Sunday, February 19, 2012

புதுவை அறிவியல் இயக்கத்தின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி


தானே புயலால் பாதிக்கபட்ட மக்களுக்கு புதுவை அறிவியல் இயக்கத்தின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரியில் கடந்த டிசம்பர் 30ஆம்தேதி தானே புயலால் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.அதன்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உயிர் உரங்கள் அடங்கிய இடுபொருட்கள், மாணவர்களுக்கு புத்தகபைகள், நோட்டு புத்தகங்கள், பெண்கள் வீட்டு தோட்டத்தில் காய்கறிகள் பயிரிடுவதற்கு விதைகள் மற்றும் இடுபொருட்கள் ஆகியவை  வழங்கும் நிகழ்ச்சி ரெட்டியார்பாளையம், பாகூர், உச்சிமேடு கிராமம் ஆகிய பகுதியில் நடைபெற்றது.

 இந்நிகழ்சியில் அறிவியல் இயக்க பொதுச் செயலாளர் S.சேகர், துனைதலைவர் முனைவர் T. பரசுராமன் நிர்வாகிகள் R. தட்சணாமூர்த்தி, A. ஹேமாவதி, T.P.ரகுநாத், M. சுதர்சனன், P. ரவிச்சந்திரன், R. ரமேஷ், K. விஜயமூர்த்தி, சமம் மகளிர் சுயசார்பு இயக்கத்தின் செயலாளர் டி.சரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.

இதேப்போல் கடந்த ஜனவரி மாதத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, சமையல்என்ணெய், போர்வை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.மேலும் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது

Saturday, February 18, 2012

அறிவியல் வானில் பெண் நட்சத்திரங்கள்

 பெண் என்பவர் ஒரு தாய், ஒரு மகள், ஒரு சகோதரி, ஒரு மனைவி. குடும்பம் என்ற அமைப்பின் ஆணிவேராக இருப்பதும் பெண்தான். அதே சமயம், பொது வாழ்க்கையில் ஆண்களோடு இணைந்து பொறியியல், மருத்துவம், கல்வி, அரசியல் போன்ற பல்வேறு துறைகளில் அவர்கள் தங்கள் முத்திரையை அழுத்தமாகப் பதித்தும் வருகின்றனர். தாங்கும் சக்தி அதிகம் தேவைப்படும் மிகக் கடினமான பயிற்சிகள் கொண்ட விண்வெளிப் பயணங்களிலும் கூட அவர்கள் சிறந்த சாதனைகளைச் செய்து வருகின்றனர். 1950-களில் அன்றைய சோவியத் யூனியன் விண் வெளியில் ஸ்புட்னிக் என்ற செயற்கைக் கோளைச் செலுத்திய பிறகு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புது யுகம் பிறந்தது.

 யூரி ககாரின் விண் வெளியில் முதன்முதலாகக் காலடி எடுத்து வைத்து சிறிது காலம் ஆனவுடனேயே வாலெண்டினா டெரஸ் கோவா அந்த சாதனையைத் தொடர்ந்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். அதற்குப் பிறகு மேலும் பல பெண்கள் விண் வெளியில் பயணிக்க அது ஒரு தொடக்கமாக அமைந்தது. 
 
2011 ஜனவரி நிலவரப்படி 282 விண் வெளிப் பயணங்கள் மூலமாக 520 பேர் விண்வெளிக்குச் சென்று திரும்பி வந்தவர்கள். அதில் ரஷ்யா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜப் பான், கொரியா, பிரிட்டன் போன்ற நாடுகளிலிருந்து சென்ற 56 பேர் பெண்கள். 

இந்தியாவிலும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்குப் பிறகு ஏவுகணைத் திட்டத்தின் இயக்குநராக பொறுப்பேற்றிருப்பது 48 வயதான டெஸ்ஸி தாமஸ் என்ற பெண்தான். சென்ற ஆண்டு நவம் பர் 15 அன்று ஒரிஸா கடற்கரையின் பாலசோர் சோதனைத்தளத்திலிருந்து அக்னி - ஐஏ ஏவுகணையை விண்ணில் செலுத்தி அவரும் அவரது குழுவினரும் சாதனை படைத்தனர்.

 3000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அந்த ஏவுகணை பழைய சாதனை களை முறியடித்தது. இந்தியாவின் பிரபலமான பெண் விஞ்ஞானியாக டெஸ்ஸி தாமஸ் கருதப்படுகிறார். ஆனால் அதை வைத்து அறிவியல் துறையில் பெண்களுக்குரிய அங்கீ காரம் கிடைத்துவிட்டதாக நாம் மகிழ்ச்சியடைந்துவிட முடியாது. எப்படி ஒரு பிரதிபா பாட்டீலையோ ஒரு மீரா குமாரையோ வைத்து அர சியலில் பெண்களுக்குரிய இடம் கிடைத்து விட்டதாகக் கருதமுடிய தோ அது போன்றதுதான் இது.

பெண் விஞ்ஞானிகளில் மேரி கியூரியைப் பற்றி பலருக்கும் தெரியும். அவர்களுக்குக் கூட அவர் இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற வர் என்ற தகவல் தெரியுமாவெனத் தெரியவில்லை. 1963-ல் இயற்பிய லுக்காக நோபல் பரிசு பெற்ற மரியா கோப்பெர்ட்-மேயர், 1964-ல் வேதியியலுக்காக நோபல் பரிசு பெற்ற டோரோதி ஹாட்கின்,1986-ல் மருத்துவத்திற்காக நோபல் பரிசு பெற்ற ரிட்டா லெவி-மாண்டேசினி போன்ற பெண் விஞ்ஞானிகளையோ, பெண் என்ற காரணத்தினா லேயே நோபல் பரிசு பெற வாய்ப் பில்லாமல் போய்விட்ட ரோசலிண்ட் ஃப்ராங்க்ளின் (1920-1958), லைஸே மேட்னர் (1878-1968), சியன்-ஷியுங் வு (1912- 1997), ஜோசலின் பெல் பர்னெல் (1943- ) போன்ற பெண் விஞ்ஞானிகளையோ எத்தனை பேருக்குத் தெரியும்?

பல கலாச்சார, சமூகத் தடைகளின் காரணமாக நாட்டில் பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. கலை, சமூக விஞ்ஞானம் போன்ற மென்மையான துறைகளுக்குத்தான் பெண்கள் ஏற்றவர்கள் என்ற கருத்து இன்னமும் பரவலாக இருக் கிறது. அடிப்படையில் பெண்கள் வீட்டுப் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றே பலரும் எதிர்பார்க்கின்றனர். இது ஆண்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, பல பெண்கள் தங்களுக்காக வகுத்துக் கொண்டுள்ள எல்லையும் அதுதான்.

பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பது பற்றி சமூகவியலாளர்கள் பல ஆண்டுகளாகவே கவலை தெரிவித்து வருகின்றனர். மற்ற எல்லாத் துறைகளையும் போலவே அறிவியல் துறையிலும் சமூகத்தின் பார்வைகள், சமூக நிர்ப்பந்தங்கள், பாலினப் பாகுபாடுகள் போன்ற காரணங்களால் பெண்கள் பிரச்சனை களைச் சந்திக்கின்றனர். மனித வளத்தின் கணிசமான பகுதி சரியான முறையில் பயன்படாமலே வீணாவதை நாம் உணர வேண்டும். சமூகம் பெண்களைப் பார்க்கும் பார்வைகளில் அடிப்படையான மாற்றங்கள் வரவேண்டும். பெண்கள் அறிவியல் துறையில் நியமனம் பெறவும் சாதனைகள் படைக்கவும் உள்ள தடைகளை அகற்ற வேண்டியது மிகமிக அவசியம் என்பதில் சந்தேகம் இல்லை.

Sunday, February 12, 2012

முட்களாக மாற்றப்படும் பூக்கள்



தமிழ்சமூகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அன்றாட நிகழ்வாகிவிட்டன. ஆனால் சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் வகுப்பறை யிலேயே ஆசிரியை ஒருவரை ஒன்பதாவது வகுப்பு மாணவன் ஒருவன் கொடூரமாக குத்திக் கொலை செய்துள்ளது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இது ஒரு தனிமனித விரோத குரோதம் சார்ந்த குற்றம் அல்ல. இந்தப் படுகொலை இன்றைய சமூக அமைப்பு, கல்விச்சூழல், பாடத்திட்டம், ஆசிரியர்- மாணவர் உறவு, பெற்றோர் - பிள்ளைகள் உறவு என பல்வேறு தளங்களில் ஆயிரமாயிரம் கேள்விகளை எழுப்புகிறது. 

கொலை செய்யப்பட்ட ஆசிரியை உமா மகேஸ்வரி கனிவானவர். அதேநேரத்தில் கண்டிப்பானவர் என்றும் அனைத்து மாணவர்களிடமும் அன்போடு பழகக்கூடியவர் என்றும் சக ஆசிரியைகள் கூறியுள்ளனர். கொலை செய்த மாணவன் நல்ல பழக்கவழக்கங்களைக் கொண் டிருந்தவன்தான்.

குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட வேண்டியது இன்றைய பாடத்திட்டமும்தான். ஒரே மாதிரியான கல்விமுறை, பாடத்திட்டம் வேண்டும் என்பதற்காக இந்திய மாணவர் சங்கம் நீண்ட நெடுங்காலமாகப் போராடி வருகிறது. சமூக பொறுப்புணர்வுள்ள ஆசிரியர் சங்கங்களும் இதே கோரிக்கையை முன்வைக்கின்றன. இதன் ஒரு பகுதிதான் சமச்சீர்கல்வி. 

ஆனால், நவீன தாராளமயமாக்கல் சூழலில் கல்வி வணிகமயமாக்கப்பட்டுவிட்டது. எந்த அளவுக்கு கனமான புத்தகங்களை மாணவர்கள் சுமந்து செல்கிறார்களோ அதுவே அறிவின் அடையாளம் என்று சித்தரிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் மாணவர்களை கசக்கிப்பிழி கின்றன. மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விகிதம் மட்டும் அளவுகோலாக முன்வைக்கப்படுகிறது. இதே சித்ரவதைக்கு ஆசிரிய சமூகமும் உள் ளாக்கப்படுகிறது. 

இதனால் ஏற்பட்ட மன அழுத்தம்தான் ஒரு கள்ளமறியா பிஞ்சை கொலைகாரனாக மாற்றியுள்ளது. இந்தி மொழிப்பாடம் தமக்கு கொஞ்சம் கூட புரியவில்லை என்றும், இது குறித்து ஆசி ரியை தொடர்ந்து கண்டித்ததால் கொலை செய் யும் முடிவுக்கு வந்ததாகவும் அந்த மாணவன் கூறியுள்ளான். ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் தாய்மொழிவழிக் கல்விக்குப் பதிலாக பல மொழிகளை கற்பிப்பதாக தனியார் பள்ளிகள் விரிக்கும் வர்த்தக வலையில் விழுந்ததால் ஏற் பட்ட விபரீத விளைவுகளில் இதுவும் ஒன்று.

மறுபுறத்தில், இளைய தலைமுறையை நஞ் சாக மாற்றுவதில் திரைப்படம், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும் முக்கியப் பங்கு வகிக் கின்றன. மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சமூகப் பொறுப்பற்ற பொறுக்கிகளாகவே ஊடகங் கள் சித்தரிக்கின்றன. அண்மையில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய கொலைவெறி பாடல் இதற்கு ஒரு உதாரணம்.

மறுபுறத்தில் ஆசிரியர் - மாணவர் உறவில் பாடத்திட்டத்தின் சுமை இயல்பான உறவை கெடுத்து வைத்திருக்கிறது. பெற்றோர் - பிள்ளைகள் உறவும் சீரானதாக இல்லை. மதிப்பெண் மட்டுமே ஒரே தகுதியாகக் கருதும் அள வுக்கு பெற்றோர்களை மாற்றியுள்ளது இன்றைய சமூகக் கல்விமுறை. 

சென்னைப் பள்ளியில் நடைபெற்ற சம்பவம் இன்றைய சமூகத்திற்கு ஒரு பாடம். இந்தக் கோணத்தில் இதை உணர்ந்து, தீர்வு காண்பதே எதிர்காலத்தில் இளம் கொலையாளி உருவாவதைத் தடுக்கும்.