சாலை விபத்து, தற்கொலைகள், கள்ள நோட்டுப் புழக்கம், மாணவர்கள் தற்கொலை, போலி பாஸ்போர்ட், முதியோர்கள் பாதுகாப்பு எனப் பல குற்றங்களில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது தமிழ்நாடு.
அடுத்த வரியைப் படித்து அதிர்ச்சி அடைய வேண்டாம். சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் பல குற்றங்களில் தமிழகம் முதல் மாநிலமாக விளங்குகிறது. சாலை விபத்து, தற்கொலைகள், கள்ள நோட்டுப் புழக்கம், மாணவர்கள் தற்கொலை, போலி பாஸ்போர்ட், முதியோர்கள் பாதுகாப்பு என்று பல வகையான குற்றங்களில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறோம் நாம். தேசியக் குற்றப் பதிவுத்துறை (National Crime Records Bureau - NCRB) சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் இந்தத் தகவல்களைத் தெரிவிக்கின்றன.
சாலை, ரயில் விபத்துகள்
சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருப்பது தமிழகம். 15 ஆயிரத்து 409 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்த இடம் ஆந்திராவிற்கு (15,337 பேர்), அடுத்து உத்தரப்பிரதேசத்திற்கும் மகாராஷ்டிராவிற்கும்.
நாடு முழுக்க கடந்த 2010ம் ஆண்டு 1.61 லட்சம் விபத்துகள் பதிவாகியுள்ளன. அதாவது, நாட்டில் ஒவ்வொரு நாளும் சாலையில், ரயில் பாதையில் 18 பேர் இறக்கிறார்கள். சாலை விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் (1.61 லட்சம் விபத்துகளில் 1.34 லட்சம் விபத்துகள் சாலை விபத்துகள்). இதுவரை இந்தியாவிலேயே இல்லாத அளவிற்குக் கடந்த ஆண்டு விபத்துகள் நடந்துள்ளன.
இதற்குப் பெருகி வரும் வாகனங்கள் ஒரு காரணமாக கூறப்படுகிறது. 2008ம் ஆண்டில் இருந்ததைவிட 28 சதவீதம் வாகனப் பதிவு அதிகரித்துள்ளது. 20 சதவீதச் சாலை விபத்துகள் இரு சக்கர வாகனங்களாலும் 28 ஆயிரத்து 800 விபத்துகள் கனரக வாகனங்கள், டிரக்குகளாலும் நடந்துள்ளன.
தற்கொலைகள்
வேலையின்மை, வறுமை, கடன் தொல்லை, வரதட்சணைக்கொடுமை போன்றவற்றால் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 21 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். 2010ம் ஆண்டு இந்தியாவில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 599 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதிலும் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. அந்த ஆண்டு தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்டவர்கள் 16,561 பேர். நாட்டில் நடந்த தற்கொலைகளில் 57.2 சதவீதம் தமிழகம், மேற்கு வங்காளம் (16,037), மகாராஷ்டிரா (15,916), ஆந்திரா (15,901), கர்நாடகா (12,651) ஆகிய ஐந்து மாநிலங்களில் நடந்துள்ளன. இதில் திகைக்க வைக்கும் விஷயம் என்னவென்றால், தற்கொலை செய்துகொள்பவர்களில் 65.8 சதவீதம் பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்!
முதியோர் பாதுகாப்பு
தமிழகத்தில் முதியோர்கள் பாதுகாப்பாக வாழ்கிறார்களா? இல்லை என்றுதான் உதட்டைப் பிதுக்கத் தோன்றுகிறது. ஆனால், இதில் ஒரு சின்ன ஆறுதல். ஆந்திராவையும் உத்தரப்பிரதேசத்தையும் அடுத்து, முதியோர்களுக்கு பாதுகாப்பு இல்லாத மூன்றாவது மாநிலமாகத்தான் இருக்கிறது தமிழகம்.
ஆனால், அதிர வைக்கும் விஷயம் என்னவென்றால் வயதான பெண்களின் பாதுகாப்பு நிலை கவலைக்குரிய வகையில் மோசமடைந்திருக்கிறது. 50 வயதிற்கு மேற்பட்ட 227 பெண்கள் 2010ம் ஆண்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டு 93 பெண்களும் கொலை செய்யப்பட்டிருந்தனர். 2010ம் ஆண்டு 50 வயதைத் தாண்டிய 100 ஆண்களும் 2009ம் ஆண்டு 246 ஆண்களும் கொலையுண்டிருந்தனர்.
‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பின் தொலைபேசி எண்ணுக்கு (1253) தினமும் 10க்கும் அதிகமான அழைப்புகள் உதவி கேட்டு வருவதாகவும் அதில் இரண்டு முதியவர்கள் தங்களுக்கு பாதுகாப்புக் கேட்பதாகவும் கூறுகிறார்கள். பெரும்பாலும் வயதானவர்கள் தனியாகவே வாழ்கிறார்கள். பணம், நகை என்று கொள்ளையடிப்பவர்களின் இலக்கு இவர்கள் மேலேயே இருக்கிறது. காவல்துறையின் தகவல்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 54 முதியவர்கள் மாநிலத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும 10 படுகொலைகள் நடந்துள்ளன.
போலி பாஸ்போர்ட்
போலி பாஸ்போர்ட், விசாவுடன் பறப்பதற்கான வசதியான இடமாகவே தமிழக விமான நிலையங்கள் இருப்பதாக தேசியக் குற்றப் பதிவுத்துறையின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. நாடு முழுவதும் பதிவான இதுபோன்ற 937 வழக்குகளில் 398 பேர் தமிழகத்தில் பிடிபட்டுள்ளனர். தொடர்ந்து கேரளாவில் 209 பேரும் மேற்கு வங்களத்தில் 102, மகாராஷ்டிரா 69, ஆந்திரா 68 வழக்குகள் பதிவாகி உள்ளன. மற்ற மாநிலங்களில் பெரும்பாலும் ஒரு வழக்குகூட இல்லை அல்லது 50க்கும் குறைவான வழக்குகளே பதிவாகியுள்ளன. இந்தியாவிலேயே பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் அதிகம் நடக்கும் நகரம் கோவை. தொடர்ந்து திருச்சி, திருவனந்தபுரம் உள்ளது. இதனாலேயேசென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் கூறுகிறார்கள்.
தமிழகத்திலிருந்து தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள் என்று சுமார் 40 இடங்களுக்கு நேரடி விமான சேவை இருப்பது, அதிகப் பயணிகள் போன்ற காரணங்கள் போலி பாஸ்போர்ட்டுக்கு கூறப்படுகிறது. சென்னையில்தான் அதிக அளவில் ஏஜெண்ட்கள் இருக்கிறார்கள். மொத்தம் உள்ள 243 பேரில் 197 பதிவு பெற்ற ஏஜெண்ட்கள் உள்ளனர். ஆயிரக்கணக்கில் போலி ஏஜெண்ட்களும் இருக்கிறார்கள். சமீபத்தில் ஐ.நா. அமைப்பின் போதைக் குற்றத்தடுப்புப் பிரிவு வெளியிட்ட ஆவில், போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக இலங்கைத் தமிழர்கள் 23 சதவீதம் பேர் சென்னை சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்துவதாகக் கூறுகிறது.
மாணவர்கள் தற்கொலை
கடந்த 4 ஆண்டுகளில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது 26 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னை, மும்பை, தில்லி போன்ற பெருநகரங்களில்தான் பெரும்பாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதிலும் சென்னைதான் முன்னிலை. சென்னையில் 170 மாணவர்கள், தில்லியில் 133, மும்பையில் 115 மாணவர்களும் 2010ல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.
2009ல் வெறும் 0.9 சதவீதமாக இருந்த முதுநிலை பட்டதாரி மாணவர்களின் தற்கொலை சதவீதம் அடுத்த ஆண்டு 2.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. முதல் ரேங்க் வாங்க வேண்டும், போட்டி மனப்பான்மை, அளவுக்கு அதிகமான கல்விச் சுமை இவையே இதற்குக் காரணம் என உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.
கள்ளநோட்டு
2010ல் சென்னையில் மட்டும் 72 கள்ள நோட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு முந்தைய ஆண்டு வெறும் 42 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. கள்ள நோட்டுகள் அதிகமாகப் புழங்கும் இடம் மும்பை. கிட்டத்தட்ட இந்த விஷயத்தில் மும்பையை (76) நெருங்கிவிட்டோம் நாம். சென்னையை அடுத்து வேலூரிலும் மதுரையிலும் தலா 31 கள்ள நோட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கடுத்த நகரம் கோயம்புத்தூர் (30). பொதுவாகத் தமிழகத்தில் பெருநகரங்களில்தான் கள்ள நோட்டு அதிகம் புழங்குவதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
132 சேக் போஸ்ட்களில் கண்கொத்திப் பாம்பாகப் பார்த்து, கள்ள நோட்டு கடத்துபவர்களைப் பிடித்தாலும் இதன் பின்னணியிலிருந்து செயல்படுபவர்கள் யார் என்பது இன்னும் புரியாத புதிராகவே இருப்பதாகப் போலீஸ் கூறுகிறது. மும்பை, ஜார்கண்ட், மேற்கு வங்காளம் போன்ற இடங்களில் இருந்துதான் இவர்கள் செயல்படுகிறார்கள். மாவட்டங்களில் இருக்கும் வேலையில்லாத இளைஞர்களை கள்ள நோட்டைப் புழங்க விடுவதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் காவல்துறையின் அனுமானம்.
அடையாளம் தெரியாத உடல்கள்
மாநிலம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் ஏழு அடையாளம் தெரியாத உடல்கள் வருவதாகப் புள்ளி விவரம் கூறுகிறது. கடந்த ஆண்டு மட்டும் 2 ஆயிரத்து 795 உடல்கள் வந்திருக்கின்றன. தென்னிந்தியாவில் தமிழகத்தில்தான் இது அதிகம். 2006லிருந்து ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக இந்த எண்ணிக்கை அதிகரித்தே வந்துள்ளது.
போலீஸ் ரெக்கார்டுப்படி 2,739 அடையாளம் தெரியாத உடல்களில் 657 உடல்கள் சென்னை, செங்கல்பட்டு, சூளூர்பேட்டை ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அதற்கு முந்தைய ஆண்டைவிட 248 உடல்கள் அதிகம் கிடைத்துள்ளன. அடையாளம் காண முடியாத உடல்கள் 48 மணி நேரத்தில் மாநகராட்சி உதவியுடன் தகனம் செயப்படுகின்றன அல்லது மருத்துவக் கல்லூரிக்கு தரப்படுகின்றன.
நன்றி கீதா புதியதலைமுறை