Saturday, June 11, 2011

PSF" அறிவியல் உருவாக்குவோம்" திட்டத்தில் சிறந்த 4 ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு

புதுச்சேரி அறிவியல் இயக்கம், பிரான்ஸ் நாட்டு பாரீஸ் பல்கலைக்கழகத்துடன் (தெற்கு-11) இணைந்து சர்வதேச அளவில் “அறிவியல் உருவாக்குவோம்’(Make Science) திட்டத்தை கடந்த ஐந்தான்டுகளாக புதுச்சேரியில் நடத்தி வருகிறது. 2011ம் ஆண்டிற்கான அறிவியல் உருவாக்குவோம் போட்டிக்கான ஆய்வறிக்கைகள் பெறப்பட்டு பிரான்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டது.

இதில் புதுச்சேரி அரசு பள்ளி மாணவ மாணவிகள் எழுதிய 12 ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன. தேர்வு செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளுக்கான ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டன. நிகழ்ச்சி கல்வித்துறை வளாகத்தில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் நடந்தது.
முதலியார்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அடுப்புக்கரி, இயற்கை உரம் மூலம் மண் தாவரம் வளரும் முறை குறித்து செய்த ஆய்வுக் கட்டுரை முதல் பரிசைப் பெற்றது. மண்ணில் வளரும் தாவரங்களுக்கு மண்ணுடன் அடுப்புக் கரி சேர்த்த கலவையின் மூலம் தாவர வளர்ச்சி மிகுதியாக உள்ளது என நிரூபிக்கப்பட்ட ஆய்வுக்கு முதல் பரிசாக 300 யூரோ டாலர் பரிசாக வழங்கப்பட்டது.
அதே பள்ளிக்கு எளிமையான முறையில் மண் பரிசோதனை செய்தல் தொடர்பான ஆய்வுக்கு இரண்டாம் பரிசாக 100 யூரோ டாலர் பரிசு வழங்கப்பட்டது. இப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர் அரவிந்தராஜா தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.
டி.கே.ஆர்.பி. கொரவெளிமேடு பள்ளி மாணவர்கள் “மூடாக்கு பயன்படுத்துவதால் மண்ணில் ஏற்படும் மாற்றங்கள்’ என்ற தலைப்பிலான ஆய்வுக்கு இரண்டாம் பரிசாக 100 யூரோ டாலர் பரிசாக வழங்கப்பட்டது. இப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.
லிசே பிரான்சே பள்ளியில் “இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு தீங்கில்லாத வாசனை திரவியம் தயாரிக்கும் முறை’ குறித்த ஆய்வை ஆசிரியர் கோவர்த்தன் மேற்பார்வையில் நடத்தப்பட்டது. இதற்கு 100 யூரோ டாலர் பரிசாக வழங்கப்பட்டது. முதல் பரிசு மற்றும் 3 இரண்டாம் பரிசுகளை பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் வழங்கினார்.
முதன்மை கல்வி அதிகாரி அனுமந்தன், சிறப்புப் பணி அலுவலர் கிருஷ்ணன், புதுச்சேரி அறிவியல் இயக்க துணைத் தலைவர் ஹேமாவதி, தட்சணாமூர்த்தி, சுதர்சன், சேகர், விஜயமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறிவியல் இயக்க செயலாளர் ரகுநாத் செய்திருந்தார்.

No comments: