Sunday, June 12, 2011

உலகின் முதல் மூளை ஆபரேஷன் !



பீஜிங் : நவீனமயமாகி விட்ட மருத்துவ உலகில் மூளை, இதயம் மற்றும் முதுகு தண்டுவடம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஒரு சில சிக்கலான அறுவை சிகிச்சைகள் இன்றளவும் சவாலாகவே உள்ளன. ஆனால், திபெத் மருத்துவர்கள் இந்திய மருத்துவர் கண்காணிப்பில் சுமார் 2900 ஆண்டுகளுக்கு முன்பே மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர் என்பது ஆச்சரியமான விஷயம்தான். அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட விதம் குறித்து மிகப்பழமையான த்ரிபித்தகா என்ற என்சைக்ளோபீடியாவில் விரிவாக விளக்கப்பட்டுள்ளதன் மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது.

பண்டைய திபெத்திய நூல்கள் குறித்த ஆராய்ச்சி மேற்கொண்டு வருபவர் திபெத் பல்கலைக்கழக மொழி மற்றும் இலக்கிய ஆராய்ச்சிப் பிரிவு தலைவர் கர்மா த்ரிமேலி. இவர் மேற்கொண்ட ஆய்வில்தான் இந்த தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 2,900 ஆண்டுகளுக்கு முன்பு சொகைல் என்ற இளம் இந்திய மருத்துவர் ஒருவரது கண்காணிப்பில் திபெத்திய மருத்துவக் குழுவினர் மேற்கொண்ட அறுவை சிகிச்சை குறித்து நூலில் விளக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு முன்பு அனைத்து உபகரணங்களையும் ஸ்டெர்லைஸ் செய்ய வேண்டியதன் அவசியத்தை சொகைல் விளக்கியுள்ளார். அது அறுவை சிகிச்சையின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொகைல் மிகச்சிறந்த மருத்துவ வல்லுநர் என்று தெரிவித்துள்ள த்ரிபித்தகா, முதன்முதலில் சொகைனின் திபெத்திய நண்பர் ஒருவர் தீவிர தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். எந்தவித சிகிச்சையும் பலனளிக்காத நிலையில் சொகைனின் அறிவுரை மற்றும் மேற்பார்வையில் அவருக்கு வெற்றிகரமாக மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. கங்க்யூர் மற்றும் தங்க்யூர் என்ற 2 பாகங்களை கொண்ட த்ரிபித்தகா, சமஸ்கிருதத்தில் இருந்து திபெத்திய மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது வல்லுநர்களின் கணிப்பு. பவுத்த மதத்தினரின் பண்டைய வாழ்வு முறைகளை இது விரிவாக விளக்குகிறது. இதில் மருத்துவ முறைகள், இலக்கணம், இலக்கியம், மொழி, கலை, கலாசாரம், ஜோதிடம் உள்ளிட்ட விளக்கங்களும் இடம்பெற்றுள்ளது.

பஞ்சபூதங்களை ஆதாரமாக கொண்டே திபெத்திய மருத்துவம் இருந்துள்ளது. சாக்கிய முனிவர் விளக்கிய சுமார் 440 மருத்துவ முறைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. இந்நூலில் உள்ள விளக்கங்களின் அடிப்படையிலேயே இன்றளவும் திபெத்திய மருத்துவர்களின் சிகிச்சை உள்ளது குறிப்பிடத்தக்கது. திபெத்தில் கிங்காய் பகுதியில் 1998ல் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் விரிந்த நிலையில் இருந்த மண்டை ஓடுகள் ஏராளமாக கண்டெடுக்கப்பட்டது. இவை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மூளை அறுவைசிகிச்சை நடந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments: