே பகுதியில் வாழக்கூடிய அல்லது சொந்த பந்தங்கள் அனைவரும் ஒன்றாகக்கூடி ஒரே இடத்தில் கொண்டாடமுடியும். இதனால் தனித்தனி ஏற்பாடுகள் தேவையில்லை. காணுமிடமெல்லாம் குப்பைகள் நிறையும் நிலையில்லை. குறிப்பிட்ட நேரம், ஒரே இடம் என்பதால் தேவையற்ற இரைச்சல், அலைச்சல், குழப்பங்கள் இல்லை. சிறப்பாக சூழல் மேலாண்மை செய்யமுடியும். மிகமுக்கியமாக எரிபொருள்/ஆற்றல் சிக்கனம். இதற்காக பள்ளி,கல்லூரிகள், விடுதிகள்,மருத்துவமனைகள் ஆகிய இடங்களிலிருந்து தூரமாய் உள்ள திறந்தவெளி மைதானங்களைத் தேர்வுசெய்வது நல்லது.

*தனியாகக் கொண்டாடுவதை இனியேனும் தவிர்ப்போம்!
*வெடி வெடிப்பதால், வெளிவரும் புகையால் பொதுமக்களுக்கு தேவையற்ற மன உளைச்சல், தலைவலி, சுவாசக்கோளாறு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் தோல் வியாதிகள் போன்றவற்றைத் தவிர்ப்போம்.

மேலும் அளவுக்கதிகமான நில மாசு காற்று மாசு ஒலி மாசு போன்றவற்றைத் தவிர்ப்போம்.

தேவையற்ற மின்நுகர்வைத் தவிர்ப்போம்

விளக்கெண்ணையைக் கண்டுபிடித்தவன் அதை சந்தோஷமாகப் பகிர்ந்துகொண்டு கொண்டாடிய நாளே தீபாவளி என்பார் அயோத்திதாசப் பண்டிதர். சமூக அறிவியல் ரீதியாக பண்டிகைகள் குறித்த ஆய்வும் புரிதலும் தேவைப்படுகிறது.மனிதநேயத்தையும் மகிழ்ச்சியையும் மேன்மைப்படுத்தும் பண்டிகைகள் மட்டுமே சடங்குத்தனமான இன்றையப் பண்டிகைகளை அப்புறப்படுத்தும்.

அது ஒற்றை நாளில் ஒற்றை அறிவிப்பில் வந்துவிடாது.இப்போதே அதற்கு முயற்சியைத் துவங்கினால் காலகதியில் அவை மக்கள் பண்டிகையாக முகிழ்க்கும்.

தீப ஒளி ஏற்றுவோம்.

*விழாக்களின் வடிவங்களை மாற்றுவோம்.
*தொடர்ந்து சிந்திப்போம்! பகிர்ந்து கொள்வோம்! செயல்படுவோம்!
*இது குறித்த உரையாடலைத் தொடங்குவோமே!

No comments: