புதுச்சேரியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருகின்றன.
÷புதுச்சேரியில் கடந்த 4 ஆண்டுகளாக லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டங்களில் பல்வேறு பிரச்னைகள் கிளப்பப்படுகின்றன. இதனால் நிர்வாக ரீதியாகவும், அதிகாரிகளின் செயல்பாடுகள் அளவிலும், தன்னார்வலர்களின் போக்குகளிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
÷லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் ஏற்கெனவே சம்பிராயத்துக்காக தலைமைச் செயலகத்தில் யாருக்கும் தெரியாமல் நடத்தப்பட்ட காலம் உண்டு. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக இந்தக் கூட்டம் நடத்துவதிலேயே பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு எந்தத்துறை லஞ்ச ஒழிப்புக் கூட்டத்தை நடத்துகிறதோ அந்தத்துறையின் அரசு செயலர் வர வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு சில இடங்களில் போராட்டமும் நடந்து அந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
÷புதுச்சேரியில் தாவரவியல் பூங்கா இருக்கிறது. பணியாளர்கள் இருக்கிறார்கள். அப்படியிருக்க துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு பூங்கொத்து வாங்கிக் கொடுக்க வேளாண்துறை ரூ.13 லட்சம் செலவிட்டுள்ளது. இதில் முறைகேடு நடந்திருக்கிறது என்று லஞ்ச ஒழிப்பு கூட்டத்தில் சுட்டிக் காட்டினார்கள். இதையடுத்து இனிமேல் பைசா செலவு இல்லாமல் வேளாண்துறை சார்பில் பூங்கொத்து தயார் செய்து கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
÷தனியார் நிறுவனம் குப்பை வாருகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட நகராட்சி ஊழியர்கள் வேலை எதுவும் செய்யாமல் சம்பளம் பெறுகின்றனர் என்று சுட்டிக் காட்டியப் பிறகு அவர்களுக்கு மாற்றுப் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புக் கூட்டத்தில் உறுதி அளித்தனர். ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஓர் ஊழியர் அல்லது அதிகாரி பணியாற்றுவது லஞ்சத்துக்கு ஒரு வகையில் காரணமாக இருக்கிறது. அவர்களை வேறு இடங்களுக்கு பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இப்படி நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்களை லஞ்ச ஒழிப்புக் கூட்டம் கொண்டு வந்துள்ளது.
÷லஞ்ச ஒழிப்புக் கூட்டங்களில் உயர் அதிகாரிகள் வருவதால் கீழ்நிலையில் பணியாற்றும் அதிகாரிகளும் பங்கேற்றனர். இதனால் பணிகளில் தேக்கம், கடமையைச் சரியாகச் செய்யாதவர்கள், விதிமுறைகளை மீறி தனியாருக்குச் சாதகமாக நடந்து கொண்டோர், விவசாயிகளுக்கு எதிரான கொள்கையைப் பின்பற்றுவோர் என்று இக் கூட்டங்களில் பகிரங்கப்படுத்தப்பட்டனர். மேலும் ஒரு சில கூட்டங்களில் ஒரு சில அதிகாரிகளின் சொந்த விஷயங்கள் கூட இக் கூட்டங்களில் விமர்சனம் செய்யப்பட்டன. இதனால் அதிகாரிகளிடம் ஒருவிதமான பயம் ஏற்பட்டிருக்கிறது.
÷பொதுமக்கள் எந்த அளவுக்கு விழிப்புணர்வோடு இருக்கிறார்கள் என்பதை கீழ் பணியாற்றும் அதிகாரிகளும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே எல்லா அதிகாரிகளையும் இந்தக் கூட்டத்துக்கு வரவழைத்தேன் என்று ஓர் உயர் அதிகாரி கூறியிருந்தார். லஞ்ச ஒழிப்புக் கூட்டத்தில் பங்கேற்பதைத் தவிர்த்த பெரும்பாலான அதிகாரிகள் நீதிமன்ற வழக்குக்குச் செல்ல வேண்டியிருக்கிறது என்று காரணம் கூறி தப்பிக்கப் பார்த்தனர்.
இக் கூட்டங்களில் பங்கேற்று லஞ்சம் தொடர்பாகவும் முறைகேடுகள் தொடர்பாகவும் பேசிய பலரும் ஆவணங்களுடன் வந்திருந்தனர். அதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அவர்கள் பெற்றிருந்த விவரங்கள்தான் காரணம். அதிகாரிகளுக்கே தெரியாத பல்வேறு விஷயங்களை அவர்கள் கைவசம் வைத்திருந்தனர்.
÷குடிநீர் பிரச்னை, தெருவிளக்குச் சரியாக எரிவதில்லை உள்ளிட்ட பொது பிரச்னைகளில் கவனம் செலுத்தவும் இந்தக் கூட்டம் வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
பொதுவாக அரசு ஊழியர்கள் என்பவர்கள் பொதுமக்களுக்குச் சேவை செய்ய வேண்டியவர்கள். மக்களின் வரிப்பணத்தில்தான் அவர்கள் சம்பளம் பெறுகின்றனர் என்று இந்த லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டங்களில் தன்னார்வலர்கள் பலரும் ஆவேசத்துடன் நடந்து கொண்டனர். ஒரு சில நேரங்களில் வரம்பை மீறும் வகையிலும் அவை இருந்தன. நிதான போக்கு இவர்களிடம் காணப்படவில்லை. இதைக் கட்டுப்படுத்தும் வகையிலும்,
பங்கேற்கும் எல்லோருக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலான முறையும் பொதுவாகக் கடைப்பிடிக்காமல் போனதுதான் இதற்குக் காரணம்.
÷மாதந்தோறும் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தினால் பல்வேறு பிரச்னைகள் தீர்க்க வழி ஏற்படும். இதற்குக் கூட்டம் போட்டு பேசுவதைக் காட்டிலும் உயர் அதிகாரிகள் உட்கார்ந்து பிரச்னைகளை மட்டும் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். லஞ்ச ஒழிப்புக் கூட்டம் ஒரு சில மாற்றத்தை உருவாக்கியுள்ளது உண்மை. இக் கூட்டத்தை நடத்தினால் மட்டும் லஞ்சம் ஒழிந்துவிடாது.
நடைமுறையில் லஞ்சம் கொடுக்காமல், வாங்காமல் இருப்பதற்கான நிர்வாக முறைகளில் மாற்றத்தை உருவாக்க வேண்டும். அப்போதுதான் லஞ்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து ஒழிக்க முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.