நம்முடைய வாழ்வில் பால் மிக முக்கியமான பொருள். தேனீர் அருந்த பால் தேவை, காப்பி அருந்த பால் தேவை, எண்ணற்ற பருகும் பொருள்களுக்கு பால் தேவை. வெறும் பால் காலையில், இரவில் எல்லோரும் குடிக்கின்றனர். பால் மூலம் தயார் செய்யப்படும் பல பொருட்களை சாப்பிடுகிறோம். பாலிலிருந்து தயிர் கிடைக்கிறது, வெண்ணெய் கிடைக்கிறது, சீஸ் கிடைக்கிறது. மில்க் ஸ்வீட்ஸ் என்ற இனிப்புப் பண்டங்கள் கிடைக்கின்றன.
ஆனாலும் உலகில் எல்லோரும் பால் சாப்பிடுவதில்லை. பலருக்கு பால் ஒத்துக் கொள்வதில்லை. சில நாடுகளில் யாரும் பால் அருந்துவதில்லை. பலருக்கு பால் சாப்பிட்டால் வாந்தி, பேதி ஏற்படுகிறது. ஏன் இப்படி என்று அறிவியல் வல்லுனர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.
இதில் ஒரு ஆராய்ச்சி மிகவும் சுவையானது. பாலூட்டி இனத்தில் உள்ள தாய் மிருகங்களிடம்தான் பால் வருகின்றது. மனிதர்கள், நாய், பூனை, பன்றி, எலி, ஆடு, மாடு, ஒட்டகம், குதிரை என்று பல மிருகங்களில் உடலில் இருந்து வருகின்றன. அவை அனைத்திலும் பிறந்த குழந்தைகளுக்கு உணவாக பால் அமைகிறது. வளர்ந்து விட்ட பிராணிகள் பால் அருந்துவதில்லை. வயதான மிருகங்களிடம் இருந்தும் பால் வருவதில்லை.
பாலில் லாக்டோஸ் என்ற ஒரு வகைச் சர்க்கரை உள்ளது. இந்த லாக்டோஸை, ஆற்றலாக மாற்றுவதற்கு லாட்டேஸ் என்ற ஒரு எண்ணையும் நமது உடலுக்குத் தேவை. எல்லாப் பாலூட்டி இனங்களிலும் பிறந்த குழந்தைகளுக்கு லாக்டோஸ் அதிக அளவில் இருக்கும். அதனால் தான் சிறு குழந்தைகளுக்கு தாய்ப்பால் முக்கியமான உணவாகும். இரண்டு வருடங்களுக்குப்பின் லாட்டேஸ் அளவு குறைந்து விடும்.
இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினரும் பால் அருந்துகின்றனர். ஆனால் நமது முன்னோர்களால் குழந்தைப்பருவம் தாண்டி வளர்ந்தபின் பால் அருந்தியிருக்க முடியாது. மிருகங்களிடம் இருந்துபால் கறக்க ஆரம்பித்த பிறகுதான் சிலருக்கு பால் அருந்தும் திறன் அடைந்திருக்க வேண்டும். மனித வரலாற்றில் பால் அருந்தும் திறன் பெற்றது மிக முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. நம் முன்னோர்களுக்கு அது பெரும் வரப்பிரசாதமாக அமைந்திருக்க வேண்டும்.
நமது மரபணுக்களிலேயே ஒரு மாறுதல் ஒரு குறிப்பிட்ட காலத்தில் சிலருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். பாலை செரிக்கும் வகையில் மரபணு மாற்றமடைந்ததால்தான் நம்மால் எல்லா வயதிலும் பால் அருந்த முடிகிறது.
இவைபற்றி ஆராய்ந்த அறிவியல் வல்லுனர்கள் முதலில் உலகில் எந்தெந்தப் பகுதிகளில் பால் அருந்துகிறார்கள் என்று கணக்கிட்டனர். வடக்கு மத்திய ஐரோப்பாவில் எல்லோரும் பால் அருந்துகிறார்கள். ஆனால் ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா இங்கெல்லாம் பால் பொருட்களை மக்கள் தவிர்க்கிறார்கள்.
சமீபகால ஆராய்ச்சியில் மத்திய ஐரோப்பாவில் உள்ள ஹங்கேரியை சுற்றியுள்ள பகுதிகளில்தான் சுமார் 7500 வருடங்களுக்கு முன்னர்தான் முதன் முதலாக பால் அருந்தும் பழக்கம் தோன்றியிருக்க வேண்டும் என்று கணக்கிட்டுள்ளார்கள்.
மற்றுமொரு ஆராய்ச்சியில் சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் உபயோகித்த மண் சட்டிகளையும் பானைகளையும் இது சம்பந்தமாக ஆராய்ந்துள்ளார்கள். பால் கறப்பது இதற்கும் முன்னரே ஏற்பட்டிருக்க வேண்டும். பெண் இன மிருகங்கள் பெருமளவில் வைத்திருக்கப் பட்டிருந்தன என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஆனாலும் பால் அருந்தும் பழக்கம் 7500 ஆண்டுகளுக்கு முன்னர்தான் வந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.
பால் அருந்தாவிட்டாலும் பால் ஏன் கறக்கப்பட்டது? அப்படிக் கறந்தபால் எதற்கு பயன்படுத்தப்பட்டது? பால் புளிக்க வைத்து தயிர், வெண்ணையாக மாறும் போது அவற்றில் லாக்டோஸ் பெருமளவில் எடுக்கப்பட்டு விடுகிறது. எனவே இந்த பால்பொருட்களை எல்லோரும் உண்ணலாம்.
வெப்பமான நாடுகளில் பாலை புளிக்க வைத்து தயிர் பெறுவது மிகச் சுலபம். பானையில் பாலை ஊற்றி வெயிலில் வைத்து விட்டால் போதும், தயிர் உருவாகி விடும்.
பால் கறக்கும் பழக்கம் ஏற்பட்ட காலத்திலிருந்து சுமார் 2000 ஆண்டு பால் அருந்தாதவர்கள் ஏன் பிறகு ஏன் பால் அருந்த ஆரம்பித்தார்கள்? இதற்கு சரியான விடை இன்னமும் கிடைக்கவில்லை.
ஒரு விடை. பயிர்களும், மிருகங்களும் தொடர்ந்து கிடைப்பதில்லை. பால் தொடர்ந்து கிடைக்கக் கூடிய உணவு. பால் மிகவும் மலிவானது சக்திமிகுந்தது. குடி தண்ணீரை விடவும் ஆரோக்கியமானது.
பேரா.வி.முருகன்
இளைஞர் முழக்கம்
தொடர்பு முகவரி: 57/21, அருணோதயா காம்ப்ளக்ஸ் 2வது மாடி,ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, பெரியமேடு, சென்னை - 03.தொலைபேசி: 044-25611348ஆண்டு சந்தா: ரூ.75